கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது மேலப்பாளையம். இந்த ஊராட்சியில் உள்ள வடக்குபாளையம் குமரன் லேஅவுட் குடியிருப்பைச் சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என கருப்புக் கொடி கட்டி, போராட்டம் செய்வதாக அறிவித்தனர். தெரு முகப்பில் சாமியானா பந்தல் அமைத்து, போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்களைச் சந்தித்து பேசினோம்.
"கரூர் மாநகராட்சிப் பகுதிக்கு அருகில் உள்ள மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள வடக்குபாளையம் கிராமத்தில் குமரன் லே அவுட் குடியிருப்பில், கடந்த 9 வருடங்களில் 100 குடும்பங்களுக்கு மேல் புதிதாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். மேலப்பாளையம் ஊராட்சி சார்பில் கழிவு நீர் வடிகால் வசதி, குடிநீர் சீராக வழங்க வேண்டும், குப்பைகளை முறையாக பெற்று குடியிருப்பு பகுதிக்குள் இருந்து அகற்ற வேண்டும், மண்சாலைகளை சிமெண்ட் சாலைகளாகவோ அல்லது தார் சாலைகளாகவோ மாற்றித் தர வேண்டும் என்ன பலமுறை கோரிக்கை வைத்தோம்.
ஆனால், அவற்றை யாரும் நிறைவேற்றவில்லை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்து போராட்டத்தை அறிவித்தோம். அப்போது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மற்றும் அரசு அதிகாரிகள் எங்களை சந்தித்து, எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துச் சென்றனர். அதனால், அப்போது போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், அதன்பிறகு எங்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை யாரும் நிறைவேற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில், எங்களின் தொடர் கோரிக்கைகள் காரணமாக இதற்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபுசங்கர், எங்கள் பிரச்னைகளை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் நீர்நிலை தேக்கதொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதோடு, உத்தரவும் போட்டார்.
ஆனால், அதிகாரிகள் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல், காலதாமதப்படுத்தி வருகின்றனர். நகர்ப்புறங்களில் வசித்து வந்த போது நல்ல தூய்மையான காற்று கிராமப்புறங்களில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், வடக்குப்பாளையம் கிராமத்தை தேர்வு செய்து, இங்குள்ள குடியிருப்புகளில் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால், இங்கு அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக போராடட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். கடந்த முறை போராடிய போது, இரண்டு தெருக்களுக்கு மட்டும் பெயரளவில் மட்டும் சாலை அமைத்து, ஊராட்சி நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றியது போல கணக்கு காண்பித்துள்ளது" என்றார்கள்.
இதற்கிடையில், இந்த பகுதி மக்களின் போராட்டம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மேலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா, பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பொதுமக்கள் உறுதிபட தெரிவித்தனர். அவரிடம் உப்புச்சுவை நிறைந்த தாங்கள் பயன்படுத்தும் நீரை, 'ஒரு மொரடு குடிச்சுப் பாருங்க...அப்புறம் தெரியும் எங்க கஷ்டம்' என்று வலியுறுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலரும் அந்த நீரை பருகியபிறகு, 'உப்புத்தன்மையாக தான் உள்ளது.
இப்போதுதான் நான் இங்கு பணிக்கு வந்துள்ளேன். விரைவில் உங்கள் பிர்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்' என்று சொன்னார். ஆனால், போராட்டத்தில் இருந்த மக்கள், 'ஒரு வாரத்தில் தண்ணீர் டேங்க் அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும்' என்று சொன்னார்கள். அதைக் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், 'உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து, 'எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் போராடமாட்டோம். ஆனால், அதுவரை தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு சம்பந்தமான இந்த பதாகைகள் அப்படியே இருக்கும்' என்று தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/GNWsnK7
0 Comments