மேகலையின் காதலுக்கு மாமாதான் குலசாமி..! | ரெட்ரோ காதல் கதைகள் - 5

டிகனமான பெரிய சைஸ் இண்டேலியம் பாத்திரத்தை கேஸ் ஸ்டவ்ல ஏத்தி, பத்து லிட்டர் பாலை ஊத்தி, அது பொங்கினதும் தீயைக் குறைச்சி மரக்கரண்டியால கிளற ஆரம்பிச்சா மணிமேகலை. ஒரு நிமிஷம் கை சோர்ந்து கிண்டுறதை நிறுத்தினாலும் அடிப்பிடிச்சிடும். திரட்டுப்பால்ல தீய்ஞ்ச வாடை வந்துடும். மாமாவுக்கும் அந்த வாடை பிடிக்காது... மகளுக்கும் அந்த வாடை பிடிக்காது... இன்னிக்கு மாமா வர்ற நாள். வீடு நிறைய பொறந்த வீட்டு ஆளுங்க, புகுந்த வீட்டு ஆளுங்க இருந்தாலும் மாமா வந்தாதான் வீடு நிறையும். மாமாவை நினைக்கையில் மனசுக்குள்ளும் பால் பொங்கியது மணிமேகலைக்கு. அவர் மட்டும் அன்னிக்கு அப்படியொரு முடிவு எடுக்கலைன்னா, அவளுக்கு குமரனும் கிடைச்சிருக்க மாட்டான். தர்ஷினியும் கிடைச்சிருக்க மாட்டா. அவளைப் பொறுத்தவரைக்கும் மாமாதான் குலசாமி.

* * * * *

ருசா வருசம் கடைசி பரீட்சை முடிச்ச அன்னிக்கே பாட்டி வீட்டுக்கு பஸ்ஸை பிடிச்ச காலம் அது. மணிமேகலையும் அப்படித்தான். பிளஸ் டூ எக்ஸாம் முடிஞ்ச அன்னிக்கும் பாட்டி வீட்டுக்கு அப்படித்தான் பஸ் பிடிச்சா. ’இந்த வருஷம் காலேஜ்ல சேர்ற வேலை இருக்குடி. ஊருக்குப் போக வேணாம்டி’ங்கிற அக்காவோட சத்தத்துக்கு காதே கொடுக்காம பேக் பண்ணிக்கிட்டிருந்தவளை, அப்பாவும் அதே வார்த்தைகளைச் சொல்லி தடுக்கப் பார்த்தார். ம்ஹூம்... இந்த விஷயத்துல மணியை யாராலும் தடுக்க முடியாது. மணியின் அம்மா, வாய்க்குள்ளயே சிரிப்பை அடக்கிக்கொண்டாள். ஆனா, மனசு மட்டும் ‘தன் பொறந்த வீட்டு சொந்தத்தை இவ மூலமாவது தொடரணும்’கிற ஆசையில படபடன்னு அடிச்சிக்கிச்சு.

Retro love stories

மணியை பாட்டி வீட்டுக்கு ஈர்க்கிறது பாட்டியோ, தாத்தாவோ கிடையாது. தாய்மாமா ஆறுமுகம்தான். ‘மேகலா’ன்னு அவர் வாய் நிறைய கூப்பிட்டாலே மணிக்கு றெக்கை முளைச்சிடும். அவரைவிட மணியோட அம்மா பத்து வயசு இளையவங்க. அதனாலயே தங்கச்சியை மக மாதிரி பார்த்துக்கிட்டாரு. தங்கச்சிக்கு அப்புறம்தான் தன் கல்யாணம்னு இருந்தவரை மொத்த ஊரும் புத்தி சொல்லித்தான் மணவறையில உட்கார வெச்சுது. தங்கச்சிக்கு சென்னையில இருந்து வரன் வந்தப்போ, ’ராத்திரி திருச்சியில பஸ் ஏறினா காலையில பட்டணத்து மண்ணை மிதிச்சிடலாம்’னு சொந்தக்காரங்க தேத்தின பிறகும், அரை மனசா தான் சம்மதம் சொன்னாரு. தங்கச்சிக்கு ரெண்டு பொண்ணுங்க பொறந்தப்போ மனுஷன் பாசத்தாலயும் சீர்வரிசையாலயும் ஊரையே மூக்கு மேல விரலை வைக்க வெச்சாரு. தன்னோட மூத்த மவனுக்கு தங்கச்சியோட மூத்த மவளை கட்டி வெச்சி சொந்தத்தைத் தொடரணும்னு மனசுக்குள்ள அம்புட்டு ஆச. மணியோட அம்மாவுக்கு மட்டுமில்ல, அப்பாவுக்குக்கூட தன் மச்சானோட மனசுல இருக்கிற ஆசை தெரியும். ஆனா, விருப்பம்தான் இல்ல. ’மூத்தவனுக்கு படிப்பு வரல. இளையவனோ இப்போ தான் காலேஜ் கடைசி வருஷம் படிக்கிறான். நம்ம மூத்த பொண்ணு நல்லா படிக்கிற புள்ள. அவளைவிட படிச்சவனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சா தான் அவ வாழ்க்கை நல்லாயிருக்கும். என்னதான் நிலம், நீச்சுன்னு வசதியா இருந்தாலும் மெட்ராஸ்ல பொறந்து வளர்ந்த பொண்ணை ஊர்ல கட்டிக்கொடுக்க முடியுமா... பொண்ணு கேட்டு வந்தா முடியாதுன்னு சொல்லிட வேண்டியதுதான். பொண்டாட்டி கண்ணைக் கசக்கினா சமாதானம் சொல்லிக்கலாம்’கிற தீர்மானத்துல இருந்தாரு. ஆனா, காலம் என்ன திட்டம் போட்டு வெச்சிருக்குன்னு அது நடக்கிற வரைக்கும் தெரியாதே...

தங்கச்சியும் மருமவ மணிமேகலையும் பஸ்ஸை விட்டு இறங்கினதை, தூரத்துல இருந்தே பார்த்துட்டாரு ஆறுமுகம். ஓடி வந்து பொட்டியை வாங்கி கூட்டு வண்டியில வெச்சுக்கிட்டு ஊரை நோக்கி விரட்ட ஆரம்பிச்சாரு. மாமா வீட்டுக்கு வர்ற கடைசி சம்மர் ஹாலிடே இதுதான்கிறது அப்போ மணிக்கு தெரியாது.

Retro love stories

மாமா பையன், அத்தைப்பொண்ணு காதல்களை, 'இதெல்லாம் லவ்வுல சேர்த்தியே கிடையாது’ன்னு சொல்றது 2 கே கிட்ஸ் காலம். ஆனா, எல்லா காலத்துலயும் பெரியவங்க மனசுக்குள்ள இருக்கிற விருப்பு, வெறுப்பு, ஈகோவெல்லாம் அந்தக் காலத்துலயும் இருக்கதானே செஞ்சுது. எல்லா வருசமும்போலவே, மாமா பசங்க, ஒண்ணுவிட்ட சித்திப்பொண்ணுங்கன்னு எல்லார்கூடவும் சேர்ந்து தாயம், பல்லாங்குழி, பாண்டியாட்டம்னு ஆடிக்கிட்டிருந்த மணிமேகலை, இந்த வருசம் என்னவோ புதுசா தெரிஞ்சா ஆறுமுகம் மாமாவோட இளைய மகன் குமரனுக்கு. 'மணிக்கு நுங்கு பிடிக்கும்னு வெட்டிக்கிட்டு வந்தேன். என்னம்மா அப்பளம் பொரிச்சி வெச்சிருக்க, மணிக்கு வத்தல்தானே புடிக்கும். மணி கூச்சப்படுது, பாத்ரூமோட ஓலைத்தட்டியை புதுசா மாத்திடுறேன்னு மணிமேகலைக்காக பார்த்துப் பார்த்துச் செய்ய ஆரம்பிச்சான். இந்த மாற்றத்தை மணியோட சித்திப்பொண்ணுங்க கண்டுபிடிச்சு அவகிட்ட சொல்ல, தான் முதல்முதலா ஓர் ஆணால காதலிக்கப்படுறோம்கிற உணர்வுல அடிவயித்துக்குள்ள ஏதோ செய்யுது மணிக்கு. அந்த உணர்வு சந்தோஷமாவும் இருந்துச்சு. உச்சி வெயில்ல கிராமமே தூங்குற நேரத்துல மணிமேகலையும் குமரனும் மொட்டை மாடியில தங்களோட காதலை வளர்க்கிறாங்க. 'இந்த வருசம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும். நான் வேலைக்குப் போனவுடனே என் அப்பாகிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லிடுறேன். கண்டிப்பா சம்மதம்தான் சொல்வாரு. உங்க அம்மாவும் சந்தோஷந்தான் படுவாங்க. நாம கல்யாணம் செஞ்சுக்கிறதுல எந்தப் பிரச்னையும் வராது. நீ நல்லா படி. மேல படிக்கணும்னு ஆசப்பட்டீன்னா நானே உன்னைப் படிக்க வெக்கிறேன்'னு குமரன் எதிர்காலத்தை பத்தி பேசப் பேச, மணிமேகலைக்கு சுள்ளுன்னு அடிச்ச சூரியன் பெளர்ணமி நிலா மாதிரி தெரியுது.

மணியும் அவ அம்மாவும் திருச்சிக்கு வந்த பதினாறாவது நாள் அந்தத் தந்தி வந்துச்சு. அவ அப்பா தான் அனுப்பியிருந்தாரு. 'சீக்கிரம் வா'ன்னு ஒத்த வரி இங்கிலீஷ்ல இருந்த அந்தத் தந்தியைப் பார்த்ததும் பதறிப்போய் சென்னைக்குக் கிளம்புறாங்க தாயும் மகளும். கூடவே ஆறுமுகம் மாமாவும். காலிங்பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த தன் மூத்த மகளோட முகத்தைப் பார்த்து பதறிப்போயிட்டாங்க மணியோட அம்மா. இரண்டு கன்னங்கள்லயும் விரல் தடங்கள். கதவு திறந்த சத்தம் கேட்டு ரூமை விட்டு வெளியே வந்த மணியோட அப்பா முகத்துல கட்டுக்கடங்காத கோவம். விஷயம் இதுதான். மணியோட அக்கா கூடப்படிச்ச பையனை லவ் பண்ணியிருக்கா. லவ் பண்ற பொண்ணை ஒரு மாசம் பார்க்காம இருக்க முடியல அவனுக்கு. மணியோட அப்பா இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கு வந்திருக்கான். ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்த நேரத்துல அப்பா வந்துட்டாரு. பொண்ணு லவ் பண்ணா கெட்டுதான் போயிருப்பான்னு கண்மூடித்தனமா நம்பிக்கிட்டிருந்த காலத்துல வாழ்ந்த மணியோட அப்பாவும் அதுக்கு விதிவிலக்கா இருக்கல. பொண்ணை அடிச்சுத் துவைச்சவர், மனைவிக்கு உடனே தந்தியும் அனுப்பிட்டார். மருமவ கிட்ட எல்லா விஷயத்தையும் கேட்ட ஆறுமுகத்துக்கு, மச்சான் நினைக்கிறபடி ஏதும் தப்பா நடக்கலைங்கிறது நல்லாவே புரிஞ்சுது. அதை எடுத்தும் சொல்றாரு. ஆனா, மணியோட அப்பா எதையும் கேட்கிற நிலைமையில இல்ல. உடனே பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாதான் தன்னோட மானம், மரியாதை காப்பாத்தப்படும்கிறதுல பிடிவாதமா நிக்கிறாரு. இந்த நேரத்துலதான், தன் மூத்த பையனுக்கு மணியோட அக்காவை கட்டி வெச்சிடலாம்னு யோசனை சொல்றாரு ஆறுமுகம். அடுத்த நொடி, 'என் மானத்த காப்பாத்திட்டே மச்சான்'னு கதறியபடி அவர் கால்ல விழுந்திடுறாரு மணியோட அப்பா.

Retro love stories

கல்யாணம் திருச்சியில வெச்சிக்கிறதா முடிவு பண்ணிடுறாங்க. மின்னல் வேகத்துல கல்யாண வேலைகள் நடக்குது. வீட்டுக்கு வரப்போற மருமவளுக்காக கல்லுல குளிக்கிற ரூமும், கழிவறையும் கட்ட சொல்றாரு ஆறுமுகம். எல்லாம் நல்லாதான் போயிக்கிட்டிருந்துச்சு, ஆறுமுகம் மாமாவோட மாமியார் வீட்டாளுங்க அந்த வார்த்தையைச் சொல்ற வரைக்கும். 'பட்டணத்துல கெட்டுப்போன உன் தங்கச்சி மவளை என் பேரனுக்கு கட்டி வைக்கப் பார்க்கிறீங்களே... இது நியாயமா தம்பி... எங்க சொந்தத்துல எத்தினி நல்ல பொண்ணுங்க இருக்கு தெரியுமா... அதுல ஒண்ணை கட்டி வைக்கலாம்மில்ல'னு ஆறுமுகத்தோட மாமியார் வார்த்தையைவிட, கல்யாண வீடு பத்தியெரிய ஆரம்பிச்சிது. ஆறுமுகத்தோட பொண்டாட்டி, 'உன் தங்கச்சி பொண்ணுக்காக என் புள்ள வாழ்க்கையை நாசம் பண்ணப் பார்க்கிறியே'ன்னு கத்த ஆரம்பிக்க, கல்யாணம் நின்னே போச்சு. 'நம்ப வெச்சு கழுத்தறுட்டான்டி உன் அண்ணன்'னு மொத்த குடும்பத்தையும் இழுத்துக்கிட்டு சென்னைக்கு பஸ் புடிச்சாரு மணியோட அப்பா.

அந்த நிமிஷத்தோட தனக்கும் தன் தங்கச்சிக்குமான உறவு அத்துப்போச்சுன்னுதான் ஆறுமுகம் நினைச்சாரு. ஆனா, பட்ட மரத்துல ஒட்டிக்கிட்டிருக்கிற பச்சையத்துல சின்னதா துளிர் விடுற மாதிரி, இளைய மகனோட காதலை மணிமேகலை லெட்டர் மூலமா தெரிஞ்சுக்கிறார். மனைவிக்குத் தெரியாம மகன்கிட்ட பேசினவர், மணிமேகலை அக்காவோட கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கச் சொல்றார். காதல் அப்படில்லாம் சொல்பேச்சு கேட்குமா என்ன... லெட்டர் வழியா வளர்ந்துகிட்டிருந்த காதலுக்கு அதுமூலமாவே பிரச்னையும் வருது. 'இந்தத் தேதியில உன் காலேஜுக்கு வந்து உன்னப் பார்க்குறேன்'னு குமரன் போட்ட லெட்டர் மணியோட அப்பா கையில கிடைச்சிடுது. அதே நாள்ல மக படிக்கிற காலேஜுக்குப் போய் குமரனை கையும் களவுமா பிடிச்சிடுறாரு. குமரன் வந்தது, அப்பாகிட்ட அடி வாங்கிட்டு ஊருக்குப் போனது எதுவுமே தெரியாம சாயங்காலம் வீட்டுக்கு வந்த மணிமேகலை அதுக்கப்புறம் காலேஜுக்கே போக முடியல. குமரன்கிட்ட இருந்து வந்த கடிதங்களையும் அவ கைக்கு கிடைக்காம பார்த்துக்கிறாரு. ஒருகட்டத்துல ரெண்டு மகள்களுக்கும் ஒண்ணாவே கல்யாணம் செஞ்சிடலாம்னு அவர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, மணிமேகலை விஷம் குடிச்சிடுறா. தங்கச்சியோட லெட்டர் மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்ட ஆறுமுகம், எந்தத் தந்தையும் எடுக்காத அந்த முடிவை எடுக்கிறார்.

Retro love stories

அப்பாகிட்ட கெஞ்சிக்கேட்டு பரீட்சை எழுதுறதுக்கு மட்டும் அனுமதி வாங்கிட்டு காலேஜுக்கு வந்த மணிமேகலை, கடைசி பரீட்சை அன்னிக்கு பாதியில கிளம்பிப் போயிடுறா. ஏற்கெனவே திட்டம் போட்டபடி குமரனுக்கும் மணிக்கும் கல்யாணத்தை முடிச்சி தன் நண்பனோட ஊருக்கு பஸ் ஏத்திட்டு, அவர் திருச்சி பஸ்ஸை பிடிக்கிறார். தங்கச்சியோட கண்ணீர், மச்சான் சொக்காயைப் பிடிச்சு அடிக்க வந்தது, பொண்டாட்டியோட சாபம்னு எதுக்குமே ஆறுமுகம் வாயைத் தொறக்கல. ஒண்ணுல்ல... ரெண்டில்ல... கிட்டத்தட்ட அஞ்சாறு வருசமா அப்படித்தான் இருந்தாரு. பேத்தி தர்ஷினி பொறந்தப்போகூட மருமவளுக்கு அவருதான் தாய்க்குத்தாயா இருந்து ஒத்தாசை செஞ்சாரு. 'மிச்சமிருக்கிற கோபமும் சாபமும் தணியட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்'னு, தான் மனசுக்குள்ள நினைச்சபடியே எட்டு வருசம் கழிச்சு மகனும் மருமவளும் இருக்கிற ஊரை பத்தி தங்கச்சிக்கிட்டயும் பொண்டாட்டிகிட்டயும் சொல்றாரு. அதுக்கப்புறம் ரெண்டு குடும்பமும் சேர்ந்தது உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்ச கதைதான்.

* * * * *

றுநாள் பேத்தி தர்ஷினியோட பொறந்த நாள். மருமவ ஊருக்குப்போற பஸ்ஸுல ஏறி உட்கார்ந்தாரு ஆறுமுகம் மாமா. அவர் கையில இருந்த பைக்குள்ள இருந்த திரட்டுப்பால் வாசனை பஸ் முழுக்க பரவுச்சு.



from Vikatan Latest news https://ift.tt/GsrEhH2

Post a Comment

0 Comments