ஒரே இடத்தில் சிக்கிய 19 ரௌடிகள்... வெப்பன் சப்ளையர்களும் கைதான பின்னணி!

தலைநகர் சென்னையில் ஒரே இடத்தில் பிரபல ரௌடிகள் 19 பேரைக் கொத்தாக அள்ளியிருக்கிறார்கள் போலீஸார். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வெப்பன் சப்ளையர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மொத்தம் நான்கு துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், பட்டாகத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன.

2023-ம் ஆண்டு, ஆகஸ்ட் 18-ம் தேதி சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷ் என்பவர் முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் `ஒற்றைக்கண்’ ஜெயபால், சொக்கலிங்கம், முத்துக்குமார் உள்ளிட்ட ரௌடிகள் கைதுசெய்யப்பட்டனர். 2023-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த இவர்கள், கடந்த 13-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டார்கள். பிறகு அவர்கள், வடசென்னையின் பிரபல ஏ ப்ளஸ் ரௌடியான `பாம்’ சரவணனை திருமங்கலத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் சந்திக்கப்போவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.

அவர்களைக் கண்காணிக்க மஃப்டியில் போன போலீஸார், “இங்கே ரௌடிகள் மாநாடே நடக்கிறது சார்” என்று அதிர்ச்சியுடன் தகவல் சொல்ல, உதவி கமிஷனர் ராயப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உட்பட ஏராளமான போலீஸார் துப்பாக்கியுடன் அந்த ஹோட்டலைச் சுற்றிவளைத்தனர். தப்பியோட முயன்றால், துப்பாக்கிகளைப் பயன்படுத்தவேண்டியிருக்கும் என்று எச்சரித்து அங்கிருந்த 19 ரௌடிகளைக் கொத்தாகப் பிடித்தார்கள் போலீஸார்.

இது குறித்து அதிதீவிர குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் விசாரித்தோம். “ஹோட்டலில் சிக்கிய 19 பேரில் அரக்கோணத்தைச் சேர்ந்த ‘ஒற்றைக்கண்’ ஜெயபால், நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்ற சுரேஷ், நெல்லை ராமன்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற மதன் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளையும், 14 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தோம். கைதான ஒற்றைக்கண் ஜெயபாலிடம் விசாரித்தபோது, முன்னாள் ரௌடிகள் சிலரிடமிருந்தே இந்தத் துப்பாக்கிகளை வாங்கியதாகப் பொய் சொன்னார்.


ஆனால், விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி தம்பிராஜன் தரப்புதான் இவர்களுக்கு வெப்பன் சப்ளையர் என்று தெரியவந்தது. தம்பிராஜன் கடந்த சில ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தபடி, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தார். பொறியாளரான இவர்மீது தமிழகம் முழுவதும் 5 கொலைகள், 6 கொலை முயற்சி வழக்குகள் எனச் சுமார் 15 குற்ற வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன. எட்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். இவர் பீகார் சிறையிலும் ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கிறார். சிறையில் கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதானவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

அதன் பிறகு பீகார் மாநிலத்திலேயே தலைமறைவாக இருந்துகொண்டு அங்கிருந்து கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி வந்து, சென்னையிலுள்ள ரௌடிகளுக்கு விற்று வந்திருக்கிறார் தம்பிராஜன். அவரை சென்னை அசோக்நகரில் வைத்து கைதுசெய்தோம். அவரிடமிருந்தும் ஏராளமான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தோம். மொத்தம் இந்த வழக்கில் நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ஏர்கன், 84 தோட்டாக்கள், 11 கத்திகள், ஐந்து சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல மற்றொரு வெப்பன் சப்ளையரான பீகார் இஸ்மாயிலையும் கைதுசெய்திருக்கிறோம். ஆனால், ‘ஒற்றைக்கண்’ ஜெயபால் உள்ளிட்டோர் சந்திக்கச் சென்ற, ‘பாம்’ சரவணன் தப்பியோடிவிட்டார். அவரையும் தேடிவருகிறோம்” என்றனர்.

யார் இந்த ‘பாம்’ சரவணன் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ‘பாம்’ சரவணன். இவரின் சகோதரரான ரௌடி தென்னரசுவுக்கும், வடசென்னையில் கோலோச்சிய ரௌடி ஆற்காடு சுரேஷுக்கும் இடையே மோதல் இருந்தது. அதில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியை ரௌடி தென்னரசு கொலைசெய்தார். அதற்குப் பழிவாங்க தென்னரசுவை ஆற்காடு சுரேஷ் டீம் கொலைசெய்தது.

ஆற்காடு சுரேஷைக் கொல்ல ‘பாம்’ சரவணன் முயன்றார். சுதாரித்துக்கொண்ட சுரேஷ், ஆந்திரா பக்கம் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சூழலில்தான் கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்துக்கு வந்த ஆற்காடு சுரேஷ், கூலிப்படையினர் மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் பாம் சரவணனுக்கு எதிராக ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும், ‘பாம்’ சரவணன்தான் கூலிப்படைகள் மூலமாக இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது. அது தொடர்பான ஆபரேஷனில்தான் ஹோட்டலில் 19 ரெளடிகள், வெப்பன் சப்ளையர்கள் தம்பிராஜன், இஸ்மாயில் ஆகியோர் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள்” என்றார் விரிவாக.

தலைநகர் சென்னையில் ஒரே நேரத்தில் 21 ரெளடிகளை துப்பாக்கிமுனையில் கைதுசெய்த தனிப்படை போலீஸாருக்கு, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டியிருக்கிறார்!

- நமது நிருபர்

ரெளடிகள் மீட்... காரணம் என்ன?

கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த வெற்றியைக் கொண்டாடவும், அடுத்த அசைன்மென்ட் பற்றிப் பேசவுமே ரெளடிகளெல்லாம் அந்த ஹோட்டலில் கூடியிருக்கிறார்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. `கேங்ஸ்டரான ‘பாம்’ சரவணனுக்கும், எண்ணூரைச் சேர்ந்த மற்றொரு கேங்குக்கும் இடையே கூலிப்படைக் கொலைகள் தொடங்கி, மாமூல் வசூலிப்பது வரையில் தகராறு இருந்திருக்கிறது. எண்ணூர் கேங்கின் கொட்டத்தை அடக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் பாடியநல்லூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரைக் காலிசெய்ய வேண்டும் என்று திட்டமிட்டே இந்த ரௌடிகள் மீட்டை நடத்தினார் ‘பாம்’ சரவணன்’ என்கிறது போலீஸ் வட்டாரம்.



from Vikatan Latest news https://ift.tt/4wb8CEt

Post a Comment

0 Comments