IND v IRE: `ஐயா இது டெஸ்ட் மேட்ச்சா, டி20 ய்யாங்கய்யா?' இழுவையான ஆட்டத்தைச் சிறப்பாக வென்ற இந்தியா!

ஐ.சி.சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் படுரகசியமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையின் மீது இன்று கொஞ்சமாக ரசிகர்களின் கவனம் திரும்பியிருந்தது. காரணம், இந்திய அணிதான். தனது முதல் போட்டியில் அயர்லாந்தை இந்திய அணி எதிர்கொண்டிருந்தது. அமெரிக்காவில் நடக்கும் போட்டிகள் பெரும்பாலும் 'சங்கீத ஸ்வரங்கள்...' பாணியில் இழுவையாகத்தான் இருக்கின்றன. இந்த இந்தியா Vs அயர்லாந்து போட்டியும் அதற்கு விதிவிலக்கில்லை. முழுக்க முழுக்க பௌலர்கள் ஆதிக்கம் செலுத்த, பேட்டர்கள் தட்டுத்தடுமாறி அவதிப்பட்ட ஆட்டமாகத்தான் இந்த ஆட்டமும் இருந்தது.

Ind v Ire

"இதே மைதானாத்தில் ஒரு பயிற்சி போட்டியில் ஆடியிருக்கிறோம். ஆனாலும் இங்கிருக்கும் களச்சூழலை இன்னும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. போட்டி கொஞ்சம் சவால்மிக்கதாகத்தான் இருக்கும்" என்றே ரோஹித் டாஸில் பேசியிருந்தார். கடைசியாக இதே மைதானத்தில் நடப்பு தொடரில் இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் மோதிய போட்டி நடந்திருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு 78 ரன்கள்தான் இலக்கு. அந்த சின்ன டார்கெட்டையே இழுத்து 17வது ஓவரில்தான் தென்னாப்பிரிக்கா வென்றது. பிட்ச் அந்தளவுக்கு மெதுவாக பௌலர்களுக்குச் சாதகமாக இருந்தது. பேட்டர்கள் ஷாட்கள் ஆடவும் பந்தைச் சரியாக கனெக்ட் செய்யவுமே தடுமாறியிருந்தனர். பேட்டிங் ஆடக் கடினமாக இருக்கும் பிட்ச்சை மனதில் வைத்துதான் இந்திய அணியின் லெவனும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. குல்தீப் யாதவ் அல்லது சஹால் என முழுநேர ஸ்பின்னர்களில் ஒருவர் கட்டாயம் லெவனில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லெவனில் அக்சர் படேல் இருந்தார். காரணம் அவர் ஒரு ஆல்ரவுண்டர். அவரின் மூலம் பேட்டிங் ஆர்டரை இன்னும் நீட்டிக்கலாம் என்பதுதான் இந்திய அணியின் திட்டம்.

ரோஹித் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பிட்ச் எதிர்பார்த்தபடியே பேட்டர்களுக்குச் சிரமமாக இருந்தது. அயர்லாந்து தட்டுத்தடுமாறியது. 16 ஓவர்களில் 96 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இந்திய பௌலர்களும் மிரட்டியிருந்தனர். சிராஜ், அர்ஷ்தீப் சிங், பும்ரா மூவரும்தான் பவர்ப்ளேயில் ஓவர்களை வீசியிருந்தனர். பவர்ப்ளேயில் அயர்லாந்து அணி 26 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி என இருவரின் விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங்கே வீழ்த்தியிருந்தார்.

India
இந்திய பௌலர்கள் அயர்லாந்து பேட்டர்களுக்கு இடமே கொடுக்கவில்லை. டைட்டான லைனில் குட் லெந்திலும் ஷார்ட் பிட்ச்சாகவும் தொடர்ந்து வீசி அசத்தினர். 80% டெலிவரிகளை இப்படியேதான் வீசியிருந்தனர்.
India

அயர்லாந்து பேட்டர்களும் ஷாட் ஆட இடம் கிடைக்காமலும் சரியாக கனெக்ட் செய்ய முடியாமலும் தடுமாறினர். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்திலேயே கொஞ்சம் புல்லாக வீசி பந்தைத் திருப்பி டக்கரின் மிடில் ஸ்டம்பை சிதறடித்தார். அயர்லாந்து அணியால் ஆரம்பக்கட்ட வீழ்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. பும்ராவெல்லாம் 3 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். எல்லா பேட்டர்களும் பெவிலியனுக்கும் க்ரீஸுக்கும் மாறி மாறி நடந்துகொண்டு மட்டுமே இருந்தனர். 60-70 ரன்களுக்குள் அயர்லாந்து வீழும் என எதிர்பார்க்கையில் டெலானி என்கிற பேட்டர் மட்டும் அர்ஷ்தீப் சிங்கின் ஓவரில் 17 ரன்களைச் சேர்த்து கொஞ்சம் வேகம் கூட்டி அயர்லாந்தை 96 ரன்களுக்கு கொண்டு வந்தார். அவரும் ரன் அவுட் ஆக 16 ஓவர்களில் அயர்லாந்து ஆல் அவுட் ஆனது.

இந்தியாவுக்கு 97 ரன்கள் இலக்கு. இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் நிச்சயமாக கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றே தோன்றியது. அதேமாதிரிதான் இந்திய அணியும் கொஞ்சம் தடுமாறியது. விராட் கோலியும் ரோஹித்தும் ஓப்பனர்கள். சின்ன டார்கெட் என்பதால் ஆரம்பத்திலேயே அட்டாக் செய்து வேகமாக முடிக்க நினைத்தனர். அயர்லாந்தும் இரண்டு ஸ்லிப்களையெல்லாம் வைத்து அட்டாக் செய்திருந்தது. விராட் கோலி பெரிய ஷாட்டுக்கு ஆசைப்பட்டு ஒரே ரன்னில் அடேரின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். நம்பர் 3-ல் பண்ட் வந்தார். ரோஹித்தும் பண்ட்டுமே கூட தொடர்ந்து அட்டாக் செய்ய நினைத்தனர். ஆனால் அவர்களுக்கும் பந்து சரியாக கனெக்ட் ஆகவில்லை.

Rohit

அயர்லாந்து பௌலர்கள் நிறைய ஷார்ட் பிட்ச் டெலிவரிகளாக வீசினர். ரோஹித் நிறைய முறை பீட்டன் ஆனார். பண்ட்டும் தடுமாறினார். ஆனாலும் ரோஹித் தொடர்ந்து முயன்று அவ்வப்போது சரியாக கனெக்ட் செய்து சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அரைசதத்தை எட்டினார். ஆனால், ரிட்டையர்டு ஹர்ட் ஆகி பெவிலியனுக்கும் சென்றார். இடையில் ஒரு டெலிவரியை தோள்ப்பட்டை அருகே வாங்கியதில் அவருக்குக் கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டது. அதனால் வெளியேறினார். போட்டியில் இந்த விஷயம் மட்டும்தான் இந்திய ரசிகர்களுக்குக் கவலை அளிக்கும் விஷயமாக இருந்தது. மற்றபடி எல்லாமே மகிழ்ச்சிதான். 12.2 ஓவர்களில் டார்கெட்டை சேஸ் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

Team India
"இந்த மாதிரியான பிட்ச்களில் ஒரே லெந்த்தில் பௌலர்கள் தொடர்ந்து வீசி விக்கெட் எடுக்க வேண்டும். அர்ஷ்தீப்பைத் தவிர எங்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாருமே டெஸ்ட் ஆடியிருக்கிறார்கள்" என ரோஹித் போட்டிக்குப் பிறகு பேசியிருந்தார்.

உண்மையிலேயே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் செஷனை பார்ப்பது போன்றுதான் போட்டி இருந்தது. அதிரடியை விரும்பும் டி20 ரசிகர்களுக்கு இந்த விஷயமெல்லாம் செட் ஆகுமா, இந்த உலகக்கோப்பை ஹிட் ஆகுமா என்பதெல்லாம் பெரிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.



from Vikatan Latest news https://ift.tt/GThCZzg

Post a Comment

0 Comments