திருவண்ணாமலை தேரடி வீதியிலுள்ள முருகர் தேர் பக்கத்தில் `அமானுஷ்ய’ உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அமானுஷ்யத்துக்குக் காரணம், காரின் முன்பக்க டேஷ்போர்டு பகுதியில் ஏழு மனித மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது தான். பேனட் மீதும் கயிலாய மலையில் சிவபெருமான் அமர்ந்திருப்பதைபோல பெரிய ஸ்டிக்கர் இருந்தன. சிவன் மடியில் அமர்ந்தவாறு, வாட்டசாட்டமான உடல்வாகுடைய அகோரி ஒருவர் கழுத்தில் மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து படுபயங்கரமாகக் காட்சியளித்த புகைப்பட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தன. காரைச் சுற்றிலும் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடுகளுடன் ஆங்கிலத்தில் `டேஞ்சர்’ என்ற மண்டை ஓட்டு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
முன் பக்கமும், பின் பக்கமும் நெம்பர் பிளேட்டுக்குப் பதிலாக `அகோரி நாக சாது’ என ஆங்கிலத்தில் பெயர் பலகை தொங்கவிடப்பட்டிருந்தன. மிரட்சியை ஏற்படுத்திய அந்த காரை பொதுமக்கள் சூழ்ந்து பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். தகலவறிந்ததும், திருவண்ணாமலை போலீஸார் விரைந்து வந்து காரை நோட்டமிட்டனர். `அகோரி நாக சாது’ என தொங்கிய பெயர் பலகையை தூக்கி பார்த்தபோது, `TN 19 BU 6939’ என்பதுதான் காரின் பதிவெண் எனத் தெரியவந்தது. காரில் இருந்த செல் நெம்பரைத் தொடர்புகொண்டு, `உரிமையாளர் யார், எங்கே இருக்கிறார்?’ என்று விசாரித்தனர்.
எதிர் முனையில் பேசிய நபர், `நான்தான் கார் உரிமையாளர்’ என்று சொன்னதால், அவரை வரச் சொன்னார்கள். போலீஸார் போனில் பேசிய பிறகும் சாமி தரிசனம் முடித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து பொறுமையாக வந்தார் அகோரி. காரின் பேனட் மீது ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் இருந்த அதே உருவம். சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, முகம் தொடங்கி உடல் முழுவதும் பூசிக்கொண்டிருந்தார். பெயர் ‘அகோரி நாக சாது’ எனக் கூறிய அவர், `நானே கடவுள். நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு..’ என ரைம்மிங்காகவும் பேசினார்.
இதையடுத்து போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்தனர். உடனே கோபப்பட்டு ஆடைகளை களைந்ததால், மிரட்சியைடைந்த போலீஸார் அவரை காருக்குள் அமர வைத்தே விசாரணை மேற்கொண்டனர். `ரிஷிகேஷ்’ பகுதியில் தங்கியிருக்கிறேன். தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன். பார்க்கிங் செய்ய இடம் இல்லாததால், தேர் பக்கத்தில் காரை நிறுத்திவிட்டுச் சென்றேன். தற்போது, பக்கத்திலுள்ள ஆசிரமத்துக்குச் செல்லவிருக்கிறேன்’ என்ற அகோரியிடம்... தன்மையாக நடந்துகொண்ட போலீஸார், வழக்கு ஏதும் பதியாமல் போக்குவரத்து விதிகளை மீறியதாக மட்டும் மூன்றாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். திகில் கிளப்பிய இந்த காரால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தேரடி வீதியே பரபரப்புக்குள்ளாகி போனது என்கின்றனர் திருவண்ணாமலை போலீஸார்.
from Vikatan Latest news https://ift.tt/csu1Sy2
0 Comments