IND v AFG: பிரேக்கில் கிடைத்த மெசேஜ்? தடுமாறிய ஆப்கன்; சுழன்றடித்த சூர்யா! - இந்தியா வென்றது எப்படி?

சூப்பர் 8 சுற்றில் தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது இந்திய அணி. சர்ப்ரைஸ் கொடுக்கும் வல்லமை உடைய ஆப்கானிஸ்தான் இந்திய அணிக்குச் சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி தங்களின் அனுபவத்தின் வழி மிகச்சிறப்பாக ஆடி அசத்தி சௌகரியமாக போட்டியை வென்றிருக்கிறது.
India

ஆப்கானிஸ்தானுக்கு சேஸிங் என்றால் ஒவ்வாமை என்ற எண்ணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். இந்திய அணியின் பேட்டிங் முழுமையாக ஆகச்சிறப்பாகவும் இல்லை, மோசமாகவும் இல்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆடிய ஆட்டத்தில் இந்திய அணி நல்ல ஸ்கோரையே எடுத்தது.

பவர்ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசி வரும் ஃபசல் ஹக் ஃபரூக்கி மூன்றாவது ஓவரிலேயே ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டம்ப் லைனில் கொஞ்சம் ஃபுல்லாக வீசப்பட்ட பந்தைப் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் ஆனார் ஹிட்மேன். மோசமான ஷாட்! இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோஹித் இதே மாதிரியாக தொடர்ந்து அவுட் ஆகிறார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் சவுரப் நேத்ரவால்கருக்கு எதிராக இப்படித்தான் அவுட் ஆகியிருந்தார். இன்னொரு ஓப்பனரான விராட் கோலியும் வேகமாக ஆடவில்லை. பந்துக்கு பந்தாகத்தான் ரன்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகள் விழுந்த சமயத்தில் அந்தச் சரிவில் அப்படியே சிக்கிக்கொள்ளவில்லை.

Pant
துணிச்சலாக ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளேயில் கோலி அமைதியாக இருந்தாலும் பண்ட் ஸ்பின்னர்களை வெளுத்தெடுத்தார். நபியின் ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளையெல்லாம் அடித்தார்.

ஆனாலும் பவர்ப்ளே முடிந்தவுடனேயே ரஷீத் கானின் பந்தில் lbw ஆகி 20 ரன்களில் வெளியேறினார். 23 பந்துகளில் ஒரே ஒரு சிக்ஸரோடு 24 ரன்களை எடுத்திருந்த விராட் கோலியும் அழுத்தம் காரணமாக ரஷீத் கானின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார். சிவம் துபேவும் பெரிதாகச் சோபிக்கவில்லை. அவரும் ரஷீத் கானுக்கு இரையானர்.

ஆட்டத்தின் ஹீரோ சூர்யகுமார் யாதவ்தான். கடந்த போட்டியில் கடினமான பிட்ச்சில் 49 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யா இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி அசத்தினார். வழக்கம்போல 360 டிகிரியில் ஷாட்களை ஆடி மிரட்டினார். எல்லாமே க்ளீன் ஹிட்கள், அப்படியே ஷாட் ஆடிவிட்டு அவர் கொடுத்த போஸ்கள் ஃபோட்டோகிராபர்களுக்கு சரியான தீனி. அபாயமாகத் தெரிந்த ரஷீத் கான், ஃபசல் ஹக் ஃபரூக்கியின் பந்துகளிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். ஹர்திக் பாண்டியாவும் சூர்யாவுடன் ஒத்துழைத்து சிறப்பாக ஆடினார். 27 பந்துகளில் அரைசதத்தை கடந்த சூர்யா, ஃபரூக்கி வீசிய அடுத்த பந்திலேயே மீண்டும் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார்.

SKY
"சூர்யா மயிலறகால் பேட்டிங் ஆடுவதைப் போல இருக்கிறது" என ஹர்ஷா போக்லே வர்ணனையில் கூறினார். சூர்யாவின் ஆட்டத்தைப் பார்க்க அத்தனை அநாயசமாகத்தான் இருந்தது. ஹர்திக் தன் பங்குக்கு 32 ரன்களைச் சேர்த்து நவீன் உல் ஹக்கின் பந்தில் அவுட் ஆகினார். கடைசியில் அக்சர் கொஞ்சம் அதிரடியாக ரன்கள் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்களைச் சேர்த்தது.

ஆப்கானிஸ்தானுக்கு 182 ரன்கள் இலக்கு. சேஸிங் என்றால் அவர்களுக்கு ஒத்துவராது. லீக் சுற்றிலேயே வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக வேண்டுமென்றே சேஸிங் செய்து சூடுபட்டுக் கொண்டனர். இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் கொஞ்சம் வேகமாகவே சேஸிங்கைத் தொடங்கினர். குர்பாஸ் ஒரு பவுண்டரியையும் சிக்ஸரையும் அடித்தார். முதல் ஓவரில் 13 ரன்கள். இரண்டாவது ஓவரில் பும்ராவின் கையில் பந்து. பும்ராவுக்கு இப்போதெல்லாம் விக்கெட் எடுப்பது அத்தனை எளிதாக மாறியிருக்கிறது. அநாயசமாக விக்கெட்டுகளை எடுக்கிறார். விக்கெட்டுகளுக்காக அவர் போராடுவதைப் போலவே தெரியவில்லை. அவர் வீசினாலே விக்கெட்டுகள்தான் எனும் நிலை வந்திருக்கிறது.

Bumrah

துடிப்பாக ஆட நினைத்த குர்பாஸ், பும்ரா கொஞ்சம் ஒயிடாக வீசிய இரண்டாவது பந்துக்கே இறங்கி வந்து பெரிய ஷாட்டை ஆட முயன்று எட்ஜ் வாங்கினார். அடுத்த ஓவரில் இன்னொரு ஓப்பனரான ஷெசாயின் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். டைட்டான லைன் & லெந்த்தில் மேலே வந்து மோதிய பந்தை என்ன செய்வதென்றே தெரியாமல் பேட்டை விட்டு கேட்ச் ஆகி வெளியேறினார். பவர்ப்ளேக்குள்ளாக அக்சரும் வந்துவிட்டார். அவரும் கட்டுக்கோப்பாக வீசினார். இடம் கொடுக்காமல் டைட்டாக லெக் ஸ்டம்பை நோக்கி அக்சர் வீசிய பந்தை லெக் சைடில் நகர்ந்து வந்து ஷெசாய் அடிக்க முயன்று அப்படியே கவர்ஸில் ரோஹித்திடம் கேட்ச் ஆனார். பவர்ப்ளேக்குள்ளாக 35 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் தடுமாறியது. இந்தச் சமயத்தில் குல்பதீனும் அஷ்மத்துல்லா ஒமர்சாயும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். நின்று நிதானமாக ஆடினர்.

10 ஓவர்களில் 66 ரன்கள் வந்திருந்தன. இவர்கள் இருவரும் இணைந்து 43 ரன்களைச் சேர்த்திருந்தனர். ரன்ரேட் எகிறிக்கொண்டு செல்கிறது, வேகமாக ஆடுங்கள் என இருவருக்கும் ட்ரிங்ஸ் பிரேக்கில் மெசேஜ் வந்திருக்கக்கூடும். இதன் விளைவாக பெரிய ஷாட்டுக்கு முயன்று குல்தீப் மற்றும் ஜடேஜாவின் ஓவர்களில் இருவரும் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகினர். இதன்பிறகு ஆட்டம் அப்படியே இந்தியாவின் கைக்குள் வந்தது. ஸ்லிப் வைத்து ஸ்பின்னர்களைக் கொண்டு அட்டாக் செய்து அசத்தினர். ஆப்கானிஸ்தானால் இதன்பிறகு வெற்றியை நோக்கி முன்னேற முடியவில்லை. இந்தியா வென்றது. சூர்யகுமார் யாதவ்வின் அரைசதமும், பௌலர்களின் கட்டுக்கோப்பான பௌலிங்குமே இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.

India

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியை இந்திய அணி வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் சோபிக்கத் தவறியதைத் தவிர்த்து இந்திய அணிக்குப் பெரிய கவலை எதுவுமில்லை.


from Vikatan Latest news https://ift.tt/zl4dk2G

Post a Comment

0 Comments