“மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் நிவாரணம் கிடைத்திருக்கும்” என்ற எடப்பாடியின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“அழுத்தம் கொடுப்பது என்று ‘பாதம்தாங்கி’ பழனிசாமி சொல்வது மோடியின் காலுக்கு அழுத்தம் கொடுப்பதையா... அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தாங்கள் செய்த ஊழல்களை மறைக்க ஒன்றிய பா.ஜ.க அரசு சொன்ன அனைத்தையும் கைகட்டி, வாய் பொத்தி கேட்டுச் செய்தவர்கள் தானே பழனிசாமி உள்ளிட்ட அடிமைகள்... அவர்களுக்கு தி.மு.க குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாட்டுக்கு உரிய வரிப் பங்கீட்டையும், நியாயமாகக் கிடைக்கவேண்டிய நிவாரணத்தையும் நாங்கள் கேட்கிறோம். தர மறுத்த நிதியமைச்சரைப் பார்த்து, ‘அதென்ன உங்கள் தோப்பனார் வீட்டுப் பணமா?’ என்றுகூடக் கேட்டுவிட்டோம். இதைவிட எப்படி அழுத்தமாகக் கேட்பது... ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து தமிழகத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணிக்கிறது. நமக்கு வரவேண்டிய அடிப்படையான விஷயங்களைக்கூடப் போராடிப் பெறும் நிலைதான் இருக்கிறது. ஒரு மாநில அரசாக ஒன்றிய அரசிடம் என்ன கேட்டுப் பெற வேண்டுமோ அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்துவருகிறது தி.மு.க அரசு. ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்த விஷயத்தில், தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது குரல் கொடுத்ததா... நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள்போல அமைதி காக்காமல், தி.மு.க உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதைத் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, நிவாரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல், ஜெயலலிதாவைப் புகழ்வதை ரசித்த கூட்டம், தி.மு.க-வை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது.”

பழ.செல்வகுமார், சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சி.டி.ஆர்.நிர்மல்குமார், சமூக ஊடகப் பிரிவு தலைவர், அ.தி.மு.க

“எங்கள் தலைவர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. இதே தி.மு.க-தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்புக்கொடி காட்டி, ‘கோ பேக் மோடி’ என்று நாடகமாடியது. ஆனால், இன்று பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் தடபுடல் ஏற்பாடுகள் செய்து, விழுந்து கும்பிட்டு, ‘வெல்கம் மோடி’ என்று சொல்லி அவருக்கு முழு மரியாதையைச் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. பிரதமர் டெல்லிக்குச் சென்ற பிறகு, `தமிழகத்துக்கு இது வேண்டும், அது வேண்டும்’ என்று மக்களை ஏமாற்ற, கடிதம் எழுதி நாடகம் நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். பிரதமரை நேரில் சந்திக்கும்போது நிவாரணத்தை அழுத்தமாகக் கேட்க மொத்தமாகத் தவறிவிட்டது தி.மு.க அரசு. நாடாளுமன்றத்தில் 38 எம்.பி-க்களை வைத்திருந்தும் தி.மு.க ஒரு முற்றுகைப் போராட்டத்தைக்கூட முன்னெடுக்கவில்லை. ஆனால், 2018-ம் ஆண்டு அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையை நடத்த முடியாத அளவுக்குக் கோரிக்கைகளை வலுவாக முன்வைத்தார்கள். உரிய முறையில் அழுத்தம் கொடுத்திருந்தால் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகை அனைத்தும் கிடைத்திருக்கும். கூட்டணிக் கட்சியிலிருந்தாலும், பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க அரசுடன் முரண்பட்டு கருத்துகளைப் பதிவுசெய்தது அ.தி.மு.க என்பது மறுக்க முடியாத உண்மை. உண்மையில், தமிழக மக்கள் குறித்து தி.மு.க-வுக்கு எந்தக் கவலையும் இல்லை. வெளியில் பா.ஜ.க-வை எதிர்க்கிறோம் என்று வேஷம் போட்டுக்கொண்டு, உள்ளே உறவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்று இந்த மூன்று ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியால் தமிழகத்துக்கு எந்தவொரு நன்மையையும் நடக்கவில்லை.”



from Vikatan Latest news https://ift.tt/ulbTAvD

Post a Comment

0 Comments