விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண வீட்டில் மொய் பணத்தை திருடியதாக இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. இவரின் மகன் சக்திவேலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது, திருமண மண்டபத்திலிருந்து மொய்ப்பணம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த பை மாயமானது.
இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துபார்த்ததில், இரண்டு பெண்கள் மொய்ப்பணம் வைத்திருந்த பையை திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து சி.சி.டி.வி கேமராவில் பதிவான பெண்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்துகையில், அவர்கள் உசிலம்பட்டி அருகே உள்ள அயன்கோவில்பட்டியைச் சேர்ந்த முத்துச்செல்வி (வயது 54), பாண்டியம்மாள் (42) என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் முத்துச்செல்வியையும், பாண்டியம்மாளையும் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில், முத்துச்செல்வி, பாண்டியம்மாள் இருவரும் திருமண விழாவில் உறவினர்கள் போல் கலந்துள்ளனர். அங்கு, மொய் எழுதுபவரிடம் சில்லறை வாங்குவது போல் நடித்து அவரின் கவனத்தை திசைத்திருப்பி மொய்ப்பணம் வைத்திருந்த பையை திருடிச்சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் சில்லறை வாங்குவது போல் நடித்து, கவனத்தை திசைதிருப்பி பல்வேறு இடங்களிலும் நூதன முறையில் திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முத்துச்செல்வியையும், பாண்டியமாளையும் போலீஸார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து மொய் பணம் 1 லட்சத்து 71,000 பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/RHdQqGa
0 Comments