ஆடி மாத விழாக்கள் விசேஷங்கள்: ஆடி மாதம் ராமாயண மாதமா? - ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடித்தபசு!

ஆடி மாதம் ராமாயண மாதமா?

ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம். சந்திரனின் இடமான கடகத்தில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் இந்த மாதம் முழுவதுமே இறைவழிபாட்டுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. எனவேதான் இந்த மாதத்தில் திருமணங்கள் புரிவதில்லை. மாறாக குலதெய்வ வழிபாடுகள், அம்மன் வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு ஆகியவற்றில் ஈடுபடுகிறோம்.

கேரளாவில் ஆடி மாதத்தை ராமாயணம் மாதம் என்றே அழைக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்புவரைகூட இந்த மாதம் முழுவதும் கேரளாவில் ராமாயண காவியத்தை வீடுகள் தோறும் பாராயணம் செய்வார்கள். கவிஞர் துஞ்சத் ராமானுஜன் எழுத்தச்சனின் மலையாள மொழிபெயர்ப்பான வால்மீகி ராமாயணத்தின், 'அத்யாத்மா ராமாயண'த்தை மக்கள் பக்தியோடு பாராயணம் செய்வார்கள்.

ராமாயணம்

முற்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இந்தப் பாராயண வழக்கம் தற்போது குறைந்து காணப்படுகிறது என்றாலும் ஆலயங்களிலும் பல வீடுகளிலும் தவறாமல் கடைப்பிடிக்கின்றனர். ராமபிரானின் ராசி கடகராசி. ராமபிரான் அவதரித்ததும் சூரிய குலத்தில் எனவே கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதத்தை ராமபிரானுக்கு உரிய மாதமாகக் கருதி ராமாயண பாராயணம் செய்வது மிகுந்த புண்ணிய பலனைத் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை எனப் பண்டிகைகள் வரிசைகட்டும். இந்த ஆண்டு ஆடிமாதத்தில் வரும் விழாக்கள் விசேஷங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

மெய்ஞ்ஞானம், செல்வம் அருளும் ஆடிமாதப் பிரதோஷ நாள்கள்

ஆடி மாதத்தில் இரண்டு பிரதோஷ தினங்கள் வருகின்றன. இன்று 19.7.24 (வெள்ளிக்கிழமை) மற்றும் 1.8.24 (வியாழக்கிழமை) ஆகிய தினங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். குறிப்பாக வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளை சுக்கிரவாரப் பிரதோஷம் என்று சொல்வார்கள். சுக்கிரனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத்தரும் தினம் இது. குறிப்பாக வெள்ளீஸ்வரர் என்னும் திருநாமம் உடைய ஈஸ்வரனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். இதனால் சகல செல்வங்களும் சேரும். திருமண வரம் கிடைக்கும். வியாழக்கிழமை பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கல்வி கேள்விகளில் மேன்மை உண்டாகும். மெய்ஞ்ஞானம் வேண்டுவோர் தவறவிடக்கூடாத நாள்.

அருளை வாரி வழங்கும் ஆடித்தபசு - ஆடிப்பௌர்ணமி

ஹரியும் சிவனும் ஒன்று என்ற அற்புத உண்மையை உலகுக்கு எடுத்துச் சொன்ன தினம் ஆடித்தபசு. அன்னை கோமதி சங்கரன்கோவில் தினத்தில் தபசுக் காட்சி அருளி அனைவருக்கும் சங்கரநாராயணர் தரிசனம் கிடைக்க அருள் செய்வாள். இந்த நாளில் சிவா விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. பொதுவாகவே பௌர்ணமி அம்பிகை வழிபாட்டுக்கு ஏற்றது. குறிப்பாக ஆடிப் பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள தீமைகள் அனைத்தையும் விலக்கி நல்லருள் புரிவாள் அம்பிகை.

மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! -

சங்கடஹர சதுர்த்தி

தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடு மிகவும் அவசியம். தீராத பிரச்னைகள் தீர இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். கல்வியில் மேன்மை கிடைக்க, கடன் பிரச்னைகள் தீர சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு 11 தேங்காய்களைக் கோத்து மாலையாகச் சூட்டி வழிபடுவது மிகச்சிறந்த பரிகாரமாகும். இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி 24.7.24 அன்று வருகிறது.

வாஸ்து நாள்

வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாளையே வாஸ்துநாள் என்று அழைக்கிறார்கள். இந்த நாள் வீடு கட்ட அஸ்திவாரம் போடுவது, வாசல் கால் அமைப்பது, பூமி பூஜை செய்வது ஆகியவற்றைச் செய்ய உகந்த தினம். இந்த ஆண்டு ஜூலை 27 அன்று சனிக்கிழமை வாஸ்து தினமாக மலர்கிறது.

தடைகள் உடைக்கும் ஆடிக்கிருத்திகை

முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு உரிய விசேஷ தினங்களில் கிருத்திகை மிகவும் முக்கியமான நாள். குறிப்பாக ஆடி மாதக் கிருத்திகை மிகவும் விசேஷமான நாளாகும். இந்த நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். ஆடிக்கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அபிஷேகத்துக்கு பால், பன்னீர் வாங்கி சமர்ப்பிப்பது மிகச்சிறந்த பரிகாரமாக விளங்கும். காரியத் தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடிக்கிருத்திகை இந்த மாதம் 29.7.24 அன்று வருகிறது. இந்த நாளைத் தவறவிடாமல் முருகனை தரிசித்து நல்லருள் பெறலாம்.

தீர்க்க சுமங்கலி வரம் தரும் ஆடிப்பெருக்கு

ஆடிமாதத்தின் சிறப்புகளில் ஒன்று ஆடி 18 என்று போற்றப்படும் ஆடிப்பெருக்கு. இந்த நாளில் நீர்நிலைகளுக்கு வழிபாடுகள் செய்வது தமிழர் மரபு. இந்த நாளில் நீர் நிலைகளில் செய்யும் வழிபாடு ஆண்டு முழுவதும் நீர்வளம் நிறைந்திருக்கவும் விவசாயம் செழித்திருக்கவும் உதவும். ஆற்றங்கரை சென்று வழிபட முடியாதவர்கள் அருகில் இருக்கும் அம்மன் ஆலயம் சென்று சுமங்கலிப்பெண்களுக்குக் காதோலை கருகுமணி, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருள்களை தானம் செய்வதன் மூலம் தீர்க்க சுமங்கலிவரம் கிடைக்கும். சில ஊர்களில் இந்த நாளில் ஆற்றங்கரையில் புதுத்தாலிக்கயிறு மாற்றிக்கொள்ளும் வழக்கமும் உண்டு. அப்படிப்பட்ட விசேஷமான தினம் இந்த ஆன்டு ஆகஸ்ட் 3-ம் தேதி வருகிறது. தவறாமல் கடைப்பிடித்து தீர்க்க ஆயுளையும் தீர்க்க சுமங்கலி வரத்தையும் பெற்றிடுங்கள்.

ஆடிப்பூரம்

பித்ருக்களின் ஆசியை அள்ளித்தரும் ஆடி அமாவாசை

தட்சிணாயின புண்ணிய காலத்தின் முதல் மாதம் ஆடி. இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சந்திரனின் வீட்டிலேயே சந்திரனும் சூரியனும் இணைந்திருக்கும் அமாவாசை தினம் என்பதால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்குச் செய்யும் வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. தவறாமல் தர்ப்பணம் செய்து வீட்டில் அவரவர் வழக்கப்படி படையிலிட்டு வழிபாடு செய்வதன்மூலம் வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினம் ஆகஸ்ட் 4-ம் தேதி வருகிறது. தவறாமல் மூத்தோர் வழிபாடு செய்து சகல நன்மைகளையும் பெறுங்கள்.

சொந்த வீடு வாங்க ஆடிப்பூர வழிபாடு

ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம். சாட்ஷாத் பூமிப்பிராட்டியின் அவதாரம் ஆண்டாள். எனவே இந்த நாளில் ஆண்டாளையும் பெருமாளையும் வழிபடுவது மிகவும் விசேஷம். ஶ்ரீவில்லிபுத்தூரில் இந்த நாளில் திருத்தேர் உற்சவம் நடைபெறும். சொந்த வீடுவாங்க விரும்புபவர்கள் இந்த நாளில் திருப்பாவை 30 பாசுரங்களையும் பாராயணம் செய்வது நல்லது. ஆண்டாள் அருள் இருந்தால் தமிழ்ப்புலமையும் சொந்த நிலம் வாங்கும் யோகமும் வாய்க்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7-ம் தேதி வருகிறது. தவறாமல் திருப்பாவை பாடி அன்னையின் அருள்பெறுவோம்.



from Vikatan Latest news https://ift.tt/yanBH7E

Post a Comment

0 Comments