பாதி தொடர் முடிந்துவிட்டது. புள்ளிப்பட்டியலைப் பார்த்தாலே சென்னைக்கு இது எவ்வளவு முக்கியமான போட்டி என்பது புரிந்துவிடும். ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் பிளே-ஆஃப் சுற்றை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அந்த அணிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட வேண்டுமெனில் இரண்டு அணிகளுக்குமே இந்தப் போட்டியில் வெற்றி அவசியம்!
லக்னோவில் தோற்றிருந்தாலும் மீண்டும் சென்னைக்கு வந்ததில் கிடைத்த புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் களம்கண்டார் கேப்டன் ருத்து. ஆனால், டாஸில் அவரது துரதிர்ஷடம் தொடர்ந்தது. இந்த சீசனில் ஏழாவது முறையாக டாஸைத் தோற்றார். 'டாஸ் ஜெயிப்பதற்கு நான் எதாவது செய்தே ஆக வேண்டும்' என அவரே அதுகுறித்து ஜாலியாக கமென்ட் அடித்தார். பனிப்பொழிவு இருக்கும் மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் பிடிப்பதில் மகிழ்ச்சி என பேட்களை கட்டி கீப்பிங் பிடிக்கத் தயாரானார் ராகுல். டாஸிலேயே 15-20 ரன்கள் அனுகூலத்தை லக்னோ பெற்றுவிட்டதென கமென்ட்ரியில் இயன் பிஷப் சொல்ல, தொலைக்காட்சிகளில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த சென்னை ரசிகர்களை பதற்றம் தொற்றிக்கொண்டது. மைதானத்திலிருந்த ரசிகர்களோ தோனி கால்பந்து ஆடுவதை ஆர்ப்பரித்து ரசித்துக்கொண்டிருந்தனர்.
சென்னை கோப்பையை வென்ற ஆண்டுகளை எடுத்து பார்த்தால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் பெரும் பங்களிப்பை அளித்திருக்கும். அது இம்முறை மிஸ்ஸிங். ரச்சின் ரவீந்திராவை நீக்கிவிட்டு மீண்டும் அந்தப் பொறுப்பை தன் தோள்களில் போட்டுக்கொண்டார் ருதுராஜ். ஆனால், அவராலும் ஓப்பனிங்கைக் காப்பாற்ற முடியவில்லை. முதல் ஓவரிலேயே மேட் ஹென்றி பந்துவீச்சில் ராகுலுக்கு கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் ரஹானே.
இந்த சீசனில் கீப்பர் ஒருவர் பிடித்ததில் சிறந்த கேட்ச்சாக கடைசி வரை போட்டிப் போடும் இந்த கேட்ச். நம்பர் 3-ல் வந்தாலும் மிட்செல் ஆட்டத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. அவரும் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மீண்டும் பவர்பிளேயிலேயே களமிறக்கப்பட்டார் ஜடேஜா. அவரும் ரன்களைக் குவிக்கத் திணறினார்.
ஆனால், மறுபுறத்தில் `அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள், தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு' என ஜாலியாக பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார் ருத்துராஜ்.
பவர்ஹிட்டிங்குக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படும் இன்றைய சூழலில் சிக்ஸர்களே அடிக்காமல் 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தார் அவர். எல்லாம் ஷிவம் துபே வரும் வரைதான். அவர் வந்ததும் அடுத்த கியருக்கு மாறியது சென்னை அணி. இருவரும் பாரபட்சமின்றி பௌலர்களை அனைத்து திசைகளிலும் அடித்து துவம்சம் செய்ய இந்த பிட்ச்சில்தான் ஜடேஜாவும் மிட்செலும் ஆடினார்களா என்ற சந்தேகம் நமக்கு வந்தது. தான் சந்தித்த 45-வது பந்தில் முதல் சிக்ஸரை அடித்தவர் அதற்குப் பிறகு இரண்டு சிக்ஸர்கள் அடித்து தனது சதத்தை நிறைவுசெய்தார். துபே 27 பந்துகளில் 66 ரன்களை அடித்து அசத்தினார்.
மக்கள் உணர்வை எடுத்துக்காட்ட கடைசி ஓவருக்கு முன்பு `நீ வருவாயனே' பாடலைப் போட்டார் DJ. அனைவரும் காத்திருந்த அந்தத் தருணமும் வந்தது. தனக்குக் கிடைத்த ஒரு பந்தில் பவுண்டரி ஒன்றை தோனி அடிக்க 210 என்ற ஸ்கோரை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
பௌலிங்கிலும் சிறப்பாகவே தொடங்கியது சென்னை. கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய டிகாக் விக்கெட்டை முதல் ஓவரிலேயே தீபக் சஹார் வீழ்த்தினார். கே.எல்.ராகுல் நல்ல டச்சில் இருந்தாலும் அவரும் முஸ்தபிஸூர் வீசிய ஐந்தாவது ஓவரில் அவுட்டாக, பெருமூச்சுவிட்டனர் சென்னை ரசிகர்கள். ஆனால், அவுட் ஆஃப் சிலபஸாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் வந்து அதிரடி காட்டினார். சென்னையின் நம்பிக்கையை அப்போது காத்துக்கொண்டிருந்தது களத்தில் இருந்த தேவ்தத் படிக்கல்தான். முதல் இன்னிங்ஸில் ஜடேஜா ஆடிய இன்னிங்ஸுக்கு ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தார் மனிதர். ஸ்டாய்னிஸ் ருத்துராஜ் ஆட்டத்துக்கு ஈடுகட்டிக் கொண்டிருந்தார். 19 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே அடித்த படிக்கல், பதிரனாவின் வேகப்பந்து வீச்சில் போல்டாக, துபே இன்னிங்ஸை ஆட வந்தார் பூரான். பதிரனா சிறப்பாகப் பந்துவீசினாலும் ஷர்துல், துஷார், முஸ்தபிஸூர் ஓவர்களில் ரன்கள் கசிந்தன. டாஸில் பயந்தது போலவே இறுதியில் பனிப்பொழிவுதான் வில்லனாக வந்து நின்றது. போட்டி கொஞ்சம் கொஞ்சமாக லக்னோ பக்கம் திரும்பியது.
இக்கட்டான சூழலில் மீண்டும் சென்னைக்காக மாயாஜாலம் நிகழ்த்தினார் பதிரனா. பூரான் விக்கெட்டை அவர் வீழ்த்த மீண்டும் சமநிலைக்கு வந்தது போட்டி. ஆனால் ஸ்டாய்னிஸ் ஓய்வதாக இல்லை. சதத்தை நிறைவு செய்தார். இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் தேவை. 19-வது ஓவரை வீச வந்தார் பதிரனா. ஆனால் அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தீபக் சஹார் மிஸ்-ஃபீல்டில் பவுண்டரியை நழுவ விட, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. டிபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் என்றாலும் பனிப்பொழிவால் ஈரப்பதம் மிகவும் அதிகமாக இருந்தது. முஸ்தபிஸூரால் எதுவுமே செய்ய முடியவில்லை. நோ-பால் ஒன்றையும் அவர் வீச, எளிதில் இலக்கை எட்டியது லக்னோ. 63 பந்துகளில் 124 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஸ்டாய்னிஸ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி தனக்குக் கொடுத்த அறிவுரை பற்றிக் கூறியிருப்பார் ஸ்டாய்னிஸ். "இக்கட்டான சூழலில் அனைவரும் நான் என்ன வித்தியசாமாகச் செய்ய முடியும் என்று யோசித்துகொண்டிருப்பார்கள். அனைவரும் அப்படி யோசிக்கும்போது, மாறாமல் நமக்குத் தெரிந்ததை சிறப்பாக செய்தாலே போதும் என்றார் தோனி. அதுதான் அவரைத் தனித்துவமானவராக ஆக்குகிறது" என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இன்று தோனியின் முன்னிலையிலேயே அந்த அணுமுறையால் வெற்றி கண்டிருக்கிறார். சேஸிங்கில் அடிக்கப்பட்ட மிகச் சிறந்த சதங்களில் ஒன்றாகக் காலத்துக்கும் நிலைத்துநிற்கும் அவரது இந்த இன்னிங்ஸ்!
from Vikatan Latest news https://ift.tt/51z6keF
0 Comments