Motivation Story: `நீங்க ரொம்ப மாறிட்டீங்க..’ மனைவியைத் தேற்ற முடியுமா?- இல்லறத்தின் முக்கியப் பாடம்

`என் மனைவியை என்னைத் திருமணம் செய்துகொள்ள வைத்த திறமைதான், என்னுடைய மிகப்பெரிய சாதனை.’ - வின்ஸ்டன் சர்ச்சில்.

`அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, `இல்லறம் என்பதுதான் சிறந்த அறம்’ என்பது இதன் பொருள். குடும்பத்தின் மகத்துவம் இருக்கட்டும். இன்றைக்கு அதிகரித்துவரும் விவாகரத்துகளின் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது. `இந்தியாவில் நடைபெறும் நூறு திருமணங்களில் ஒன்று விவாகரத்தில் முடிகிறது’ (1.1%) என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஸ்வீடன், அமெரிக்காவிலெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது இதன் எண்ணிக்கை.

வின்ஸ்டன் சர்ச்சில்

விவாகரத்துகளுக்கு கூடா ஒழுக்கம், மனதாலும் உடலாலும் பாதிப்பை ஏற்படுத்துவது, கைவிடுதல், பரஸ்பர நம்பிக்கை இன்மை, புரிதல் இன்மை... என என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், தம்பதிக்கிடையில் எழும் ஈகோ உரசலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போவதும்தான் முக்கியக் காரணங்கள்.  `யாரு அப்பிடிப் பேசினா... அவதானே... போகட்டும்’, `யாரு என்கிட்டக் கோபப்பட்டது... அவர்தானே... விடு’ என்கிற விட்டுக்கொடுத்தல் கணவன், மனைவிக்குள் இருந்தால் இல்லறம் இனிதாகிவிடும்.

`நான் இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணினதில்லை. கல்யாணம் பண்ணின தினத்துலருந்து என் வொயிஃபை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்’ என்றார் ஒருவர். இது விளையாட்டுக்குச் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. ஒரு மனிதர் தன் இறுதிக்காலம் வரை தன் மனைவியை நேசித்துக்கொண்டேயிருந்தால்... அதேபோல மனைவி, தன் கணவரை வயதானாலும் நேசித்துக்கொண்டேயிருந்தால் அந்தத் தம்பதிக்குள் சண்டை, சச்சரவு வருமா?  இந்த அன்பின் மேன்மையை விளக்குகிறது ஒரு கதை.

அன்றைக்கு அவள் மிகக் கோபமாக இருந்தாள். கணவன் முகத்தைப் பார்த்து இப்படிச் சொன்னாள்... ``நீங்க ரொம்ப மாறிட்டீங்க. அந்தப் பழைய மனுஷன் இல்லை நீங்க.’’

அவன் சிரித்தபடி அவளுடைய காதில் கிசுகிசுத்தான்... ``ஆமாமாம். பார்க்குறேன்... யாரு மாறிட்டாங்க, யாரு மாறலைன்னு.’’

அவள் கண்களை அகல விரித்து, கோபத்தோடு அவனைப் பார்த்தாள். ``என்ன?’’

அவன் அதற்கும் பதில் சொல்லாமல், அவளைப் பார்த்து சிரித்தான். அவளுக்கு அவனைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. பெருமூச்சுவிட்டபடி, தலைமுடியைக் கொண்டையாகப் போட்டுக்கொண்டாள். அறைக்குள் அங்குமிங்கும் எதையோ தேடினாள்.

`மிகச் சரியான, பொருத்தமான ஜோடி ஒன்று சேர்வது சிறந்த திருமணமல்ல. ஒருவருவருக்கொருவர் சரியில்லாத, பொருத்தமில்லாத ஜோடி தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை அனுபவிக்கக் கற்றுக்கொள்கிறார்களே... அதுதான் சிறந்த திருமணம்.’ - அமெரிக்க எழுத்தாளர் டேவ் மியூரர் (Dave Meurer).

அறை முழுக்கத் தன் மூக்குக் கண்ணாடியைத் தேடியபடியே தனக்குத் தானே முணுமுணுத்தாள்... ``இந்த மனுஷங்களுக்கு எப்பிடித்தான் இந்த மறதி வந்து தொலையுதோ... இன்னிக்கி என்ன நாளுன்னு கூடவா ஒரு மனுஷனுக்கு நினைவிருக்காது... என் தப்புதான். பெருசா ஏதோ கிஃப்ட் வாங்கிக் குடுப்பாருன்னு நினைச்சேன் பாரு... அது என் தப்புதான். இதுல ராத்திரியெல்லாம் எனக்குத் தூக்கம் வேற இல்லை, என்ன வாங்கிட்டு வருவாரோன்னு ஆசை வேற...  ஹூம்...’’



``இந்தக் கண்ணாடியைத்தானே தேடுறே... ஆமாம் நீ ஏதாவது சொன்னியா?’’ என்றபடி அவன், அவளுடைய மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொடுத்தான்.

அவள் கடுகடு முகத்துடன் ``தேங்க்ஸ்...’’ என்று சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டாள். ``ஆமா. சொன்னேன். அதைப் பத்தி உங்களுக்கென்ன... உங்க வேலையைப் பாருங்க.’’

அவன் அதற்கும் சிரித்தான். பிறகு, ``இன்னிக்கி என்ன டிபன்?’’ என்று கேட்டான்.

அவள் சமையலறைக்குள் நுழைந்தபடி, சத்தம் போட்டுச் சொன்னாள்... ``இன்னிக்கி நான் எதுவும் சமைக்கப்போறதில்லை. பட்டினி கிடக்கப்போறேன். உங்களுக்கு வேணும்னா நீங்களே சமைச்சுக்கோங்க...’’

அப்படிச் சொன்னதற்கும் அவன் சிரிப்பது, அவளுக்குக் கேட்டது. அவளுக்கு மனம் என்னவோ செய்தது. `என்ன மனுஷன் இவர்... எங்கேயாவது ஓடிவிடலாமா?’ என்று தோன்றியது. ஏதோ யோசனையில் ஃபிரிட்ஜைத் திறந்தாள். அங்கே ஒரு துண்டுக் காகிதம். அவன்தான்... அவனேதான் ஏதோ எழுதிவைத்திருந்தான். அவள் அதை எடுத்துப் படித்தாள். ``ஓகே... இப்பவாவது சிரியேன். சரி, போய் உன் பர்ஸைத் திறந்து பாரு.’’

`இந்தக் குறும்புதான் இவருக்குப் போக மாட்டேங்குது...’ என்று நினைத்தவளாக லேசாகச் சிரித்துக்கொண்டாள். தன் அறைக்குப் போனாள். தன் பர்ஸைத் திறந்தாள். அதற்குள் இன்னொரு துண்டுச்சீட்டு. அதிலும் அவன்தான் எதையோ எழுதிவைத்திருந்தான். ``நம்ப வீட்டு வாசல்ல ஒரு ரோஜாச்செடி வெச்சிருக்கேல்ல... அதுகிட்ட போய்ப் பாரு.’’

அவள் டென்ஷனோடு வீட்டு வாசலுக்கு ஓடினாள். அவன், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

`இந்த உலகில் மிக உயர்ந்த மகிழ்ச்சியைத் தருவது திருமணம்தான்.’ - அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், விமர்சகர் வில்லியம் லியோன் பெல்ப்ஸ் (William Lyon Phelps).

ரோஜாச்செடிக்கு அருகேயும் எதுவும் இல்லை. இன்னொரு துண்டுச்சீட்டு. அதில், ``யம்மாடி... என்னா அவசரம்... சரி, சரி. நம்ம வீட்டு வாஷிங் மெஷின் இருக்குல்ல... அதுக்கு மேல ஒண்ணு இருக்கு. அதைப் பாரு’’ என்று எழுதியிருந்தது.  

அவள் குளியலறைக்கு ஓடினாள். வாஷிங் மெஷின் மேல் இன்னொரு துண்டுச்சீட்டு. அவள் அதை எடுத்துப் படித்தாள். ``ஓடி ஓடி உனக்கு ரொம்ப மூச்சு வாங்குதுல்ல... கோவிச்சுக்காதே. இனிமே உன்னை ஓடவிட மாட்டேன். உன் பீரோவைத் திறந்து பாரு.’’

தன்னுடைய அறைக்குப் போனாள். பீரோவைத் திறந்தாள். புதிதாக ஏதாவது கண்ணில் படுகிறதா என்று தேடினாள். புதிதாக எதுவும் தெரியவில்லை. அவளுக்குப் பின்னால் முதுகில் மூச்சுக்காற்றுப் படும்படி வந்து நின்றான் அவன். ``ரிலாக்ஸும்மா. உன் வலது கைப்பக்கம் என்ன இருக்குன்னு பாரு.’’

அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் சின்னதாக, ஒரு பழைய ஜுவல் பாக்ஸ் இருந்தது. அவள் அதை எடுத்துத் திறந்தாள். இறுக்கமாக மூடியிருந்த அந்தச் சிறிய பெட்டியை அவள் ஜாக்கிரதையாகத் திறந்தாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன. அதற்குள் ஒரு சிறிய தங்கச் சங்கிலி இருந்தது. அவள் திரும்பி அவனைப் புன்னகையோடும் மகிழ்ச்சியோடும் பார்த்தாள். அவன், அவளுடைய கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான். ``நான் ரொம்ப மாறிட்டேன்ல?’’ என்று கேட்டான். அவள், அவனை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

``இது நம்ம கல்யாணத்தப்போ நான் போட்டிருந்த செயின்தானே... அப்புறம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, நம்ம பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில சேத்தப்போ அடகுவெச்சோமே... அதே செயின்தானே?’’

அவன் சத்தமாகச் சிரித்தான். ``சந்தேகமே இல்லை... நீ மாறவேயில்லை. அப்பிடியேதான் இருக்கே... உனக்கு பிரமாதமான ஞாபகசக்தி’’ என்றான்.

அவள் சங்கிலியை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் அவன், தன் சுருக்கம் விழுந்த, தளர்ந்த கைகளால், அவள் கைகளைப் பிடித்து, ``மனமார்ந்த 65-ம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்றான். 



from Vikatan Latest news https://ift.tt/s4imR1H

Post a Comment

0 Comments