AUS v IND: `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

டிராவிஸ் ஹெட்தான் எப்போதும் இந்தியாவுக்கு வில்லனாக வருகிறார். முக்கியமான இன்றைய போட்டியிலும் அவர்தான் ஆஸ்திரேலியா சார்பில் மிகச் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு பயத்தைக் கொடுத்தார். அப்படியாயினும் கடைசியில் இந்திய அணியே போட்டியை வென்று அசத்தியிருக்கிறது. அரையிறுதிக்கும் முன்னேறியிருக்கிறது.
AUS v IND

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நாங்களும் முதலில் பந்துவீசத்தான் நினைத்தோம் என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அவரின் ஆட்டத்தில் எந்தக் குறையும் இல்லை. அதிருப்தியும் இல்லை. ஆஸ்திரேலிய பௌலர்களை வெளுத்துவிட்டார்.

ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் அவுட் சைடு தி ஆப் ஸ்டம்ப் திசையில் வீசப்பட்ட ஒரு பந்துக்கு பேட்டை விட்டு ஸ்லிப்பில் நின்ற வார்னரிடம் கேட்ச் கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக அப்பீல் செய்தனர். ரிவியூவும் சென்றது. ரிவியூவ்வில் தெளிவாக பந்து தரையில் பிட்ச் ஆகி கேட்ச் ஆனது தெரியவந்தது. ரோஹித் தப்பித்தார். அடுத்த ஓவரில் ஹேசல்வுட் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியில் கோலி டக் அவுட் ஆனார்.

Rohit

இதனைத் தொடர்ந்து ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில்தான் ரோஹித் வெறியாட்டம் ஆடினார். இந்த ஓவரில் மட்டும் 29 ரன்கள் வந்திருந்தன. 4 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் ரோஹித் அடித்திருந்தார். ஸ்விங்குக்கு முயற்சி செய்து ஃபுல் லெந்தில் வீசவே ஸ்டார்க் முயன்று கொண்டிருந்தார். ஸ்விங்கெல்லாம் ஆகவே இல்லை. ஸ்லாட்டில் விழுந்த பந்துகளை அலேக்காக சிக்ஸர்களாக மாற்றினார் ரோஹித். ஆஸ்திரேலிய அணி அரண்டு போனது.

கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் முட்டிப் போட்டெல்லாம் சிக்ஸரைப் பறக்கவிட்டார் ரோஹித். 19 பந்துகளிலேயே அரைசதத்தைக் கடந்தார்.

அணி மொத்தமாக 52 ரன்களை எடுத்திருந்த சமயத்திலேயே ரோஹித் 50 ரன்களை எடுத்துவிட்டார். அரைசதத்தை கடந்த பிறகும் பவர்ப்ளே முடிந்த பிறகும் கூட ஆடம் ஜம்பாவின் ஓவரிலும் சிக்ஸரைப் பறக்கவிட்டார். ஸ்டாய்னிஸின் ஓவரில் இறங்கி வந்து பவுண்டரி. ஷார்ட் பிட்ச் டெலிவரியை அலேக்காக மடக்கி சிக்ஸர், இறங்கி வந்து கவர்ஸில் சிக்ஸர் என ரோஹித் ருத்ர தாண்டவம் ஆடினார்.
Rohit
"அட்டாக்கிங்காக அதிரடியாக ஆட வேண்டும் என்பது பற்றி நான் பல நாட்களாக பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது கடுமையாக முயன்று அதற்கு செயலூக்கம் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.

வீரர்கள் க்ரீஸூக்குள் வர வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் அதிரடியாக ஆடி சிக்ஸர்களைப் பறக்கவிட வேண்டும். ஆளுக்கு 20-30 ரன்களை அடித்தால் கூட போதும். ஆனால், விரைவாக அடிக்க வேண்டும். இதுதான் ரோஹித் சொல்ல வரும் செய்தி. இதை அணியின் தலைவனாக முன் நின்று ரோஹித் செய்தும் காட்டியிருக்கிறார். நகைமுரணாக அதே ஸ்டார்க்கிடம்தான் கடைசியில் விக்கெட்டையும் விட்டார். ஒரு யார்க்கரில் ஸ்டம்பைப் பறிகொடுத்து 41 பந்துகளில் 92 ரன்களில் அவுட் ஆகினார். மொத்தமாக 7 பவுண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் அடித்திருந்தார். ரோஹித் ஆடிய வேகத்திற்கு இந்தியா எளிதில் 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை அப்படியில்லை. பின்னால் வந்த பேட்டர்கள் கொஞ்சம் தடுமாறினர்.

ஏறக்குறைய ஒரு 3 ஓவருக்கு பவுண்டரியே இல்லாத நிலையெல்லாம் இருந்தது. ஆனாலும் கடைசியில் ஹர்திக் பாண்டியா ஸ்டாய்னிஸின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து வேகம் கூட்டியதில் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. 20 ஓவர்களில் 205 ரன்களை இந்திய அணி எடுத்தது. ரோஹித் ஆடிய ஆட்டத்திற்கு இது குறைவான ஸ்கோர்தான். இன்னும் ஒரு 20 - 30 ரன்களை இந்திய அணி கூடுதலாக அடித்திருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 206. ஆஸ்திரேலியா சேஸிங்கில் கடும் சவால் அளித்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் ஸ்லிப்பிடம் எட்ஜ் ஆகி கேட்ச். ஆனாலும் ஆஸ்திரேலியா தடுமாறவில்லை. ஹெட், மார்ஷ் கூட்டணி நன்றாக ஆடியது. இந்தியாவுக்கு ரோஹித்தை போல ஆஸ்திரேலியாவுக்கு ஹெட். ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டினார்.

Head
ரோஹித் ஸ்டார்க்கை அடித்ததைப் போல ஹெட் பும்ராவை அடித்தார். பும்ராவின் ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். பவர்ப்ளேயில் ஆஸ்திரேலியா 65 ரன்களை எடுத்திருந்தனர். ஹெட் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

ரன்ரேட்டை 10 க்கு மேலாகவே வைத்துக் கொண்டனர். இந்த கூட்டணி போட்டியை இந்தியாவிடமிருந்து பறிப்பதைப் போல இருந்தது. அப்போதுதான் குல்தீப் யாதவ் திருப்புமுனையை கொடுத்தார். 9வது ஓவரில் நன்றாக வீசி மார்ஷை பவுண்டரி லைனில் கேட்ச் ஆக வைத்தார். அக்சர் படேல் ஒற்றைக் கையில் தாவி இந்த கேட்ச்சை பிடித்து அசத்தினார். கூட்டணி முறிந்தாலும் ஹெட் ஓயவில்லை. அவரின் வேகமும் குறையவில்லை. ஹர்திக்கின் ஓவரிலும் 3 பவுண்டரிகளை அடித்தார். அரைசதம் கடந்தும் அசத்தினார். மேக்ஸ்வெல்லும் வந்த வேகத்தில் ஜடேஜாவின் ஒரு ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்து ரன்ரேட்டை எகிறாமல் பார்த்துக் கொண்டார்.

மேக்ஸ்வெல்லையும் குல்தீப்தான் வீழ்த்தினார். இறங்கி வந்து ஆட முயன்ற மேக்ஸ்வெல்லை போல்டாக்கினார். அக்சர் வீசிய அடுத்த ஓவரிலேயே ஸ்டாய்னிஸூம் காலி. இந்தியாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனால், ஹெட் இன்னும் களத்திற்குள்ளேயே இருந்தார்.

இந்தியாவில் ஹெட் என்கிற பெயருக்கு ஸ்பெல்லிங் `PAIN' எனக் கூறி வர்ணனையில் ஹர்ஷா இன்னும் வலி கூட்டினார்.
Head

பும்ரா வீசிய 17வது ஓவரில் இந்தியாவுக்கு விடியல் கிடைத்தது. பும்ரா யார்க்கிங் லெந்தில் வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முற்பட்டு ஹெட் 76 ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி 3 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், அவர்களால் 181 ரன்களை மட்டும்தான் எடுக்க முடிந்தது. 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. மேலும், ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி வாய்ப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணியை இங்கேயே வெளியேற்றிவிடுவது பின்னால் இந்தியாவுக்கும் பலனளிக்கும்.


from Vikatan Latest news https://ift.tt/OcdvQaA

Post a Comment

0 Comments