சிவகாசி பட்டாசு ஆலை சங்கத்தினர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தினருடன் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்த கலந்துரையாடல், சிவகாசியில் தனியார் இடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மேலும், பட்டாசு ஆலைக்கு நேரில் சென்ற அவர், பாதுகாப்பான முறையில் பட்டாசு தயார் செய்வது, பட்டாசு தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து பட்டாசு தொழிலுக்கு கோர்ட்டு உத்தரவால் ஏற்பட்டிருக்கும் இடையூறு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் வணிகம் ஆகியவை குறிக்கும் சங்க நிர்வாகத்தில் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, "தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தலின்படி சிவகாசி பட்டாசு தொழில் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் மூலம் புதிய தலைமுறை பட்டாசு உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையில் புதிய யுக்திகளை புகுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன். பட்டாசு தொழில் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுப்பது முக்கியம்.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் பண்பாட்டின் மீது பாசம் கொண்ட மலையாளியாக பட்டாசு தொழிலுக்காக வாதாடுவேன். பிப்ரவரியில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் நிறைய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் தவறு செய்த ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. சில விஷயங்களுக்கு காலநேரம் தேவைப்படுகிறது. நான் வந்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதன் மூலம் பட்டாசு தொழிலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும்" என்றார்.
from Vikatan Latest news https://ift.tt/UqR4EYd
0 Comments