காப்பகங்களை அதிகரித்தும் பயனில்லை; 5 ஆண்டுகளில் 628 புலிகள் இறப்பு... அதிரவைக்கும் புள்ளி விவரம்..!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 292 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 200 பேர் புலிகள் தாக்கியதில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் இறப்பு விவரம்

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் 96 புலிகளும், 2020-ம் ஆண்டில் 106 புலிகளும், 2021-ம் ஆண்டில் 127 புலிகளும், 2022-ம் ஆண்டில் 121 புலிகளும் 2023-ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன. புலிகளின் இறப்பு 2012-க்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டில்தான் அதிக அளவு புலிகள் இறந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டில் 51 பேரும், 2022-ம் ஆண்டில் 110 பேரும், 2023-ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்.

புலி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாகும்.

மத்திய அரசு புலிகளின் மேம்பாட்டுக்காக, ஏப்ரல் 1, 1973-ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவிகிதமாகும்.

புலிகளுக்கான வாழ்விடங்களின் பரப்பளவு அதிகரித்தும் அரசினால் புலிகளின் இறப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.



from Vikatan Latest news https://ift.tt/A8NkvJP

Post a Comment

0 Comments