மனைவி தற்கொலை; துக்கம் தாங்காமல் டாக்டர் கணவர் விபரீத முயற்சி - சங்கரன்கோவில் அருகே சோகம்!

சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடத்தில் திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம்பெண்ணின் கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சேலம் மாவட்டம் ஸ்ரீ வாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்தவர் இனியவன் (வயது 33). இவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கலிங்கப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இனியவனும், சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சௌமியா என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் தனியே வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தனர். இந்தநிலையில் வேலை நிமித்த பயிற்சிக்காக மருத்துவர் இனியவன் சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் வெளியூரில் தங்கப்படிக்க வேண்டி சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மனைவி சௌமியாவை, சேலத்தில் உள்ள அவரின் தாய் வீட்டில் சென்று தங்கி இருக்குமாறு கூறியுள்ளார். இதற்கு சௌமியா மறுப்பு தெரிவித்ததால், கடந்த மூன்று நாட்களாக இருவரும் சண்டைப்போட்டு வந்ததுடன் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசவும் இல்லை என கூறப்படுகிறது.

விசாரணை

இந்த நிலைமையை சரிசெய்ய, மாமனாரிடம் விஷயத்தை எடுத்துச்சொல்லி மனைவி சௌமியாவை அழைத்துச் செல்ல வருமாறு இனியவன் கூறியிருக்கிறார். இதனால் விரக்தியடைந்த சௌமியா, வீட்டினுள் தனிஅறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார். இரவு கழிந்த நிலையில் காலையில் மருத்துவர் இனியவன், அறைக்கதவை தட்டிப் பார்த்தும் சௌமியாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த மின்விசிறியில் சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சௌமியா

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சௌமியா தற்கொலை செய்துக்கொண்ட விஷயத்தை உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், போலீஸூக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சௌமியாவின் உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். தற்கொலை குறித்து சௌமியாவின் சகோதரர் நந்தகுமார் திருவேங்கடம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில் மனைவி இறந்து துக்கம் தாங்க முடியாமல் மருத்துவர் இனியவன், 'காற்று நிரப்பிய வெற்று ஊசியை' உடலுக்குள் செலுத்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட போலீஸார், உடனடி சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இனியவனை அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்" என்றனர்.

விசாரணை

திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இளம்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மருத்துவரான கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



from Vikatan Latest news https://ift.tt/1vrwAeT

Post a Comment

0 Comments