Doctor Vikatan: ஓவர் ப்ளீடிங் பிரச்னைக்கு கர்ப்பப்பையைச் சுத்தம் செய்யும் D & C சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில வருடங்களாக எனக்கு பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமாக இருக்கிறது. டி அண்ட் சி எனப்படும் சிகிச்சையைச் செய்து கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகும் என்கிறாள் என் தோழி.  டி அண்ட் சி என்பது கருவைக் கலைப்பதற்குச் செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ப்ளீடிங் பிரச்னைக்கும் அதைச் செய்யலாமா.... எல்லோரும் செய்து கொள்ளலாமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

சிலருக்கு மாதந்தோறும் பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமாக வெளியேறலாம். பீரியட்ஸ் சுழற்சியும் அவர்களுக்கு முறைதவறி இருக்கலாம்.  இன்னும் சிலருக்கு பீரியட்ஸ் சுழற்சி சரியாக இருந்தாலும், ப்ளீடிங் அதிகமாக இருக்கலாம்.  அதாவது, 10-12 நாள்கள்வரை கூட ப்ளீடிங் ஆகலாம். குறிப்பாக, 40- 45 வயதுப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் அவர்களுக்கு டி அண்ட் சி (Dilation and curettage) எனப்படும் சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.  டி அண்ட் சி என்பது கர்ப்பப்பையைச் சுரண்டி, சுத்தம் செய்கிற ஒருவித சிகிச்சை முறை.

குழந்தை பெறாத பெண்களுக்கும், குழந்தைக்கான முயற்சியில் இருப்போருக்கும், 40 வயதுக்கு குறைவானவர்களுக்கும் பெரும்பாலும் டி அண்ட் சி சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள்.  அவர்களுக்கெல்லாம் அந்தச் சிகிச்சை அவசியப்படாது.  மேற்குறிப்பிட்ட பெண்களுக்கு எல்லாம் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக பீரியட்ஸில் பிரச்னைகள் இருக்கலாம். எனவே, சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமாகவே அவர்களது பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். 

ப்ளீடிங்

சில பெண்களுக்கு அபார்ஷன் ஆகியிருக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் கரு கலைந்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் அந்தக் கருவை  மாத்திரைகள் வைத்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள் மருத்துவர்கள். கலைந்த கருவானது, அதில் முழுமையாக வெளியேறாத நிலையில், டி அண்ட் சி என்ற சிகிச்சை தேவைப்படலாம்.  மாத்திரை வைப்பதன் மூலமே அந்தக் கரு வெளியே வந்துவிடும். கடைசிகட்ட முயற்சியாகவே டி அண்ட் சி செய்யப்படும்.

இது போன்ற பெண்களுக்கு டி அண்ட் சி செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியாகச் செய்யாத பட்சத்தில், கர்ப்பப்பையில் சேதம் ஏற்பட்டு, எதிர்காலத்தில் அவர்கள் கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.  அதாவது டி அண்ட் சி முறையாகச் செய்யப்படாதபோது கர்ப்பப்பையின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு, கர்ப்பம்  தரிப்பதை பாதிக்கலாம். பெரும்பாலும் மருத்துவர்கள் மிக கவனமாகவே இந்தச் சிகிச்சையைச் செய்வார்கள்.  45 வயதுப் பெண், அதிக ப்ளீடிங் பிரச்னைக்காகவோ, முறைதவறிய பீரியட்ஸ் பிரச்னைக்காகவோ மருத்துவரை அணுகும் பட்சத்தில், அவருக்கு ஹார்மோன் மாத்திரைகள்தான் பரிந்துரைப்போம். 

கர்ப்பப்பை

45 வயதுக்குப் பிறகு ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்க வேண்டுமானால், எண்டோமெட்ரியம் திசுவின் சாம்பிள் தேவைப்படும். ஹார்மோன் மருந்துகள் கொடுப்பதற்கு முன்பே, அந்தப் பெண்ணுக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  எனவே, இவரைப் போன்ற பெண்களுக்கு முதலில் டி அண்ட் சி செய்ய வேண்டியிருக்கும். டி அண்ட் சி என்பது, அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்படுகிற சிகிச்சை. இப்போதுள்ள நவீன மருத்துவத்தில், சிகிச்சை இன்னும் எளிதாகிவிட்டது. அதாவது பிப்பெல் பயாப்சி (pipelle biopsy) அல்லது எண்டோமெட்ரியம் சாம்ப்ளிங் என்ற டெக்னிக் பின்பற்றப்படுகிறது. இதில் சிறிய டியூப் போன்ற கருவியின் உதவியோடு, கர்ப்பப்பையின் சாம்பிளை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பலாம். இதற்கு மயக்க மருந்து தேவையில்லை... வலி இல்லாத எளிய சிகிச்சையும்கூட. எனவே, உங்கள் பிரச்னைக்கு மற்றவர் பேச்சைக் கேட்பதைத் தவிர்த்து மருத்துவரை அணுகி, தெளிவு பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Vikatan Latest news https://ift.tt/R5C0t9F

Post a Comment

0 Comments