விருதுநகரில் பாலியலுக்கு மறுத்த மூதாட்டி பேனாவால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், 'விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் வேலம்மாள் (வயது 75). இவர், மகள் லதா. இருவரின் வீடும் அருகருகே அமைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேலம்மாளுக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு லதா அவரின் வீட்டுக்கு திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர், மாலை 4 மணி அளவில் லதா, தன் தாயை பார்ப்பதற்காக மீண்டும் வேலம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வேலம்மாள் கண், கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த லதா, என்ன செய்வதென்று தெரியாமல் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சம்பவத்தன்று வேலம்மாளின் வீட்டருகே, பிற்பகல் சுமார் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர், முதுகில் பை அணிந்தபடி நின்று நோட்டமிட்டுள்ளார்.
இதைப்பார்த்த சுற்றத்தினர், சந்தேகத்தில் அந்த நபரை திட்டி, அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்தனர். எனவே, அந்த மர்ம நபர், மூதாட்டியை கொலைசெய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில், குறிப்பிட்ட அந்த நபர், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் யோக முருகனின் மகன் ஜீவராஜன் (வயது 24) என்பது தெரியவந்தது. அதையடுத்து சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை, ஜீவராஜனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஜீவராஜன்தான் மூதாட்டி வேலம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸிடம் ஜீவராஜன் அளித்த வாக்குமூலத்தில், 'கஞ்சா போதையில் மூதாட்டி வேலம்மாளை பாலியல் துன்புறுத்தலுக்கு கட்டாயப்படுத்தினேன். அவர் மறுத்து சத்தமிடவும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பயத்தில் கையிலிருந்த பால் பாயிண்ட் பேனாவால் மூதாட்டியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். பிறகு தான் அவர் இறந்துவிட்டார்' என தெரியவந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்' என்றனர். இதைத்தொடர்ந்து ஜீவராஜனை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
from Vikatan Latest news https://ift.tt/XNAKfa9
0 Comments