RCB v CSK: `வீரர்கள் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!' அசாத்தியத்தை நிகழ்த்தி பிளேஆஃப்ஸ் போன பெங்களூரு

நடப்பு சீசனின் பெரும் பரபரப்பான போட்டி ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. வென்றே ஆக வேண்டும் எனும் கட்டத்தில் பெங்களூரு அணி சாதித்திருக்கிறது. அவ்வளவுதான், ஒரு கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களுக்கு செல்லப்போகிறார்கள் என உதாசினப்படுத்தப்பட்ட அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளேஆஃப் சென்றிருக்கிறது. தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று சௌகரியமாக இருந்த சென்னையை ஓடவிட்டு தகுதிப்பெற்றிருக்கிறது பெங்களூரு.
RCB v CSK

எப்போதும் ருத்துராஜூக்கு உதவாத டாஸ் இன்று உதவியது. டாஸை வென்றார், சேஸிங்கைத் தேர்வு செய்தார்.

'பெரிய ஸ்கோர் ஆட்டமாக இருக்கும். எவ்வளவு அடித்தாலும் திருப்பி அடிக்கலாம். மழை பெய்து ஓவர்கள் குறைந்தாலும் ஒரு டார்கெட் கண்முன் இருக்கும்.' - இதையெல்லாம் மனதில் வைத்துதான் ருத்துராஜ் சேஸிங் எடுத்திருப்பார்.

"டாஸை தோற்றதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. கடந்த 5 போட்டிகளில் வென்றது எங்களுக்குப் பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது" என்றார் டு ப்ளெஸ்ஸி. அது வெறும் வார்த்தையில்லை, நெஞ்சில் நிஜமாகவே புது நம்பிக்கை பிறந்திருக்கிறது என்பது அவர்களின் அணுகுமுறையிலேயே தெரிந்தது. விராட் கோலியும் டு ப்ளெஸ்ஸியும் இணைந்து முதல் 3 ஓவர்களில் 31 ரன்களைச் சேர்த்திருந்தனர். இப்போது ஒரு ட்விஸ்ட். எப்போது வருமென பயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த மழை பொழியத் தொடங்கியது. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.

8:25 க்கு மீண்டும் போட்டி தொடங்கியது. இப்போது பெங்களூருவின் வேகத்தில் ஒரு சுணக்கம் தெரிந்தது. சென்னை அணியும் வேகப்பந்து வீச்சாளர்களை விடுத்து ஸ்பின்னர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தது. சாண்ட்னரும் தீக்சனாவும் அடுத்த 3 ஓவர்களில் அசத்திவிட்டனர். பந்து கன்னாபின்னாவென திரும்பியது. டு ப்ளெஸ்ஸி, கோலி என இருவருமே தடுமாறினர். நிறைய பந்துகளில் ஏமாந்து போய் பீட்டன் ஆகினர். நிறைய டாட்களும் வந்தன. பவர்ப்ளேயில் முதல் 3 ஓவர்களில் 31 ரன்கள், அடுத்த 3 ஓவர்களில் வெறும் 11 ரன்கள்தான். 6 ஓவர்கள் முடிவில் 42 ரன்கள் மட்டுமே என்பதாக சென்னையின் பௌலிங் படை அசத்தியது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்த ஆளுமையைத் தக்கவைக்க முடியவில்லை. சாண்ட்னரும் தீக்சனாவும் நன்றாக வீசியதால் அப்படியே மூன்றாவது ஸ்பின்னரான ஜடேஜாவையும் வீச வைத்து இன்னும் நெருக்கடி கொடுக்கலாம் என சென்னை நினைத்தது.

RCB v CSK

இந்த இடத்தில்தான் பெங்களூருவைப் பாராட்ட வேண்டும். ஸ்பின்னர்களுக்கு பயந்து அப்படியே தற்காப்பு அணுகுமுறையோடே சென்றிருந்தால் ஜடேஜா ஓவரும் அப்படியே கடந்திருக்கும். ஆனால், டு ப்ளெஸ்ஸியும் கோலியும் அட்டாக் செய்ய நினைத்தனர். ஜடேஜாவுக்கு எதிராக ரிஸ்க் எடுத்தனர். கோலி பவுண்டரிகளை அடித்தார். அது டு ப்ளெஸ்ஸிக்கு நம்பிக்கையை கொடுக்க அவரும் ஜடேஜாவை வெளுத்தெடுத்தார். ஜடேஜா 3 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை! போட்டி ஆர்.சி.பி பக்கமாக வந்தது. அரைசதத்தை நெருங்கிய கோலியை சாண்ட்னர் பந்தில் டேரில் மிட்செல் மிகச்சிறப்பாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அரைசதத்தை கடந்த டு ப்ளெஸ்ஸியை சாண்ட்னரே நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் நிற்க வைத்து ரன் அவுட் ஆக்கினார்.

முதல் 10 ஓவர்களில் ஆர்.சி.பி அடித்த ஸ்கோர் 78. அடுத்த 10 ஓவர்களில் ஆர்.சி.பி அடித்த ஸ்கோர் 140. ஓவருக்கு 14 ரன்கள், அதுவும் முதல் பத்து ஓவர் ஸ்கோரைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. இந்தப் பெரிய ஸ்கோருக்குக் காரணம் ரஜத் பட்டிதரும் க்ரீனும்தான். அத்தனை பௌலர்களையும் பாரபட்சம் பார்க்காமல் அடித்தனர். கடைசி 10 ஓவர்களில் 6 ஓவர்களில் ஓவருக்கு தலா 15 ரன்களைக் கடந்திருந்தனர். நிறைய பெரிய ஓவர்களும் வந்தன. கடைசியில் தினேஷ் கார்த்திக்கும் மேக்ஸ்வெல்லும் சில சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அவர்களும் ஸ்கோருக்கு உதவினர். பெங்களூர் அணி இறுதியாக 20 ஓவர்களில் 218 ரன்களை அடித்தது.

RCB v CSK
சென்னைக்கு டார்கெட் 219. தோற்றாலும் குறைந்தபட்சமாக 201 ரன்களை அடித்து தோற்க வேண்டும். அப்போதுதான் பிளேஆஃப்ஸ் வாய்ப்பு கிடைக்கும். இப்படியெல்லாம் சொன்னால் ஒரிஜினல் டார்கெட்டை விட்டுவிட்டு பங்கமற்ற தோல்வியடைவதற்கான வழியை நோக்கியே சி.எஸ்.கே செல்லும். இன்றைய தொடக்கத்தை பார்க்கையிலும் அப்படித்தான் இருந்தது.

பார்ட் டைமர் மேக்ஸ்வெல் முதல் ஓவரை வீசினார். ரச்சின் இடதுகை பேட்டர் என்பதால் மேட்ச் அப்பாக முதல் ஓவர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், சிக்கியது என்னவோ கேப்டன் ருத்துராஜ்! முதல் பந்திலேயே மடக்கி அடிக்க முற்பட்டு ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் ஆனார். கொஞ்ச நேரத்திலேயே டேரில் மிட்செல்லும் யாஷ் தயாளின் பந்தில் கோலியால் அட்டகாசமாக கேட்ச் செய்யப்பட்டார். இப்போது ரஹானேவும் ரச்சினும் இணைந்தார்கள். இடது வலது காம்போ. ரஹானே கொஞ்சம் அட்டாக் செய்து ஆடினார். ரச்சின் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு ஆடினார். இருவரும் இணைந்து 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு கட்டத்தில் ரச்சினும் வேகமெடுக்க தொடங்கினார். இந்தச் சமயத்தில்தான் பெர்குசன் கைக்குப் பந்து சென்றது. அவர் வீசிய முதல் பந்தையே தூக்கி அடித்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் ரச்சினுடன் துபே இணைந்தார்.

ஆனால் துபேவால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்பின்னர்கள் வீசியுமே அவரால் சிக்ஸர்களை அடிக்க முடியவில்லை. ரச்சின் அரைசதத்தை கடந்து ரன் அவுட் ஆனார். அதுவும் துபேவின் தவற்றினால்! பின்னர் துபேவும் க்ரீனின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக சாண்ட்னர் வந்தார். சாண்ட்னர் சிராஜின் ஓவரில் அடித்த பந்தினை டு ப்ளெஸ்ஸி இறக்கையில்லாமல் காற்றில் பறந்து அற்புதமான கேட்ச்சாக மாற்றினார். இந்த சீசனின் சிறந்த கேட்ச் இதுதான் என்று அடித்துச் சொல்லலாம்! மேட்ச் வின்னிங் கேட்ச்சாகவும் அது தெரிந்தது.

RCB v CSK

இதன்பிறகுதான் தோனி வந்தார். தோனியும் ஜடேஜாவும் கூட்டணி. ரன்ரேட் கணக்கின் அடிப்படையில் போட்டியை தோற்றாலுமே சென்னை பிளேஆஃப்ஸ் செல்ல கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட 70 ரன்கள் தேவைப்பட்டன. போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. 24 பந்துகளில் 63 ரன்கள் தேவை எனும் நிலை. யாஷ் தயாள் வீசிய 17 வது ஓவரில் தோனி ஒரு பவுண்டரி, ஜடேஜா ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் வந்தன. 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவை. பரபரப்பு இன்னும் கூடியது.

சிராஜ் 18 வது ஓவரை வீசினார். ஜடேஜா முதல் பந்தையே லாங் ஆபில் சிக்ஸராக்கி பிரஷரை ஏற்றினார். நான்காவது பந்தை பேக்வர்ட் பாயின்ட்டில் பவுண்டரியாக்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள். இப்போது இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் தேவை. 19 ஓவரை பெர்குசன் வீச வந்தார். முதல் பந்தே நோ-பால். எக்ஸ்ட்ராவாக ஒரு ரன் கிடைத்தது. ஆனால், ஃப்ரீ ஹிட்டிலும் தோனி ஒரே ஒரு ரன்னை மட்டுமே சேர்த்தார். ஜடேஜா பெர்குசனையும் பவுண்டரியோடு வரவேற்றார். சிக்ஸரோடு முடித்தார். இந்த ஓவரில் 18 ரன்கள் வந்தன.

கடைசி ஓவரில் சென்னை பிளேஆஃப்ஸூக்கு செல்ல 17 ரன்கள் தேவைப்பட்டன. யாஷ் தயாள்தான் கடைசி ஓவரை வீச வந்தார். போட்டி பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றது இங்குதான்! முதல் பந்தையே மைதானத்துக்கு வெளியே இமாலய சிக்ஸராக்கினார் தோனி. 110 மீட்டர்கள் பறந்த மிரட்டல் அடி அது! ஆனால், அடுத்த பந்திலேயே இன்னொரு சிக்ஸருக்கு முயன்று தோனி அவுட். இன்னும் பதற்றம் கூடியது. ஆனாலும் சென்னையின் நம்பிக்கை, ஜடேஜா இன்னும் க்ரீஸில்தான் இருக்கிறார் என்பதே!

RCB v CSK
2 பந்துகளில் 10 ரன்கள் தேவை. முந்தைய சீசனில் ஜடேஜா செய்த சாதனைதான் இது. அதுவே ஒரு வித நம்பிக்கை அளித்தது. ஆனால் கடைசிக்கு முந்தைய அந்தப் பந்தை ஜடேஜாவால் கனெக்ட் செய்ய முடியவில்லை. பீட்டன்! அடுத்த பந்தும் அதே! சி.எஸ்.கே வீழ்ந்தது. பெங்களூரு அணி ஓர் அசாத்தியத்தை நிகழ்த்திவிட்டது. யாருமே எதிர்பார்க்காதபடிக்கு தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று பிளேஆஃப்ஸூக்கும் சென்றுவிட்டார்கள். வாழ்த்துகள் ஆர்சிபி!


from Vikatan Latest news https://ift.tt/sK9HbtQ

Post a Comment

0 Comments