கடந்த 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது. இதையடுத்து மக்கள் செயல் கட்சியை சேர்ந்த லீ குவான் யூ பிரதமரானார். அவர் எடுத்த முன்னெடுப்புகள் அந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து லீ குவான் யூ நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டார். பிறகு கடந்த 1984-ம் ஆண்டு வாக்கில் தனது மகன் லீ சியென் லூங்யை பின்வரிசை உறுப்பினராக அரசியலில் கொண்டுவந்தார். படிப்படியாக வளர்ந்து 2004-ம் ஆண்டு தலைமை பொறுப்புக்கு வந்தார். அப்போது, 'லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என்கிற குற்றச்சாட்டு நாடுமுழுவதும் வெடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றார்.
முன்னதாக கடந்த வாரம் லீ சியென் லூங் அளித்த பேட்டியில், "இதுநாள் வரை எனக்கு ஆதரவு வழங்கி வந்த சிங்கப்பூர் மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. மாறாக அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன். இதன் மூலம் நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம். எனது தந்தை, அவருக்கு முன் பிரதமராக இருந்த கோ சோக் டோங்க் ஆகியோரது செயல்முறையிலிருந்து விலகி, எனது பாணியில் காரியங்களை செய்ய முயன்றேன்" என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், "லீ சியென் லூங் பதவியேற்ற சமையத்தில் அவரை பலரும் குடும்ப அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இருப்பினும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் நீடித்து வந்தார். இதற்கு சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தான் முக்கிய காரணம். இதனால் அந்த நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் சிங்கப்பூர் மாறியது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றின் போது உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின. ஆனால் சிங்கப்பூரை பெரிய பிரச்னையில் சிக்கிவிடாமல் லீ பார்த்துக்கொண்டார்.
அதேநேரத்தில் இவரது ஆட்சியில் பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றன. குறிப்பாக மக்களின் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்ட சமயங்களில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இது சிங்கப்பூர் மக்களை அதிருப்திக்கு உள்ளாகியது. இந்த அதிருப்தியில் காரணமாக லீ மீதான மக்கள் செல்வாக்கு குறைந்தது. இதன் விளைவு கடந்த 2011, 2020-ல் நடந்த தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தை மட்டுமே லீ கட்சியால் பெற முடிந்தது. இதேபோல் அந்த நாட்டில் மக்கள் பொது வீட்டுக் கட்டடங்களில் தான் வசித்து வருகிறார்கள். வாங்கும் போது மதிப்பு அதிகமாக இருப்பதும், நாளடைவில் குறைந்து விடுவதும் மக்களிடத்தில் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
இதற்கும் மேலாக லீ சியென் லூங்கிற்கும் அவரின் சகோதரர்களுக்கும் இடையில் மோதல் நிலவி வந்தது. ஒருகட்டத்தில் தங்களை லீ கடுமையாக துன்புறுத்தி விட்டார். தனது அரசியல் லாபத்துக்காக தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி கொண்டார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். அரசின் நிர்வாக அமைப்புகளை குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்' என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருகிறார்கள். இதை லீ மறுத்தாலும் மக்கள் மனநிலை அவருக்கு எதிராக மாறியது. இதையடுத்துதான் தனது பதவியை லாரன்ஸ் வோங்யிடம் ஒப்படைக்க உள்ளார்" என்றனர்.
தொடர்ந்து பேசியவர்கள், "சிங்கப்பூர் மக்களிடத்தில் லீ அதீத செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். 45 ஆண்டுகாலமாக லீ குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து வந்தார்கள். ஆனால் குடும்ப பிரச்னை, புலம்பெயர்ந்தோரை அளவுக்கு அதிகமாக அனுமதித்தது போன்றவை தான் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்யிடம் தனது பதவியை ஒப்படைத்துள்ளார். வோங் ஒரு காலத்தில் லீயின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். லீ-க்கு பிறகு மூத்த அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் தலைமை பொறுப்புக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வயது முதிர்வு காரணமாக வோங் தலைமை பொறுப்புக்கு வந்து இருக்கிறார். இவர் கோவிட் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால் மக்களிடத்தில் நன்கு பரிச்சயமானவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்த்தவர். உள்ளூர் பள்ளியில் படித்தவர் என்பதும் அவருக்கு கூடுதல் சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரென்ஸ் வோங், "சிங்கப்பூர் மக்களுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். குறிப்பாக மூத்த குடிமக்கள், ஏழைகளின் வசதிக்கு பாடுபடுவேன். அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையே தொடரும்" என்றார்.
இதையடுத்து வோங் சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்து பேசிய சர்வதேச அரசியல் நோக்கர்கள், "லீ சிங்கப்பூரை சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாற்றினார். அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த இரண்டு தசாப்தங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், நாட்டிற்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளன. அதிக வாழ்க்கைச் செலவுகள் குறித்து சிங்கப்பூர் மக்களிடையே அதிருப்தி உள்ளது. சிங்கப்பூர் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாகும். நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் இல்லை. வீட்டுச் செலவுகள் உயர்ந்துள்ளன.
குடியேற்றமும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. சிங்கப்பூரின் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்களில் 40% பேர் அந்நாட்டின் குடிமக்கள் அல்ல. இது இனவெறி மற்றும் மதவெறியின் மிக மோசமான வடிவத்திற்கு வழிவகுத்தது என எண்ணுகிறார்கள். மற்றொரு பிரச்னை கடுமையாக இருக்கும் கருத்துச் சுதந்திரம். அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையே தொடரும் என தெரிவித்து இருந்தாலும் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தகப் கூட்டாளியாக சீனா இருந்தாலும், சிங்கப்பூரில் உள்ள அனைத்து அந்நிய நேரடி முதலீட்டில் 20%க்கும் அதிகமான பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது. சிங்கப்பூர் அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளையும் கொண்டுள்ளது. எனவே இதில் யாருக்கு எதிராக செயல்பட்டாலும் சிக்கல் ஏற்படும்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/6DPSRIB
0 Comments