உடலெங்கும் முடி உதிர்வை ஏற்படுத்தும் புழுவெட்டு... காரணம் முதல் சிகிச்சைகள் வரை... | சருமநலம் -26

‘ஆண் என்ன... பெண் என்ன... நீ என்ன... நான் என்ன...' என பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அழகைத் தருவது, தலைமுடிதான். அழகுக்கு ஆதாரமான தலைமுடியை அதிகம் பாதிக்கக்கூடிய சரும நோய்களில் ஒன்று புழுவெட்டு.

புழுவெட்டு என்பது...

தலையில் திட்டுத்திட்டாக ஆங்காங்கே முடி உதிர்ந்து, அவ்விடங்கள் வழுக்கையாகக் காணப்படும் ஒரு வகை சரும நோயே புழுவெட்டு. முடி உதிர்ந்த இடங்கள் மினுமினுப்பாகத் தோன்றும். சிறிய இடத்தில் ஆரம்பித்து, முடி உதிர்வு கூடிக்கொண்டே போய் வழுக்கைத் திட்டு பெரிதாகிக் கொண்டு வரும். தலையின் மொத்த முடிகளையும் இழக்க நேர்ந்தால் அதை 'அலோபேஷியா டோட்டாலிஸ்' ( Alopecia Totalis) என்றும் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முடிகளை இழந்தால் 'அலோபேஷியா யுனிவர்சாலிஸ்' ( Alopecia Universalis) என்றும் சொல்கிறோம். புழுவெட்டு எந்தப் பாலினத்தவரையும் தாக்கும். வயது வரம்பு இல்லை என்றாலும் சிறுவர் மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அதிகம் தாக்கும்.

முன்னந்தலையில் முடி உதிர்வு

நோயின் இயல்பு என்ன?

பெரும்பாலும் தலைமுடியைத்தான் தாக்கும் என்றாலும் மீசை, தாடி, புருவம் என உடலில் முடிகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பெரும்பாலும் வட்ட வடிவம் அல்லது நீள் வட்ட வடிவில் தோன்றும்.

முடி உதிர்ந்த இடம் வழுவழுப்பாகி, சொட்டையாகி விடும்.

சில வேளை விரல் நகங்களும் பாதிக்கப்படலாம்.

மீண்டும் முடிகள் வளர்வது இயலாமல் போகலாம் அல்லது முடி வளர்வதற்கான கால அவகாசம் அதிகரிக்கலாம்.

ஒரு வருடத்தில் இந்த பாதிப்பிலிருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டோரும் இருக்கிறார்கள். எனவே, இந்நோய் குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு மீண்டும் வரலாம் அல்லது நிரந்தரமாகக் குணமடையலாம்.

ஏன் வருகிறது?

இது ஒருவகையான ஆட்டோ இம்யூன் குறைபாடு. நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் ஆட்டோ இம்யூன் குறைபாடு பாதிப்பிற்கு ஏற்கெனவே உள்ளாகி இருந்தாலோ குடும்பத்தில் வேறு யாரேனும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தாலோ வரும் வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சைகள் உதவுமா?

ஆரம்பத்திலேயே சிகிச்சையைத் தொடங்குவதும், தொடர் மருத்துவ ஆலோசனையும் அவசியம். அனுபவமுள்ள சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி, நோய்க்கான உள் மருந்துகளுடன், முடி வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகளையும், உடலைப் பலப்படுத்தும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடி உதிர்வு பிரச்னை

எளிய மருத்துவக் குறிப்புகள்

2 சிறிய வெங்காயம், 3 மிளகு, அரை டீஸ்பூன் கல்லுப்பு- இம்மூன்றையும் அரைத்துப் பசை போலச் செய்து, புழுவெட்டு பாதித்த பகுதியில் பூசி வர, 2 ,3 நாள்களில், இம்மருந்தின் வேகத்தால், பாதித்த வழுவழுப்பான பகுதியில், வேர்க்குரு போன்று சிவந்து வரும். அப்போது மட்டும் வெங்காயப் பூச்சு பூசுவதை நிறுத்திவிட்டு, அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும். அதன் பின் மீண்டும் வெங்காயப் பூச்சைத் தொடரலாம்.

அரளிச் செடியின் பாலை அவ்விடங்களில் தடவி வர முடி முளைக்கும். அரளிச் செடியின் பாலுடன், சிரட்டைத் தைலம் ஒரு துளியும், தேங்காய் நெய்யும் கலந்து தடவலாம்.

அரளிச் செடியின் வேரைச் சிதைத்து, அதன் சாற்றைத் தடவலாம்.

குமட்டிக் காயை இரண்டாக வெட்டி, புழுவெட்டு பாதித்த பகுதியில் பூசி வர, முடி முளைக்கும்.

இவை அனைத்தும் ஆரம்ப நிலையில் நல்ல பலனைத் தரும்.

அலோபேஷியா டோட்டாலிஸ், அலோபேஷியா யுனிவர்சாலிஸ் இவ்விரு நிலைகளில் தீர்வு கிடைத்தல் கடினம்.

சித்த மருத்துவர் ராஜம் மூர்த்தி

இவற்றில் எல்லாம் கவனம் வேண்டும்...

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பப்பாளி, கொய்யா போன்ற சத்துகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை - இவற்றைத் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின், தாதுக்கள் போன்றவை குறையாத வகையில் உட்கொள்ள வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் அருந்துதல்.

தவறாமல் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவுதல் (முடியின் வேரில் படுமாறு- லேசாக மசாஜ் செய்தது போல் தடவுதல் நல்லது)

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும்.

தலை தேய்த்துக் குளிக்க விதவிதமான ஷாம்பூ பயன்படுத்தாமல் சிகைக்காயைப் பயன்படுத்துதல்

நாம் பயன்படுத்தும் சீப்பு, துண்டு போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரித்தல்

முடிந்த அளவு வெயிலில் அலைவதைத் தவிர்த்தல்

மன உளைச்சல் நீங்க முறையான யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளல்

நல்ல தூக்கம் அவசியம்.

இந்தக் கட்டுரை குறித்த உங்கள் சந்தேகங்கள், ஆலோசனைகள், தனிப்பட்ட கேள்விகளை dvdigital@vikatan.com  என்ற மெயில் ஐடிக்கு அனுப்பவும்.



from Vikatan Latest news https://ift.tt/TuyNQjK

Post a Comment

0 Comments