SA vs BAN: தோல்வி பயத்தைக் காட்டிய வங்கதேசம்; திரில்லாக வென்ற தென்னாப்பிரிக்கா - என்ன நடந்தது?

தங்களது சர்வதேச டி20 வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டிருக்கிறது வங்கதேசம். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 119 ரன்களை டிஃபெண்ட் செய்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அதே மைதானத்தில் 113 ரன்களை டிஃபெண்ட் செய்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. கடைசி வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் வங்கதேச அணி எங்கே கோட்டைவிட்டது?

SA v BAN

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த அதே நியூயார்க் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடந்திருந்தது. தென்னாப்பிரிக்கா அணி தங்களின் முதல் இரண்டு போட்டிகளையும் கூட இந்த மைதானத்தில்தான் ஆடியிருந்தது. இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கெதிரான அந்த இரண்டு போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்கா அணி டார்கெட்டை சேஸ்தான் செய்திருந்தது. சிறிய டார்கெட்தான். ஆனாலுமே தென்னாப்பிரிக்கா அணி சிரமப்பட்டுதான் சேஸ் செய்திருந்தது. நெதர்லாந்து அணியெல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு தோல்வி பயத்தை காட்டியிருந்தது. சேஸ் சிரமமாக இருப்பதால் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், சேஸிங்கை விட அவர்கள் டார்கெட்டை செட் செய்கிற பணி இன்னும் கொடூரமாக அமைந்தது. தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 113 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே வங்கதேச பௌலர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

Tanzim
பவர்ப்ளேக்குள்ளாக மட்டுமே தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் தன்ஷீம் ஹசன் ஷகீப் வீழ்த்தியிருந்தார்.

பிட்ச் ஒரு மாதிரியாக வித்தியாசமாக இருந்தது. சில சமயங்களில் பந்து எதிர்பார்த்ததை விடத் தாழ்வாக பேட்டர்களுக்குச் சென்றது. சில சமயங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகள் நன்றாக எடுபட்டன. இதை தன்ஷீம் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். முதல் ஓவரிலேயே ரீஷா ஹென்றிக்ஸை lbw ஆக்கினார். ஹென்றிக்ஸ் ரிவியூ கூட எடுக்கவில்லை. அத்தனை துல்லியமாக பார்த்தவுடனேயே அவுட் என கூறும் வகையிலான டெலிவரி அது. அடுத்ததாக தன்ஷீமின் வலையில் சிக்கியவர் டீகாக், ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து இன்கம்மிங் டெலிவரியாக வீசி ஸ்டம்புகளை சிதறச் செய்தார். பவர்ப்ளேயில் தொடர்ச்சியாக தன்ஷீம் வீசிய 3வது ஓவரில் ஸ்டப்ஸூம் காலி. 30 யார்டு வட்டத்துக்குள்ளேயே! ஷகீப் அல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இடையில் டஸ்கின் அகமது மிகச்சிறப்பாக ஒரு டெலிவரியை வீசி மார்க்ரமை போல்டாக்கினார்.

Klassen

பவர்ப்ளேயில் தென்னாப்பிரிக்கா அணி 25 ரன்களை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. க்ளாசனும் மில்லரும் கூட்டணி சேர்ந்தனர். கடந்த போட்டியை போல மில்லர் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய தேவை இருந்தது. க்ளாசனும் பொறுப்பை உணர்ந்து நின்று ஆடினார். இரண்டு போட்டிகளை இந்த மைதானத்தில் ஆடியிருந்ததால் இருவருக்குமே நல்ல புரிதல் இருந்தது.

அவசரப்பட்டு விக்கெட் விடாமல் உருட்டி உருட்டி 120-130 ரன்களைச் சேர்த்துவிட்டால் கூட சவாலளிக்கலாம் என்பதை அறிந்திருந்தனர். இதை மனதில் வைத்துக் கொண்டே ஆடினர்.

அதனால் அடிக்கடி ரிஸ்க் எடுக்கவில்லை. நிறைய டாட்கள் ஆடினார். ஓடி ஓடி ரன்கள் எடுப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினர். இருவரும் இப்படி ஆடியதால் வங்கதேச பௌலர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. இடையில் மில்லருக்கு மட்டும் ஒரு கேட்ச்சை டிராப் செய்திருந்தார்கள். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடைசி 3 ஓவர்களில் அதிரடியாக ஆட நினைத்தனர். ஆனால், அப்படி பேட்டை வீச நினைக்கையிலேயே இருவரும் அவுட் ஆகினர். டஸ்கின் அகமது 46 ரன்களிலிருந்த க்ளாசனின் விக்கெட்டை வீழ்த்தினார். ரிஷாத் ஹொசைன் 29 ரன்களிலிருந்த மில்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் காலி. தென்னாப்பிரிக்காவால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Bangladesh

வங்கதேச அணியின் சேஸிங், கடைசிப் பந்து வரை திரில்லாகச் சென்றது. தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கை பார்த்ததில் வங்கதேச அணி கொஞ்சம் தெளிவாக இருந்தது. விக்கெட் விடாமல் நின்றால் மட்டும்தான் ஆட்டத்தை வெல்ல முடியும் என்பதை உணர்ந்திருந்தனர். பவர்ப்ளேயில் 29 ரன்கள் மட்டுமே வந்திருந்தன. ஆனால் ஒரே ஒரு விக்கெட் மட்டும்தான் விடப்பட்டிருந்தது. தன்ஷீத் ஹசன் மட்டுமே ரபாடாவின் பந்தில் எட்ஜ் ஆகி டீகாக்கிடம் கேச் ஆகியிருந்தார். கேப்டன் ஷாண்டோவும் லிட்டன் தாஸூம் பவர்ப்ளேயில் விக்கெட்டை விடாமல் கடந்துவிட்டனர். ஆனால், பவர்ப்ளே முடிந்தவுடன் வேகமாக 3 விக்கெட்டுகளை இழந்தது.

Hridoy

பவர்ப்ளே முடிந்தவுடனேயே லிட்டன் தாஸ் கேசவ் மகாராஜாவின் பந்தில் அவுட் ஆனார். நோர்கியா வீசிய அற்புதமான ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஷகீப் அல் ஹசனும் ஷாண்டோவும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 12 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தென்னாப்பிரிக்காவும் அதே சமயத்தில் அதே நிலையில்தான் இருந்திருந்தது. போட்டி ஒரு மாதிரியாக சமநிலையாக செல்வதைப் போலத் தோன்றியது. ஆனால், ஹிரிதாய் மற்றும் மஹமதுல்லா இருவரும் 44 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹிரிதாய் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். இலங்கைக்கு எதிரான போட்டியில் இவர் 20 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தார். ஹிரிதாய் - மஹமதுல்லா கூட்டணி அப்படியே நின்றால் வங்கதேசம் போட்டியை வென்றுவிடும் என்ற நிலையே இருந்தது. வங்கதேச ரசிகர்களும் கொண்டாட்டத்திற்குத் தயாராகினர். ஆனால், டெத் ஓவர்களில் ட்விஸ்ட் காத்திருந்தது.

ரபாடா வீசிய 18வது ஓவரில் 34 ரன்களில் ஹிரிதாய் lbw ஆகினார். போட்டி நெருக்கமானது. பரபரப்பு கூடியது. அழுத்தம் கூடியது. கடைசி ஓவரில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன.
Mahmudullah

ஸ்பின்னர் கேசவ் மகாராஜாதான் கடைசி ஓவரை வீசினார். மூன்றாவது பந்தில் ஜேக்கர் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 2 பந்துகளில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை. செட்டிலான மஹமதுல்லா ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசிக்கு முந்தைய அந்த பந்து ஒரு புல் டாஸ். மஹமதுல்லாவும் நேராக பெரிய ஷாட்டுக்குச் சென்றார். சிக்ஸரைப் போலவே தோன்றியது ஆனால் லாங் ஆனில் எய்டன் மார்க்ரம் அற்புதமாக கேட்ச் பிடித்தார். சில இன்ச் இடைவெளியில் சிக்ஸரைத் தவறவிட்டு மஹமதுல்லா வெளியேற வங்கதேசமும் அதிர்ச்சிகரமாக தோற்றது. தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

South Africa

வங்கதேசம் தோற்றிருந்தாலும் கடைசி வரை ஆட்டத்தில் இருந்தது. கடைசி வரை போராடியது. அதற்காகவே அவர்களைப் பாராட்டலாம்.



from Vikatan Latest news https://ift.tt/LdYbe4C

Post a Comment

0 Comments