51 வயதில் மாதம் நாலு லட்சம் டர்ன் ஓவர் - ஆர்கானிக் பிசினஸில் அசத்தும் மகேஸ்வரி!

பணி, தொழில் என சுயவருமானம் பெற்றுள்ள பெண்கள், தாங்கள் பொருளாதார தன்னிறைவு பெற்றுள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தில் பங்களிக்கத் தொடங்கியிருக்கும் முன்னேற்றம், மிக முக்கியமானது. வரவேற்கப்பட வேண்டியது. அப்படியான பெண்களை அறிமுகப்படுத்தி, அங்கீகரித்து, மற்ற பெண்களுக்கும் அவர்கள் மூலமாகக் கடத்துவோம்.

மகளிர் தினம்

தான் பார்த்துவந்த அரசாங்க வேலையை விடுத்து, ஆர்கானிக் கடை  ஒன்றை தொடங்கி பிசினஸாக செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி. விவசாயிகளிடமிருந்து பொருள்களை வாங்கி, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வரும் மகேஸ்வரியின் மாத டர்ன் ஓவர் நான்கு லட்சம். தன் வெற்றிக்கதையை நம்மிடம் பகிர்கிறார் மகேஸ்வரி.

‘’படிப்பை முடிச்சதும் வருமானவரித்துறையில் சுருக்கெழுத்துப் பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். 20 வருடங்களில் அடுத்தடுத்து பதவி உயர்வு கிடைச்சு சேவை மற்றும் சரக்குத்துறையில் கண்பாணிப்பாளர் பதவிக்கு வந்தேன். ஒரு லட்சம்வரை சம்பளம் வாங்கினாலும், குழந்தைகளுக்கு கவனம் கொடுக்க முடியல, மனசுக்குப் பிடிச்ச சின்னச் சின்ன வேலைகளையும் செய்ய நேரம் இல்லாம ஓடிக்கிட்டே இருக்கிற மாதிரி இருந்துச்சு. 

crafts

அப்பதான்,  இயற்கை வாழ்வியல் குழுவினர் அறிமுகமானாங்க. அவங்க மூலமாக எனக்குத் தேவையான ஆர்கானிக் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்தில், இயற்கை உணவுகள் மீது ஆர்வம் அதிகமாகவே இதையே பிசினஸா பண்ணலாம்னு தோணுச்சு. வேலையைவிட முடிவெடுத்தேன். எனக்கு அப்போ 45 வயசு. கிட்டத்தட்ட 15 வருசம் சர்வீஸ் இருந்துச்சு. ஆனாலும் பிசினஸ்தான் எதிர்காலம்னு முடிவு எடுத்தேன்.

'அரசாங்க வேலையில் நிம்மதியா சம்பளம் வாங்குறதை விட்டுட்டு, பிசினஸ் பண்ணி என்ன சாதிக்கப் போறேன்’னு கேட்காத ஆளே இல்லை. ஆனா, பணத்தைவிட நம்முடைய சந்தோஷம் முக்கியம்னு தோணுச்சு. வெற்றியோ, தோல்வியோ ஒருமுறை போராடிப் பார்த்திடலாம்னு துணிஞ்சு என்னுடைய 45-வது வயதில் வேலையை விட்டுட்டு பிசினஸில் இறங்கினேன். என்னோட கரியர் 45 வயசுல ஆரம்பிச்சுதுனு சொல்லலாம். எல்லாருடைய எதிர்ப்பையும் மீறி பிசினஸை ஆரம்பிக்கும் போது ஜெயிக்கணுங்கிற ஒரு எண்ணம் மட்டும்தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. எந்த வயசுலையும் கனவு காணலாம், அதுக்காக போராடலாம்னு ஓட ஆரம்பிச்சேன்“ - துணிச்சல் முடிவின் பின்னணி சொல்லித் தொடர்கிறார்.

"இயற்கை வாழ்வியல் குழுவிலிருக்கும் விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கி, குறைந்த லாபம் வெச்சு, என்னுடைய பிராண்டை நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்னு பிளான் பண்ணேன். என் வீட்டின் ஒரு பகுதியை  கடை போல மாத்தினேன். மஞ்சள், அரிசி, கோதுமைனு அன்றாட தேவைகளை விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி 'எட்டர்னல் ப்ளிஸ்'ங்கிற என் பிராண்ட் மூலமா விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை பிடிக்கிறது கஷ்டமாதான் இருந்துச்சு. அப்புறம் தோழிகள், உறவினர்கள் கொடுத்த வாய்வழி விளம்பரம் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் தேடி வர ஆரம்பிச்சாங்க. வாடிக்கையாளர்களை தக்கவைக்க தொடர்ந்து தரத்தில் கவனம் செலுதுனேன். ஒவ்வொரு  பொருளையும் தரத்தை சோதித்து, அது உற்பத்தியாகும் இடத்திலிருந்தே வாங்கினேன். அதனால் என் பிராண்ட் பொருள்கள் தனித்துவமாக இருக்கும்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அடுத்தகட்ட வளர்ச்சியாக இணையதளம், இன்ஸ்டாகிராம்னு சோஷியல் மீடியா மூலமும் விற்பனை செய்யறேன். என்னைப் போன்ற பெண்களுக்கு உதவணும்னு,  கண்ணகி நகர், பெரும்பாக்கம், படப்பை, விழுப்புரம் போன்ற இடங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களில் தயார்செய்யும் பொடிவகைகள், சத்துமாவு கஞ்சி வகைகள், கலைப்பொருள்களை  விலைக்கு வாங்கி விற்பனை பண்றேன்.

மகேஸ்வரி

இப்போ வீட்டுக்கு தேவையான அடிப்படை உணவுப் பொருள்களில் ஆரம்பித்து கலைப்பொருள்கள் வரை 1000-க்கும் அதிகமான பொருள்களை  விற்பனை செய்யுறேன். கடையை பெரிதுபடுத்தியிருக்கேன். விவசாயிகள், அவங்க பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் என்கிட்ட தொடர்ந்து கொடுக்குறாங்க.

இப்போ எனக்கு 51 வயசு. பிசினஸ்ல இளம் தலைமுறைக்கு ஈடுகொடுத்து நானும் ஓடுறேன். பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பிச்ச பிசினஸ்ல இப்போ மாசம் நாலு லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் பார்க்க முடியுது. சம்பத்திக்கிறது மட்டுமில்ல, பிடிச்ச தொழில் மூலமா சம்பாதிக்கிறேங்கிறது கூடுதல் கர்வம்.

என்னை கேலி, கிண்டல் பண்ணவங்க இன்னும் விமர்சனத்தோட வாழுறாங்க.ஆனா, நான் என்னை நிரூபிச்சுட்டேன். எனக்காக நான் தொடர்ந்து போராடுவேன் ” - நிறைவோடு விடைபெறுகிறார் மகேஸ்வரி.

தொடர்ந்து முன்னேறுவோம்...



from Vikatan Latest news https://ift.tt/eN34xFM

Post a Comment

0 Comments