இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 ஜூன் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி நிர்வகிக்கும் தொகை ரூ. 61,33,227 கோடியாக உயர்ந்துள்ளது. இது இதுவரைக்கும் இல்லாத மிக அதிக தொகையாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் 6 மடங்கு அதிகரித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் மொத்த முதலீட்டு கணக்குகளின் (Folios) எண்ணிக்கை 19,10,47,118 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 15,32,56,488 ஆக உள்ளது. தொடர்ந்து 40 மாதங்களாக பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்து வருகிறது. 2024 ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.40,608.19 கோடி புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.பி முதலீடு..!
சீரான முதலீட்டுத் திட்டத்தின் (Systematic Investment Plan) கீழ் செய்யும் முதலீட்டு தொகை 2024 ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஜூன் மாதத்தில் இந்த எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை ரூ. 14,734 கோடியாக இருந்தது. தொடர்ந்து எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை அதிகரித்து வருகிறது.
அதன் விவரம் வருமாறு:
2024 ஜனவரி - ரூ. 18,838 கோடி
2024 பிப்ரவரி - ரூ. 19,187 கோடி
2024 மார்ச் - ரூ. 19,271 கோடி
2024 ஏப்ரல் - ரூ. 20,371 கோடி
2024 மே - ரூ. 20,904 கோடி
2024 ஜூன் - ரூ. 21,262 கோடி
மொத்த எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 8.99 கோடியாக உள்ளது. 2024 ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 55,12,962 பேர் பதிவு செய்துள்ளார்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட் சொத்துகளின் மதிப்பு ரூ. 12,43,791.71 கோடியாக அதிகரித்துள்ளது.
சாதகமான இந்தியப் பங்குச் சந்தை..!
செபி மற்றும் ஆம்ஃபி அமைப்புகளின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் எஸ்.ஐ.பி முதலீடு பிரபலமாகி இருக்கிறது.
இந்தப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில்தான் எப்போதும் செயல்பட்டு வருகிறது. இதனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை மிகவும் லாபகரமாக உள்ளது.
அதாவது, ரூபி காஸ்ட் ஆவரேஜ் (Rupee Cost Averaging) என்கிற முறையில் சராசரியாக அதிக யூனிட்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைத்து வருகிறது. மேலும், இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்து வருவதும் பங்குச் சந்தை அதிக லாபம் கொடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
மேலும், தற்போது இந்தியப் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையான பி.எஸ்.இ-ன் சென்செக்ஸ் குறியீடு 80000 புள்ளிகளுக்கு மேலாகவும் தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ-ன் நிஃப்டி குறியீடு 25000 புள்ளிகளுக்கு மேலாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபகரமான முதலீட்டு முறைகள்..!
பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும் தற்போதைய நிலையில் மொத்த முதலீட்டை மேற்கொள்வது அவ்வளவு லாபகரமாக இருக்காது. எஸ்.ஐ.பி முறை சிறந்தாக இருக்கும்.
மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டியிருந்தால் சீரான பரிமாற்ற திட்டம் (Systematic Transfer Plan - STP) என்கிற முறையை பயன்படுத்தி முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அதாவது, மொத்தத் தொகையை ரிஸ்க் இல்லாத லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது மணி மார்க்கெட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும். அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுக்கு இதிலிருந்து முதலீட்டை 12 அல்லது 18 மாதங்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை மாற்ற வேண்டும்.
இப்படி செய்வது மூலம் முதலீட்டில் ரிஸ்க் குறைந்து, எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலமான ரூபி காஸ்ட் ஆவரேஜ் பலனும் கிடைக்கும். மேலும், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய நேரம் காலம் பார்க்க தேவையில்லை.
எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து செல்வம் சேர்க்க வாழ்த்துகள்..!
from Vikatan Latest news https://ift.tt/secS4C9
0 Comments