மிஸ்டர் மியாவ்

சமந்தா மீண்டும் தமிழுக்கு வருகிறார். என்னதான் பாலிவுட், தெலுங்கு எனக் கொடிகட்டிப் பறந்தாலும், தமிழில் அட்டகாசமான ஒரு படத்தைக் கொடுத்து அசத்த வேண்டும் என நினைக்கிறாராம் சமந்தா. ‘ஹீரோயின் சார்ந்த கதையாக இல்லாமல், பக்கா மாஸ் கதையாக இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறாராம். தமிழின் அத்தனை முன்னணி ஹீரோக்களும் சமந்தாவுடன் ஜோடி போடக் காத்திருக்க, அவர் யார் பெயரை `டிக்’ செய்யப்போகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ்.

‘இப்போதெல்லாம் ஓடிடி நிறுவனங்களைச் சார்ந்துதான் படங்களின் ரிலீஸைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது’ எனப் புலம்புகிறார்கள் சினிமா உலகத்தினர். நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித், இது குறித்த வேதனைகளைப் பொதுமேடையிலேயே போட்டுடைத்து, ஓடிடி ஒப்பந்தங்கள் அமையும் முன்னரே படங்களை ரிலீஸ் செய்து காட்டினார். சமீபத்தில் ‘Jபேபி’ படத்தையும் அப்படித்தான் ரிலீஸ் செய்தார். இதே பாணியில், தான் நடித்த படங்களையும் ஓடிடி ஒப்பந்தங்களுக்காகக் காத்திருக்காமல் தைரியமாக ரிலீஸ் பண்ண முன்வந்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகும் ‘ரோமியோ’ படம் ஓடிடி ஒப்பந்தத்துக்கு முன்னரே ரிலீஸாகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசனும் சமுத்திரகனியும் இணைந்து நடிக்கும் ‘அரிசி’ படம், போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கிறது. விவசாயம் சார்ந்த அழுத்தமான பதிவாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டதைப் படத்துக்கான மிகப்பெரிய மைலேஜாகப் பார்க்கிறார்கள். முத்தரசன் கேட்டுக்கொண்டதால் சம்மதம் சொன்னதோடு மட்டுமல்லாமல், மிகக் குறைவான சம்பளத்துக்கும் ஒப்புக்கொண்டாராம் ஞானி.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி, கிடைத்த இடைவெளியில் தனுஷிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறாராம். ‘அமரன்’ படத்தைச் சொன்ன தேதிகளில் முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்த வகையில், ராஜ்குமார் பெரியசாமி மீது தயாரிப்புத் தரப்பு கடுப்பில் இருக்கிறதாம். ஆனாலும், கதை சொன்ன விதத்தில் ராஜ்குமாரை ஓகே செய்திருக்கும் தனுஷ், ‘இளையராஜா’ படத்தை முடித்த பிறகு தேதி கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்.

ஒரே நேரத்தில் ஐந்து படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு, அதற்கான கதைகளைக் கேட்க தன் வாரிசையே நியமித்தார் மதுரைக்கார ஃபைனான்ஸியர். ஆனாலும் ஒரு படம்கூட ஸ்டார்ட் ஆகவில்லை. வருமான வரித்துறையின் நெருக்கடியே காரணம் என்கிறார்கள் விவரப்புள்ளிகள்!



from Vikatan Latest news https://ift.tt/7mPfzyp

Post a Comment

0 Comments