விருதுநகர்: துணை மேலாளர் வீட்டில் திருட்டு - கார்பரேட் ஊழியர் வீடுகளை குறிவைக்கும் கும்பல் சிக்கியது

விருதுநகர் அருகே பாதுகாப்பு நிறைந்த குடியிருப்புக்குள் புகுந்து 200 சவரன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், ``விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகரில் பிரபல தனியார் சிமென்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் துணை மேலாளராக பாலமுருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய வீடு தொழிற்சாலைக்கு அருகிலேயே தொழிற்சாலை காலனி குடியிருப்பில் உள்ளது.

திருட்டு

விடுமுறைதினத்தையொட்டி, பாலமுருகன் தனது தந்தையை பார்ப்பதற்காக கடந்த 13-ம் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று பகல் பொழுதில் குடியிருப்பு பகுதி வழியாக வந்த பாதுகாவலர், பாலமுருகனின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகன் நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறடிக்கப்பட்டு கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த சுமார் 195 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

திருட்டு

மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், துணை மேலாளர் பாலமுருகனின் வீட்டில் திருடியவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த மர்மகும்பல் என தெரியவந்தது. இதையடுத்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீஸ் விசாரணை நடத்தியதில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிவது போல் நடித்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து துணை மேலாளர் பாலமுருகன் வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில், கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் பலனாக கொள்ளை கும்பலை சேர்ந்த 4 நபர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

திருட்டு

பிடிபட்டவர்கள் குறித்து போலீஸார் மேலும் கூறுகையில், "கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் என தெரியவருகிறது. ஏனெனில் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கைநிறைய சம்பளம் வாங்குபவர்களாக இருப்பர், நகை, பணம் என அதிக சொத்துக்கள் இருக்கும் என்ற அனுமானத்தில் முக்கிய நபர்களை நோட்டமிட்டு அவர்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்களை நடத்துவதாக கூறுகின்றனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் முழு விபரமும் தெரியவரும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/hyQX4oD

Post a Comment

0 Comments