பரமக்குடியில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் முத்தையா இல்ல திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை புள்ளிவிவரத்துடன் பேசி உள்ளேன். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து குற்றங்களும் நடந்த வண்ணம் உள்ளன. அண்மைக் காலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்துள்ளார், திமுக அரசு, விசாரணை நடப்பதாக தெரிவித்தார்கள். ஆனால், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
நான்கு நாள்களுக்கு முன்பு சேலத்தில் முன்னாள் மண்டல குழுத் தலைவர் சண்முகம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு நாள்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முதல்வர் தொகுதியிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் சூழலை பார்க்கிறோம். சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் சென்றுவிட்டது. காவல்துறைக்கு யாரும் அச்சப்படுகின்ற சூழல் இல்லை, சர்வ சாதாரணமாக கொலை நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொருத்தவரை எங்கள் தலைமை எடுத்த முடிவுதான். ஜெயலலிதா இருக்கும்போது ஐந்து இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளோம். கருணாநிதியும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பது நாடறிந்தது. 30-க்கும் மேற்பட்ட இடத்திற்கு வாக்காளரை அழைத்துச் சென்று பட்டியில் அடைத்த ஜனநாயக படுகொலை அரங்கேறியது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயகம் செத்துவிடும்.
ஓபிஎஸ் நினைப்புக்கெல்லாம் நாங்கள் உடன்பட முடியாது. பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் யாருக்கும் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. நாங்கள் ஒன்றாக இருந்தபோது பல கோரிக்கைகளை வைத்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொன்னார், யாரை சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்கு ஆணையம் வைத்து விசாரித்தோம். விசாரணை ஆணையம் அமைக்க என்னை நிர்பந்தப்படுத்தினார். சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். 97 சதவிகிதம் பேர் அப்போது எனக்கு ஆதராவாக இருந்தபோதிலும் கூட மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம்.
2019-ல் தேனியில் அவர் மகனுக்கு மட்டும்தான் வேலை பார்த்தார், மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியைப் பற்றி கவலைப்படாமல் மகனைப் பற்றி கவலைப் பட்டார். ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை. அதன் பிறகுதான் நீதிமன்றம் சென்றார், பொதுக்குழு கூடி நடவடிக்கை எடுத்து ரெளடிகளை வைத்து கட்சியினரை தாக்கி தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருள்களை சூறையாடினர்.
இரட்டை இலையை முடக்க தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால், ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டார். பணத்தால்தான் வாக்குகள் பெற்றார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார்? விசுவாசமான இருந்ததாக வரலாறு இல்லை. அதிமுக-வில் அவர் இணைய ஒரு சதவிகிதமும் வாய்ப்பில்லை.
அண்ணாமலை பச்சோந்தி, நான் துரோகி அல்ல, துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலைதான். எங்கள் தலைவர்களை அவதூறாக கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம்?
எங்களை ஆளாக்கிய தலைவர்களை பற்றி பேசினால் எங்களுக்கு எப்படி உள்ளம் குமுறும். இவர் கட்சித்தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர். நாங்கள் அவரைப்போல் அப்பாயின்மென்டில் வரவில்லை. கண்ணாடியில் அவர் முகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசு விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கு சிவில் வழக்கு, இதற்கு காவல் துறையினர் நூறுபேரை வைத்து பழி சுமத்தி ஊர் முழுதும் தேடுகிறார்கள்.
பிராந்தி, கள்ளு, சாராயம் குடித்தாலும் போதைதான். படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். மதுவிற்கு பழக்கமானவர்கள் உடனடியாக நிறுத்த முடியாது படிப்படியாக குறைத்துதான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/IpnFCd2
0 Comments