'சென்னைக்கு எதிராக எங்களின் ஆட்டம் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் கூடுதல் ஆக்ரோஷத்தோடு ஆடப்போகிறோம்.' போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் டெல்லியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இப்படி பேசியிருந்தார். ரிக்கி பாண்டிங் பேசியதை டெல்லி வீரர்கள் களத்தில் செய்துகாட்டியிருக்கின்றனர்.
டெல்லி வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் சென்னை Vs டெல்லி போட்டி கடைசி வரை பரபரப்பாக சென்று திரில்லாக முடிந்திருக்கிறது. டெல்லி வென்றிருக்கிறது.
'இது ஒரு நல்ல விக்கெட் பேட்டிங் ஆட வசதியாக இருக்கும். அதனால் முதலில் பேட்டிங் செய்து நல்ல டார்கெட்டை செட் செய்து டிபண்ட் செய்வோம் என நம்புகிறேன்.' என டெல்லியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸில் பேசியிருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்தப் போட்டியில் டெல்லியின் பேட்டிங் நன்றாக இருந்தது. பிரித்திவி ஷா லெவனுக்குள் வந்திருந்தார். டேவிட் வார்னருடன் அவர்தான் ஓப்பனராக இறங்கியிருந்தார். முதல் 4 ஓவர்களில் சென்னை அணியின் பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். ஆனால், அதன்பிறகு டேவிட் வார்னர் நல்ல டச்சுக்கு வர ஆரம்பித்தார். தொடர்ச்சியாக பவுண்டரிகளை அடித்தார். பவர்ப்ளே முடிந்த பிறகு பிரித்திவி ஷாவும் நல்ல டச்சுக்கு வந்தார்.
அணியின் ஒரே ஸ்பின்னராக இருந்த ஜடேஜாவைன் குறிவைத்து அட்டாக் செய்தனர். முஷ்டபிஜூர் ரஹ்மானின் ஓவரிலெல்லாம் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை பிரித்திவி அடித்திருந்தார். இருவரும் ரன் வேகத்தை அதிகப்படுத்தினர். அரைசதத்தை கடந்து முஷ்டபிஜூரின் பந்தில் ரிவர்ஸ்வீப் ஆட முயன்று ஷார்ட் தேர்டு மேனில் நின்ற பதிரனாவிடம் கேட்ச் ஆனார். இந்த சீசனின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்றாக அதுவும் கட்டாயம் இருக்கும். ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் பிரித்திவியும் எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் ஆனார். 104 கி.மீ வேகத்தில் வழக்கத்தை விட வேகமாக அவர் வீசிய பந்தை கட் அடிக்க முயன்று பிரித்திவு ஏமாந்தார்.
சென்னை அணியின் பௌலிங்கின் ஹைலைட் பதிரனா வீசிய இரண்டு யார்க்கர்கள். இரண்டுமே ஒரே ஓவரில் ஸ்டம்ப்பை துளைத்தன.
முதலில் 150 கி.மீ வேகத்திலான யார்க்கர் மார்ஷின் மிடில் ஸ்டம்ப்பை தகர்த்தது. அடுத்து 149 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தில் ஸ்டப்ஸிம் ஸ்டம்புகளும் சிதறின. டெல்லி இன்னிங்ஸின் பெரிய பாசிட்டிவிட்டி ரிஷப் பண்ட். மீள்வருகைக்கு பிறகு இந்தப் போட்டியில் முதல் முறையாக அரைசதம் அடித்திருந்தார். முதலில் மெதுவாகத்தான் ஆடியிருந்தார். இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில்தான் அதிரடி காட்டி அரைசதத்தை நோக்கி நகர்ந்தார். ரிஷப் பண்ட்டின் ஆட்டம் டெல்லி அணியை 191 ரன்களை நோக்கி நகர்த்தியது. 'இது ஒரு போதுமான ஸ்கோர்தான். ஆனாலும் 200 ஐ தாண்டியிருக்கலாம்.' என அரைமனதாக கூறி சென்றார் டேவிட் வார்னர்.
டெல்லி அணியின் பேட்டிங்கை போலவே பௌலிங்கும் வழக்கத்தை விட ஒழுங்காக இருந்தது. ஓப்பனர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் கலீல் அஹமது வீழ்த்திக் கொடுத்திருந்தார். ருத்துராஜ் டெஸ்ட் மேட்ச் லெந்தில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். ரச்சின் டாட்களாக ஆடி அழுத்தம் கூடியதில் ஒரு ஷார்ட் பாலில் அரைகுறையாக ஆடி அவுட் ஆனார். பவர்ப்ளேயில் சென்னஜ் அணி திணறியது. ரன்ரேட் 6 க்கும் கீழ்தான் இருந்தது. அணியை சரிவிலிருந்து மீட்டது ரஹானேதான். டேரில் மிட்செல்லை ஒரு முனையில் நிற்க வைத்து விட்டு இன்னொரு முனையில் ரன் வேகத்தை எகிறவைத்துக் கொண்டிருந்தார். ரஹானேவின் ஆட்டம் கொஞ்சம் காப்பாற்றினாலும் சிஎஸ்கேவின் மீது அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது.
ரிஸ்வி, துபே, மிட்செல் எல்லாம் அவுட் ஆக கடைசி 5 ஓவர்களில் 79 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலுக்கு ஆட்டம் நகர்ந்தது. தோனியும் ஜடேஜாவும் க்ரீஸில் நின்றனர். இந்த சீசனில் தோனியின் முதல் பேட்டிங் வருகை இதுதான். எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரியோடு தொடங்கினார். முகேஷ் குமார் வீசிய அந்த ஓவரில் தோனி இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்தார். கலீல் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர். தோனிக்கு ஒயிடு யார்க்கராக வீச முயன்று ஒயிடாக வீசிக்கொண்டிருந்தார். டீப் தேர்டுமேன் டீப் பாய்ண்ட் என ஒயிடு யார்க்கருக்கு ஏற்ற பீல்ட் செட்டப். அதை முறியடித்து கவர்ஸில் அந்த சிக்சரை அடித்தார் தோனி.
இப்போது இரண்டு ஓவர்களில் 46 ரன்கள் தேவை. பெரிய இலக்கு. பெரிய சவால். இரண்டாவது பந்திலேயே தோனி ஸ்ட்ரைக்குக்கு வந்துவிட்டார். முகேஷ் குமாரின் இந்த ஓவரில் தோனி பந்துகளை பறக்கவிட்டு வெற்றியை நோக்கி அழைத்து செல்வார் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்காமல் சிங்கிள்களை தவிர்த்தவர் அந்த ஓவரில் பவுண்டரியே அடிக்கவில்லை. வெறும் 5 ரன்கள் மட்டுமே வந்தது. சென்னை அணியின் தோல்வியும் உறுதியானது. மேட்ச் கையைவிட்டு சென்ற பிறகு நோர்கியாவின் கடைசி ஓவரில் சில வாணவேடிக்கைகளை தோனி காட்டினார். கடைசி பந்தில் சிக்சரோடெல்லாம் முடித்தார். அவை சில ஆயிரங்கள் கொடுத்து வந்த ரசிகர்களை குஷிப்படுத்தியதே தவிர அணியை வெற்றியை நோக்கி நகர்த்தவில்லை. தோனி 200+ ஸ்ட்ரைக்கில் நன்றாகவே ஆடியிருந்தார். ஆனால், பவர்ப்ளேயிலும் மிடில் ஓவர்களிலும் இந்த முறை சிஎஸ்கே சறுக்கிவிட்டது.
மலைபோல நம்பப்பட்ட ஓப்பனர்கள் இருவரும் சொதப்பினர். மிடில் ஓவர்களில் சிக்சர் மணி ஒன்றுமே செய்யவில்லை. விளைவு, டெல்லிக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. சிங்கங்களும் அவ்வபோது அடி வாங்கதான் செய்யும். ஆனாலும், சிஎஸ்கே ரசிகர்களிடம் துளி கூட சோகமில்லை. அதான் அவர்களின் தல கலக்கிவிட்டாரே!
from Vikatan Latest news https://ift.tt/e5U6sEW
0 Comments