முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர் - உயர் நீதிமன்றத்துக்கு புதுச்சேரி தலைமை நீதிபதி புகார் கடிதம்!

புதுச்சேரியில் திறந்தவெளி அழகு சீர்குலைப்பு தடுப்புச் சட்டம், கடந்த 2000-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலை ஆணையும் அமலில் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு வரை சாலைக்கு நடுவில் வைக்கப்படும் பேனர்களால், பொதுமக்கள் நாள்தோறும் விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். அப்படியான விபத்துகளில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் முடியும் வரை மௌனமாக இருந்துவிட்டு, முடிந்தவுடன் ‘பொது இடங்களில் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற சம்பிரதாய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு அமைதியாகிவிடும்.

பேனர் தடைச் சட்டம்

பேனர் கலாசாரத்தால் நொந்து போன புதுச்சேரி நீதிமன்றம், `புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் உடனடியாக அகற்றப்படவில்லை என்றால், பேனர் தடை உத்தரவை மீறும் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும்’ என்று கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியருக்கும், துறை செயலர்களுக்கும் காட்டமாக கடிதம் அனுப்பியது. அதையடுத்து உடனடியாக நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டது. ஆனால் அடுத்த சில நாள்களில் வழக்கம் போல மீண்டும் பேனர் கலாசாரம் தலை தூக்கியது. இந்த நிலையில்தான் புதுச்சேரி சப்-கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், பேனர் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், `விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்றும் அரசு ஊழியர்களை தடுப்பது, தண்டனைச் சட்டம் 2023 பிரிவு 221-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். அதற்கு சிறைத் தண்டனை மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்கப்படும். அதனால் புதுச்சேரி மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம்.

சட்டவிரோத பேனர்களை கட்டுப்படுத்த, புதுச்சேரி மாவட்ட நிர்வாகம்  உறுதி எடுத்திருக்கிறது. பிறந்தநாள், திருமணம், திருவிழா, திரைப்படம், தொழில் விளம்பரங்கள் என எந்த காரணமாக இருந்தாலும், பொது இடங்களில் பேனர் வைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களை பொதுமக்கள் போட்டோ எடுத்து, 9443383418 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம். அதனடிப்படையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிவிப்பை வரவேற்ற பொதுமக்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்த புகார்களை மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்ப ஆரம்பித்தனர். மாவட்ட நிர்வாகமும் அந்த பேனர்களை உடனடியாக அகற்ற ஆரம்பித்ததால், பேனர்கள் இன்றி  காட்சியளித்தன புதுச்சேரியின் வீதிகள். இருசக்கர வாகன ஓட்டிகளும் பயமின்றி செல்ல ஆரம்பித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

அதேசமயம், `மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளுக்கு மட்டும் செல்லாது’ என்று ட்வீட்டிக் கொண்டிருந்தனர் நெட்டிசன்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜூலை 30-ம் தேதி முதல், புதிதாக போடப்பட்ட சாலைகளில் பள்ளம் தோண்டி முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளுக்காக பேனர்கள் வைக்க ஆரம்பித்தனர் அவரது ஆதவரவாளர்கள். உடனே அதை புகைப்படம் எடுத்த பொதுமக்கள், `முதல்வருக்கு பேனர் தடை சட்டம் பொருந்தாதா?’ என்ற கேள்வியுடன் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார்களை குவிக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த முறை இரவோடு இரவாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், முகம் சுழிக்க ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள். ஜூலை 31-ம் தேதி இரவு சப்-கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்ட புதிய அறிவிப்பில், ``பொது இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்க வெளியிடப்பட்டிருந்த 9443383418 என்ற வாட்ஸ்-அப் எண் நிர்வாக காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுகிறது.

பொதுமக்கள் இனி அந்த எண்ணுக்கு புகார்களை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். `முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்காகவே, மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பு திரும்பப் பெற்றிருக்கிறது. பேனர் சட்டம் முதல்வருக்கு மட்டும் பொருந்தாதா ?’ என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி முழுவதும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர்கள், பொதுமக்களுக்கு இன்னலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசேகரன், பேனர் விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு பகிரங்க புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார், அதில், `சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் மீறியிருக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி வந்த முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி அவர்களின் பிறந்த நாளுக்காக, அவரது ஆதரவார்களும், தொழிலதிபர்களும் நகரம் முழுவதும் பேனர்கள், ஹோர்டிங்குகள், கட்- அவுட்களை வைத்தனர்.

புதுச்சேரி

அதனால் பொதுமக்கள் கடும் கோமடைந்திருக்கின்றனர். இந்த நேரத்தில், புதுச்சேரியில் சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்கள், கட்-அவுட்கள் குறித்து புகாரளிக்க கொடுக்கப்பட்டிருந்த 9443383418 என்ற வாட்ஸ்-அப் எண்ணையும் `நிர்வாக காரணங்கள்’ என்று கூறி புதுச்சேரி அரசு திரும்பப் பெற்றிருக்கிறது. சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், பாதசாரிகளின் விலைமதிப்பற்ற உயிருக்கான அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும், புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் மீதும், அதிகாரிகள் மீதும் தேவையான அவமதிப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று அதிரடி காட்டியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/ySfxmH3

Post a Comment

0 Comments