கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்ட கேரளத்தை சேர்ந்த டோனி என்ற ஆண்டோ வர்கீ்ஸ், '15 மாதங்களாக சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார்.
இவரின் ஜாமீன் மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், கைது செய்யப்பட்ட நபர்களின் ஒப்புதல் இல்லாமலேயே ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதும், 80 சதவிகித ஜாமீன் மனுக்களை குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்வதும் தெரியவந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் அனந்தநாராயணன் வாதிடுகையில், "இந்த மோசடியில் போலீஸார் குறிப்பாக நீதிமன்ற பணிக்கு நியமிக்கப்படும் போலீஸார், வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதில் முதன்மை குற்றவாளி நீதிமன்ற காவலர்தான்.
ஒருவர் கைது செய்யப்படும் போது அந்த நபரின் உறவினர்கள் முதலில் காவல் நிலையத்தை அணுகுவார்கள். அப்படி வருகின்றவர்களை நீதிமன்ற போலீஸ்காரர் தாமகவே சந்தித்து, தனக்கு தெரிந்த வழக்கறிஞரின் முகவரி, மொபைல் எண்ணை அளிக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் அவராகவே வழக்கறிஞரை ஏற்பாடு செய்தால் வழக்கு விவரங்களைப் பெற அவர் கஷ்டப்பட வேண்டும். நீதிமன்ற போலீஸுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நியமித்தால், ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் மீதான முன் வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்படும்" என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "தமிழகத்தில் போதைப் பொருள் வழக்குகளில் குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞரே ஆஜராகி வருகிறார். போதைப் பொருள் வழக்குகளில் கைது செய்யப்படும் நபரின் வழக்கறிஞராக போலீஸாரின் தூண்டுதல் பேரில் குறிப்பிட்ட வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார்.
அவருக்கு வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் போலீஸாரால் வழங்கப்படுகிறது. வேறு வழக்கறிஞர் குறுக்கிட்டால் வழக்கு தகவல்களை பெற அலைய விடுகின்றனர். ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.
நீதித்துறை நியாயமாக செயல்பட்டால்தான் மக்கள் மீது நம்பிக்கை ஏற்படும். இதில் நீதிமன்றத்துக்கு மட்டும் அல்ல, வழக்கறிஞர்களுக்கும் கடமை உள்ளது. இந்த மோசடி முற்றிலும் நீக்கப்பட வேண்டும். இதுபோன்ற மோசடி இனிமேல் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் டிஜிபி ஆகியோர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
நீதித்துறையின் மான்பு பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்ற போலீஸார்களை அவ்வப்போது மாற்றுவதற்கான வாய்ப்புகளை டி.ஜி.பி கண்டறிய வேண்டும். ஒரு காவலர் பல ஆண்டுகளாக நீதிமன்றப் பணி மேற்கொள்ளும்போது, அவர் ஒரு குழுவை உருவாக்கி செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது, இதை தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் சிறையிலிருந்து காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. சாட்சிகளை கலைக்கவோ, தடயங்களை அழிக்கவோ கூடாது. அனைத்து விசாரணைக்கும் தவறாமல் ஆஜராக வேண்டும். நிபந்தனையை மீறினால் ஜாமீனை ரத்து செய்ய போலீஸார் நீதிமன்றத்தை நாடலாம்" என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/Djv74iC
0 Comments