Doctor Vikatan: அலோபதி மருந்துகளுடன், சித்தா உள்ளிட்ட மாற்று சிகிச்சைகளையும் சேர்த்து எடுக்கலாமா?

Doctor Vikatan: அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது சித்த மருந்துகள், இயற்கை மருந்துகளும் எடுத்துக்கொள்வது சரியா? சித்த மருத்துவத்திலும் இயற்கை மருத்துவத்திலும் பத்தியம் பரிந்துரைக்கப்படுகிறது. அலோபதியில் அப்படி எந்தக் கட்டுப்பாடும் சொல்லப்படுவதில்லை. இந்நிலையில் வேறு வேறு பிரச்னைகளுக்காக அலோபதி, சித்தா என எல்லாம் சேர்த்து எடுப்பது எந்த அளவுக்குச் சரியானது?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நோய் நிலையைப் பொறுத்து இப்படி இருவேறு மருந்துகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. உதாரணத்துக்கு, நீரிழிவுக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நபர், அவரது ரத்தச் சர்க்கரை அளவைப் பொறுத்து, நவீன மருந்துகள் எடுத்து அரை மணி நேரம் கழித்து மாற்று மருத்துவ சிகிச்சைகளையும் எடுக்கலாம். ஆனால், இப்படி எடுக்கும்போது அவ்வப்போது அவரது ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். 

புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கீமோதெரபி உள்ளிட்டவற்றால் பக்கவிளைவுகள் இருக்கும். அந்த விளைவுகளைச் சமாளிக்க, சித்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதுண்டு.  எப்படியிருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பதுதான் பாதுகாப்பானது.  ஏனெனில் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, தேவையான அளவில் மருந்துகளை மருத்துவர்களால்தான் சரியாகப் பரிந்துரைக்க முடியும். மருத்துவ ஆலோசனையின்றி, ஒரே நேரத்தில் ஒரு பிரச்னைக்காக நீங்களாக சித்தா, அலோபதி என இரண்டு, மூன்று மருத்துவ முறையைப் பின்பற்றுவது சரியானதல்ல.

சித்த மருந்துகள்

பாரம்பர்ய மருத்துவத்தில், குறிப்பாக சித்த மருத்துவத்தில் பத்தியம் என்பது ரொம்பவே ஸ்பெஷலானது. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை நாடி பார்த்து, வாதம், பித்தம், கபம் அளவுகளைப் பார்த்துதான் மருந்துகள் கொடுப்போம். ஆனால், சித்த மருத்துவத்தில் எல்லா மருந்துகளுக்கும் பத்தியம் அவசியம் என்று அர்த்தமில்லை. நோயின் நிலையையும் அதன் தீவிரத்தையும் பொறுத்தே பத்தியம் தேவையா, இல்லையா என்பது முடிவுசெய்யப்படும்.  

சித்த மருத்துவத்தில் பெரு மருந்துகள் என சிலவற்றைப் பரிந்துரைப்போம். அவற்றுக்குப் பத்தியம் அவசியப்படலாம். முற்காலம் அளவுக்கு இப்போது பெரிய அளவில் உணவுக்கட்டுப்பாடுகள் சொல்லப்படுவதில்லை. சருமப் பிரச்னைகளுக்கு நீண்டநாள்களாக சிகிச்சைகள் எடுப்போருக்கு பத்தியம் அறிவுறுத்தப்படும். அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம். சிறுதானியங்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றில் சிலவற்றைத் தவிர்க்கச் சொல்வோம். 

சிறுதானியங்கள்...

உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றும்போது நோய் சீக்கிரம் குணமாவதைப் பார்க்கலாம். பத்தியம் என்பது உணவுக்கட்டுப்பாடு மட்டுமல்ல. காய்ச்சல் வரும்போது அலையாமல் இருப்பதுகூட பத்தியம்தான்.

'பட்டினி பெருமருந்து' என்றொரு வாசகம் உண்டு.  அந்த வகையில் விரதமிருப்பதுகூட ஒருவகை பத்தியம்தான். உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் பத்தியம்தான். அலோபதி  மருந்துகளில் பத்தியம் அறிவுறுத்தப்படுவதில்லை. சித்த மருத்துவத்திலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு, குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமே அது அவசியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Vikatan Latest news https://ift.tt/dEqw7is

Post a Comment

0 Comments