மாநிலங்களவையில் குறைந்த என்.டி.ஏ பலம்... சிக்கலில் பாஜக! - கைகொடுக்குமா அதிமுக?!

17-வது மக்களவையில் 303 எம்.பி-க்களுடன் அறுதிப்பெரும்பான்மை கொண்ட அரசாக மத்தியில் விளங்கிய பா.ஜ.க அரசு, 18-வது மக்களவைத் தேர்தலில் 63 இடங்களை இழந்த காரணத்தால், இப்போது 240 எம்.பி-க்களையே பெற்றிருக்கிறது.

மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

இந்த நிலையில், மாநிலங்களவையிலும் பா.ஜ.க-வின் பலம் குறைந்திருக்கிறது. மாநிலங்களவையின் மொத்த இடங்கள் 245. இதில், 12 பேர் நியமன உறுப்பினர்கள். தற்போது, மாநிலங்களவையில் 226 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில், பா.ஜ.க-வுக்கு 86 உறுப்பினர்களும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 101 உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

மாநிலங்களவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பா.ஜ.க-வின் பலம் 90-க்கும் கீழ் சரிந்திருக்கிறது. பா.ஜ.க-வுக்கு அடுத்த நிலையில் காங்கிரஸுக்கு 26 எம்.பி-க்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.பி-க்களும், ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி-க்களும் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி

‘இந்தியா’ கூட்டணிக்கு 87 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். தற்போது 19 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில், மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த 10 பேர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பிறகு மாநிலங்களவை எம்.பி பதவியை கேசவ ராவ் ராஜினாமா செய்ததாலும் 11 இடங்கள் காலியாகின.

ராம் ஷாகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி, ராகேஷ் சின்ஹா ஆகியோரின் நான்கு நியமன எம்.பி-க்களின் பதவிக்காலம் ஜூலை 13-ம் தேதி முடிவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றம் இல்லாத காரணத்தால், அதற்கான நான்கு எம்.பி இடங்கள் காலியாக இருக்கின்றன. காலியாக இருக்கும் 11 இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவிருக்கிறது.

நவீன் பட்நாயக்

தற்போது, மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பா.ஜ.க-வின் பலம் 86 ஆகக் குறைந்திருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101 ஆக இருக்கிறது. இந்த நிலையில், மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் பா.ஜ.க-வுக்கு சிக்கல் ஏற்படும்.

இதற்கு முன்பு, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதை மோடி அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், இந்த முறை அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடப்பாடி பழனிசாமி

காரணம், ஒன்பது மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம், எதிர்க்கட்சியாக செயல்படப்போவதாக அறிவித்துவிட்டது. ஒடிசா மாநில தேர்தலில் பாஜக நவீன் பட்நாயக்கை மிக கடுமையாக விமர்சித்து ஆட்சியை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. நவீன் பட்நாயக் போல ஜெகன் மோகன் ரெட்டி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர், பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர் போலக் காட்டிக்கொண்டாலும், ‘இந்தியா’ கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது போலவும் செயல்படுகிறார். நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகனின் எதிர் அணியில் பாஜக சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கூட்டனியில் பாஜக இருப்பதால், எதிர்வரிசையில் இருக்கும் ஜெகனின் ஆதரவு பாஜகவுக்கு கிட்டுமா என்பதும் சந்தேகமே.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்குமா என்பது தெரியவில்லை. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கிறார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு, இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

மோடி - ஜெகன்மோகன் ரெட்டி

இந்த நிலையில், பி.ஆர்.எஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், கே.சி.ஆரின் மகனுமான கே.டி.ராமராவ் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர்களுக்குள் ஏதாவது மறைமுக உடன்பாடு ஏற்பட்டால், பி.ஆர்.எஸ் ஆதரவு பா.ஜ.க-வுக்கு கிடைக்கலாம். அதேபோல, மாநிலங்களவையில் அ.தி.மு.க-வுக்கு மூன்று எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இப்போது, மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த நிர்வாகிகள் சிலர் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். சில மசோதாக்களுக்கு கிடைக்கலாம். சில மசோதாக்களுக்கு கிடைக்காமல் போகலாம் என்ற நிலை தான் உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் பாஜக, மாநிலங்களவையில் தன் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் இடம் பெறாத கட்சிகள் என்ன முடிவெடுக்க போகிறது என்பதில் தான் உள்ளது பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கான பதில்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/ZN01v7m

Post a Comment

0 Comments