கோவை சிறையில் திட்டம்; குமரி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை.. உருக்கிய நகைகளுடன் மூவர் சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே வியன்னூர் பேயோட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (58). இவருக்கு அனிதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மோகன்தாஸ் நகைக்கடன் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். தொழிலதிபரான மோகன்தாஸ் வீட்டுக்கு, கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அப்போது கண் விழித்த மோகன்தாஸை கொள்ளையர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி உள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த அவரது மகள் ஆர்த்தியையும் கொள்ளையர்கள் தாக்கியதுடன், கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்து சுமார் 78 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை குறித்து விசாரித்த போலீஸார் களியக்காவிளையில் வைத்து சந்தேகத்துக்கு இடமான 3 பேரை மடக்கிப்பிடிக்க முயன்றுள்ளனர். அவர்கள் தப்பி ஓட முயன்றபோது ஒருவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில் கால் முறிந்துள்ளது. மற்ற இருவரையும் போலீஸார் துரத்தி பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், மானுகொண்ட-வைச் சேர்ந்த அனில்குமார்(34), சிவகாசியைச் சேர்ந்த பார்த்திபன்(23), திருப்பூரைச் சேர்ந்த  சுப்பிரமணி(38) என தெரியவந்தது. இதில் தண்டவாளத்தில் விழுந்ததில் அனில்குமாருக்கு கால் உடைந்துள்ளது. அவர் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற இருவரும் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையில் இருந்து உருக்கிய நகைகள் உட்பட சுமார் 47 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அனில்குமார்

கொள்ளையர்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "இந்த கொள்ளைக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த கிரி(48) என்பவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார். இவர் பல இடங்களில் வேலை வாய்ப்பு நிறுவனம்  நடத்தி, வேலையில்லாமல் இருப்பவர்களிடம் பணம்  வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிடுவார். சில மாதங்களுக்கு முன்பு மோகன்தாஸின் வீட்டுக்கு அருகே வாடகைக்கு வசித்த கிரி, சுவாமியார்மடம் பகுதியிலும் நிறுவனம் நடத்திவந்தார். மோகன்தாஸுக்கு நிறைய சொத்துகளும், பணமும் உள்ளதை அறிந்துகொண்டார். இந்த நிலையில் கிரி மீது மோசடி புகார்கள் சென்றதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கொள்ளை உள்ளிட்ட குற்ற பல்வேறு வழக்குகளில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த அனில்குமார், சிவகாசியைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் அறிமுகம் ஆகி உள்ளனர். அப்போது தொழிலதிபர் மோகன்தாஸ் பற்தி கிரி கூறியுள்ளார். அவர் வீட்டில் கொள்ளையடிப்பது பற்றியும் கிரி, அனில்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைதான சுப்ரமணி, அனில்குமார், பார்த்திபன்

அனில்குமாருக்கும், பார்த்திபனுக்கும் கடந்த மாதம் ஜாமீன் கிடைத்ததும் மோகன்தாஸ் வீட்டில் கொள்ளை திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். கொள்ளையடித்துவிட்டு நகைகளுடன் திருப்பூர் சென்று அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்த சுப்பிரமணி மூலம் நகையை விற்க முயன்றுள்ளனர். திருட்டு நகை என்பதால் தனிழ்நாட்டில் விலை குறைவாக கிடைக்கும் எனவும்... நகையை உருக்கி கேரளா மாநிலம், திருவனந்தபுரம் கொண்டுசென்று விற்பனைசெய்தால் அதிக பணம் கிடைக்கும் என சுப்பிரமணி ஐடியா கொடுத்துள்ளார். இதையடுத்து ஒரு பகுதி நகைகளை உருக்கி, அதையும் எடுத்துக்கொண்டு அனில்குமார், பார்த்திபன், சுப்பிரமணி ஆகிய மூவரும் களியக்காவிளை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் தனிப்படை போலீஸில் சிக்கினர். அனில்குமார் மீது ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் 18 வழக்குகள், நாமக்கல், ஈரோடு, கோவை பகுதிகளில் திருட்டு வழக்குகளும் உள்ளன. பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு இறைச்சிக்கடையில் வேலை செய்தபோது திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இறங்கியுள்ளார். பார்த்திபன் (23) மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன. கிரி-யை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/QmXN8hE

Post a Comment

0 Comments