ஒன் பை டு

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“ `இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராகத் திகழ்வது எந்த மாநிலம்?’ என்று கேட்டால், பச்சை குழந்தைகூட பட்டெனச் சொல்லும், `அது குஜராத்தான்’ என்று. நாட்டில் போதைப்பொருள்கள் அதிகம் பிடிபட்டிருக்கும் 21 மாநிலங்களைப் பட்டியலிட்டால், அவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க-வே ஆட்சி செய்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை, ஒன்றிய பா.ஜ.க அரசு கொடுத்த புள்ளிவிவரங்களே சொல்கின்றன. அதிலும் உச்சபட்சமாக, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. அவையனைத்தும் மோடியின் நண்பரான அதானியின் முந்த்ரா துறைமுகம் வழியாகவே இந்தியாவுக்குள் நுழைகின்றன. ஆக, யாருடைய ஆட்சியில் இந்தியா போதைப்பொருள் வர்த்தகத் தளமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். தனிநபர்கள் குற்றச்செயலில் ஈடுபடும்போது பா.ஜ.க-வைப்போல அவர்களைக் காப்பாற்றும் இயக்கமல்ல தி.மு.க. யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனது அரசியல் லாபத்துக்காகத் தமிழ்நாட்டின் மீது பொல்லாத பழியைச் சொல்லி, அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தமிழக மக்கள் மத்தியில் பல பொய்களைச் சொல்லி, ஏற்கெனவே அவர் அம்பலப்பட்டவர்தான்.”

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

“முழுக்க முழுக்க உண்மையான கருத்து. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது. கஞ்சாவைத் தாண்டி, புதிய புதிய போதைப்பொருள்களெல்லாம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை நுழைந்திருக்கின்றன. ஏற்கெனவே குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள், இந்த போதைப்பொருள்களால் மேலும் நாசமாகிவருகிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசு தன் கடமையிலிருந்து தவறிவிட்டது. ஏற்கெனவே விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்த சம்பவத்தில், தி.மு.க நிர்வாகிகளின் பெயர்களோடு அமைச்சர் ஒருவரின் பெயரும் அடிபட்டது. இப்போது தி.மு.க-வில், அயலக அணியின் மாவட்டப் பொறுப்பிலிருந்த ஜாபர் சாதிக் என்பவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மூளையாக இருந்திருப்பதைச் சுட்டிக்காட்டித்தான், இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. ஆக, தி.மு.க-வினர்தான் மாநிலம் முழுக்கப் பரவியிருக்கும் போதைப் பழக்கத்துக்குக் காரணம். காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் மக்கள் தி.மு.க-வுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.”



from Vikatan Latest news https://ift.tt/LS7xgud

Post a Comment

0 Comments