Doctor Vikatan: வயது 28, படுக்கையில் சிறுநீர்... பிறப்புறுப்பில் அரிப்பு.. தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 28. திருமணமாகவில்லை. இரவு தூங்கும்போது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இருக்கிறது. சில நாள்களில் உடை முழுவதும் நனைந்தபிறகுதான் கண் விழிக்கிறேன்.  கடந்த ஒரு வருடமாக பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கிறது. அதற்காக தேங்காய் எண்ணெய், தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தியும் பலனில்லை.  எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய்  அல்லது பிறப்புறுப்புத் தொற்று இருக்குமோ என பயமாக இருக்கிறது. திருமணம் முடிந்து தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்னைகள் தானாகச் சரியாகிவிடும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா? இந்தப் பிரச்னைகளுக்கு நான் எந்த மருத்துவரை அணுக வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.  

டாக்டர் நித்யா ராமச்சந்திரன்

இந்தக் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளுமே பெல்விக் இன்ஃபெக்ஷன் (pelvic infection) எனப்படும் இடுப்புப்பகுதியைச் சுற்றியுள்ள தொற்றின் அறிகுறிகள் போன்றுதான் தெரிகின்றன.

நீங்கள் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகியே தீர வேண்டும்.  தாமதிக்காமல் உங்கள் பிரச்னைகளைச் சொல்லி, பரிசோதிக்கச் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, தயிர் உள்ளிட்ட எதுவும் உங்களுடைய இந்தப் பிரச்னைகளுக்கு நிச்சயம் உதவாது. ஏனெனில் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது உடலுக்குள் உருவான தொற்று. அதற்கு வெளிப்பூச்சுகள் எந்த வகையிலும் பலன் தராது. உங்களுக்கு உடனடியாக வெஜைனா பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து ஸ்வாப் டெஸ்ட் ( Swab test) செய்து பார்க்க வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு ஏற்படுகிற இதுபோன்ற பல பிரச்னைகளும் கல்யாணமானால் தானாகச் சரியாகிவிடும் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அப்படியெல்லாம் இல்லை. உங்கள் விஷயத்திலும் அப்படித்தான். உங்களுக்கு என்ன பிரச்னை என்பதே முதலில் கண்டுபிடிக்கப்படவில்லை. பல காலமாக இந்தப் பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  திருமணம் ஆனாலுமே உங்கள் பிரச்னை கண்டறியப்படும்வரை நீங்கள் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். 

தொற்று | Infection

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற பிரச்னைகளுக்கும் தொடர்பில்லை. படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இரவில் தூங்கும்போது கனவுகள் வருகின்றனவா, எதையாவது நினைத்துப் பதற்றப்படுகிறீர்களா, குழந்தைப்பருவத்தில் அல்லது உங்களுடைய டீன் ஏஜில் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட அனுபவம் ஏதேனும் இருக்கிறதா, பயப்படுகிறீர்களா என்றெல்லாம் தெரிய வேண்டும். இந்தப் பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சை எடுக்கும் முன், உங்களுடைய மற்ற பிரச்னைகளை சரி செய்யப் பாருங்கள். உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுங்கள். அவற்றிலிருந்து மீண்டதும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கு சிகிச்சை எடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Vikatan Latest news https://ift.tt/N5TjQ9l

Post a Comment

0 Comments