‘`என்ன... நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க... உள்ள பிரேக்கர் ஓடிக்கிட்டு இருக்கு. உங்கமேல கல்லு பட்டுச்சுன்னா, எங்க பேருதானே கெட்டுப்போகும்?’'
- சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் கூவம் நதிக்குள், எழும்பூர் அருகே நுழைந்த நம்மை மேற்கொண்டு கால் எடுத்து வைக்க விடாமல் இப்படிச் சொல்லித் தடுத்தார் ஒருவர்.
உண்மையில், அங்கு நடக்கும் கொடுமைகளைத் தடுக்காவிட்டால், சென்னையே மூழ்கிப்போகும் என்கிற பெருங்கவலையுடன்தான் அங்கே அடியெடுத்துவைத்தோம். ஆனால், அவர்களுக்கோ `பேரு கெட்டுப்போகு'மாம்.
‘`உள்ள என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வந்துடுறோம்' என்று நாம் சொல்ல, ‘`இது 6,000 கோடி ரூபாய் புராஜெக்ட். அப்படியெல்லாம் விட்டுட முடியாது'’ என்று கறாராகச் சொல்லி தடுத்தவர், ``வேற ஏதாவது கேக்கணும்னா... அங்க போங்க’' என்று ஒரு கன்டெய்னரைக் கைகாட்டினார். அங்கே சென்றால், ``ஒன்லி ஹிந்தி'’ என்றபடி எதிர்கொண்டவருக்கு, நாம் எப்படியோ புரியவைக்க... ஒருவருக்கு போன் செய்து நம் கையில் தந்தார். நம்மை அறிமுகம் செய்துகொண்ட பிறகு, ‘`இன்னிக்கு மதுரவாயல்ல இருக்கேன். நாளைக்கு வாங்க'' என்ற போன் குரல் பெயர், போன் நம்பர் எதையும் தரத் தயாராக இல்லை.
ஏன் இந்த விசிட்?
எழும்பூர், எத்திராஜ் சாலைப் பகுதியில் ஓடி வரும் கூவம் நதியில், கடந்த சில நாள்களாக லாரி லாரியாகக் கட்டடக்கழிவுகளை ஏற்றி வந்து கொட்டி, கூவத்தை மூடிக்கொண்டிருந்தது நம் கண்களில்பட்டது. கூடவே, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைக்காக, கூவத்துக்குள் கட்டப்பட்டு முழுமை பெறாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கும் தூண்களை இடித்து அகற்றும் பணியும் நடக்கிறது. ஆனால், `கான்கிரீட் கழிவுகளை நதியிலிருந்து அகற்றுவதுதானே நியாயம்... அதுவும், நீர்நிலையான கூவத்துக்குள் இப்படியெல்லாம் தூண்களைக் கட்டுவதே தவறாயிற்றே?' என்று யோசிக்க ஆரம்பித்தோம்.
இப்படித்தான், எம்.ஆர்.டி.எஸ் எனும் பறக்கும் ரயில் திட்டத்துக்காக சிந்தாதிரிப்பேட்டை தொடங்கி, வேளச்சேரி வரை பக்கிங்காம் கால்வாய்க்குள் பெரிய பெரிய தூண்களைக் கட்டினார்கள். அதன் பிறகுதான் சென்னையின் வெள்ள பாதிப்பு இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்தது. அப்படியிருக்க, மீண்டும் மீண்டும் நீர்நிலைகளை இப்படி அரசாங்கமே ஆக்கிரமிப்பது அநியாயம்தானே?
ஏற்கெனவே, கூவத்துக்குள் இருக்கும் தூண்களை இடித்து, அந்தக் கட்டடக் கழிவுகளை அங்கேயே போட்டு மேடாக்குவதோடு, மேற்கொண்டும் எங்கிருந்தோ லாரி லாரியாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்பது பதைபதைக்கவைத்தது.
எதற்காக இப்படிக் கூவத்தை மூடுகிறார்கள்?
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் தி.மு.க ஆட்சியில் ஒப்புதல் கொடுக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து, அ.தி.மு.க ஆட்சிக்கு வரவே, அன்றைய முதல்வர் ஜெயலலிதா சுற்றுச்சூழலைக் காரணம் காட்டித்தான் இந்தத் திட்டத்தை எதிர்த்தார். அப்போது நிறுத்தப்பட்ட திட்டப் பணிகள், எடப்பாடி முதல்வரான பிறகு, `ஈரடுக்கு பறக்கும் சாலை’ என்கிற பெயரில் மீண்டும் உருவெடுத்தது.
2021-ல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் முயற்சியால், மீண்டும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
ஈரடுக்கு பாலமாகக் கட்டத் திட்டமிட்டிருப்பதால், ஏற்கெனவே மதுரவாயலிலிருந்து சாலையின் நடுவே கட்டப்பட்ட தூண்களும், கூவத்தில் கட்டப்பட்ட தூண்களும் அடித்து உடைக்கப்படுகின்றன. அதாவது, 1,468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு, 200 கோடிகள் செலவழிக்கப்பட்ட நிலையில், திட்டத்தையே மொத்தமாகக் கைவிட்டிருக்கின்றனர். இதற்காகக் கொட்டப்பட்ட மக்கள் பணம்... கமிஷனாகக் கறக்கப்பட்ட பணம் எல்லாம் காந்தி கணக்குதான்.
இப்போது மீண்டும் `ஈரடுக்கு மேம்பாலம்’ என்கிற பெயரில் முதல் புரோட்டாவிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு, 5,800 கோடி ரூபாய். மத்தியில் இருப்பவர்களுக்கும், மாநிலத்தில் இருப்பவர்களுக்கும் கமிஷன் எத்தனை கோடிகளோ..?
சரி, அந்தக் கொள்ளைகள் ஒருபக்கம் இருக்கட்டும். வெள்ள காலங்களில் மக்களையும் மாநகரையும் காப்பாற்றும் கூவம் நதிக்குள் இப்படி கும்மி அடிப்பது எந்த அளவுக்குச் சரி என்பதுதான் இப்போதைக்கு நாம் எழுப்பும் கேள்வி.
எழும்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் கூவத்துக்குள் இருக்கும் 17 தூண்கள் இடிக்கப்படவிருக்கின்றன. அதேசமயம், புதிதாகக் கட்டப்படவிருக்கும் ஈரடுக்கு பறக்கும் சாலைக்காக 605 தூண்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்காகத் தான் கூவம் நதியில் ஏற்கெனவே கட்டிய தூண்கள் இடிக்கப்பட்டும், லாரியில் கொண்டு வந்து கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டும் வருகின்றன. கட்டடக் கழிவுகளைக் கொட்டி செயற்கையாக உருவாக்கப்படும் இந்த மேடு, கூவம் நதியின் தற்போதைய நீரோட்டத்தை 80% அளவுக்கு இப்போதே ஆக்கிரமித்துவிட்டது.
இதனால் என்ன பிரச்னை?
அடிக்கடி பெருமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்தபடியே இருக்கிறது சென்னை. காலநிலை மாற்றத்தின் காரணமாக, இந்த பாதிப்பு அதிகரிக்கவே செய்யும் என்று எச்சரிக்கிறார்கள், சூழல் ஆர்வலர்கள்.
கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், சுமார் 8,820 கோடி ரூபாய்; தற்போதைய தி.மு.க ஆட்சியில் 4,000 கோடி ரூபாய் எனப் பணத்தை அள்ளி அள்ளிக் கொட்டி, மழைநீர் வடிகால் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், வெள்ள பாதிப்பு என்பது கூடுதலாகிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. அதற்கு, கடந்த 2023-ம் ஆண்டு, டிசம்பர் பெருமழையே சாட்சி.
கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆகியவைதான் ஓரளவுக்கு சென்னை மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. அதற்கும் வேட்டு வைப்பதுபோல இந்த மூன்று ஆறுகளுமே ஆக்கிரமிப்பின் பிடியில்தான் இருக்கின்றன.
தியேட்டர்கள், மால்கள், பெரிய பெரிய வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் எனப் பற்பல ஆக்கிரமிப்புகள் இந்த ஆறுகளைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மிச்சமிருக்கும் ஆறுகளையும் அரசாங்கமே கபளீகரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. ‘ரோடு போடுறோம்... தூண் எழுப்புறோம்‘ என்று கட்டடக் கழிவுகளைக் கொட்டி நதிகளை அழித்தால், ஒட்டுமொத்தமாக சென்னை நீரில் மூழ்குவதை யாராலும் தடுக்கவே முடியாது. அந்த பாதிப்பு, 2023 டிசம்பரை விட பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை.
சரி, இதெல்லாம் நம்முடைய பயம். இதற்கான தீர்வைச் சொல்லவேண்டியது அரசாங்கம்தானே?
``நாளைக்கு வாருங்கள்'' என்றீர்களே... என்றபடி மீண்டும் நேரில் சென்றோம். முந்தைய நாள் நம்முடன் போனில் பேசிய நபரும், அவருக்கு மேலதிகாரி என்று சொல்லப்பட்ட நபரும் அங்கே இருந்தார்கள்.
‘`இப்படி ஆத்துல கட்டடக் கழிவுகளை கொட்டுறீங்களே... அடுத்தடுத்த மாசங்கள்ல மழை வந்துடுமே... மழைத் தண்ணி தேங்க ஆரம்பிச்சா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க?’' என்ற நம் கேள்விக்கு,
“புதுசா பாலம் கட்டப்போறோம். புதுசா தூண் கட்டுறதுக்காக லாரியில கொண்டுவந்து கொட்டுறோம். தூண் கட்டினதும், அடுத்த மாசமே கழிவுகளை எடுத்துடுவோம்'' என்று பதில் தந்தனர்.
‘`கட்டடக் கழிவுகளை கொட்டுறது நதியோட நீரோட்டத்தையும், அதோட தன்மையையும் பாதிக்காதா?’' என்ற நம் கேள்விக்கு, `‘அதெல்லாம் எங்ககிட்ட கேக்காதீங்க. நீர்வளத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறைகிட்ட கேளுங்க. அவங்க அனுமதியோடதான் எல்லாம் செய்யறோம்” என்றார்கள்.
‘`இந்த ஈரடுக்கு பறக்கும் சாலைத் திட்டம், 30 மாதகாலத் திட்டம். தேசிய நெடுஞ்சாலைத் துறை வலைதளத்தில் மேல் விவரங்களைத் தேடிக்கொள்ளுங்கள்'’ என்பது அவர்கள் கொடுத்த கூடுதல் தகவல். ஆனால், தங்களது பெயர், பதவி, தொடர்பு எண் என எதையும் கூற மறுத்துவிட்டனர். இவர்கள், புதிதாகக் கான்ட்ராக்டைப் பெற்றிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜே.குமார் எனும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரிகிறது, அவர்கள் அங்கே வைத்திருக்கும் போர்டு மூலமாக.
எப்படி முடியும்?
30 மாதகாலத் திட்டம் என்கிறார்கள். பொதுவாக அரசாங்கம் ஒரு திட்டத்துக்கு நாள் குறித்தால், அதிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளையாவது கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம். அப்படிப் பார்த்தால், இது 54 மாதகாலத் திட்டமே. சரி, 30 மாதங்களுக்குள் முடித்துவிடுவார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், இப்போதுதான் இடிக்கவே ஆரம்பித்தி ருக்கிறார்கள். அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அதாவது, மழை வருவதற்குள் தூண்களையே கட்டி முடித்து, கூவத்தில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளையும் அகற்றி விடுவார்களா?
மெயில் பண்ணுங்க!
கூவம் நதி, மாநில பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்தான் வரும் என்பதால், `இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்றபடி அந்தத் துறைக்கு போன் செய்தோம். ‘என்னது... சிவாஜி செத்துட்டாரா?' என்கிற ரேஞ்சுக்கு, `என்னது கூவத்துல கட்டடக் கழிவுகளைக் கொட்டுறாங்களா... போட்டோவோட தகவலை மெயில் பண்ணுங்க. உடனே நடவடிக்கை எடுக்குறோம்' என்று பதில் கொடுத்தனர்.
ம்ம், பொதுப்பணித்துறையிடம் எந்த அனுமதியும் வாங்காமல்தான் இப்படிக் கொட்டி, கூவத்தையே மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நம்ப வேண்டும். ஆயிரமிருந்தாலும், அவர்கள் கேட்ட தகவல்களையும் போட்டோக்களையும் உடனே அவர்கள் கொடுத்த மெயில் முகவரிக்கு அனுப்பிவைத்திருக்கிறோம்.
ஆக மக்களே... கண்டிப்பாக வீட்டுக்கு ஒரு படகு வாங்கி வைத்துக்கொள்வதுதான் ஒரே வழிபோல!
`இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்துங்கள்!'
கீழ்க்காணும் அனைவருக்கும் தபால் மூலம் புகைப்படங்களுடன் இந்தப் பிரச்னை குறித்து வேண்டுகோள் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறோம்.
1. பொதுப்பணித்துறை.
2. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.
3. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.
4. சென்னை மாநகராட்சி,
5. தமிழ்நாடு நீர்வளப் பாதுகாப்பு மற்றும் ஆறுகள்
மறுசீரமைப்பு நிறுவனம்.
6. மாவட்ட ஆட்சியர் சென்னை.
from Vikatan Latest news https://ift.tt/J1ZY3Tl
0 Comments