`கலைஞர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய துரைமுருகனையே கையாள்வதற்கு Hats off' - ஸ்டாலினை பாராட்டிய ரஜினி

மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி குறித்து, திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய `கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நூலைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இவர்களோடு `தி இந்து' என்.ராம், அமைச்சர் உதயநிதி மற்றும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டர் மேடையிலிருந்தனர். விழாவில் தி.மு.க அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

`கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழா

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களைக் கையாளும் விதம்குறித்து வாழ்த்திப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ``பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்களை வழிநடத்துவதில் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் பழைய மாணவர்களை வழிநடத்துவது மிகவும் பிரச்னையாக இருக்கும். அது போலத் தான் அதிகப்படியாக அமைச்சர்கள் பழைய மாணவர்களாகவே உள்ளார்கள். அதிலும் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் தான் துரைமுருகன். அவர்களைக் கையாள்வதற்கு, Hatsoff” என்றவர். ``நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுமையும், அவருடைய உழைப்பு தான் காரணம்” என்றார். தொடர்ந்து ``தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார். வேறு யாருக்கு அப்படி நடந்ததுமில்லை. நடக்கப்போவதுமில்லை.

கலைஞரைப் போல் சோதனைகள் வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால் காணாமல் போயிருப்பார்கள். கலைஞரின் புகழ் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கலைஞரை ராஜ்நாத் சிங் அரைமணி நேரம் பாராட்டிப் பேசியுள்ளார் என்றால், அவருக்கு மேலிடத்திலிருந்து சொல்லியிருப்பார்கள். அரசியலில் எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கலைஞர் கையாண்டார். ஆனாலும் தற்போதும் சிலர் விமர்சனம் செய்கிறனர். அது பிறர் மனதை நோகடிக்கும் வகையில் இருக்கக் கூடாது. கலைஞரைப் போல் தற்போது செய்தியாளர்களைச் சந்திப்பவர்கள் யாரும் இல்லை” என்றவர்... அவருடனான தனிப்பட்ட நினைவுகளையும் பகிரத் தொடங்கினார். ``ஆட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்து எடுத்த சிவாஜி படத்தையும் பார்த்துவிட்டு, கலைஞர் பாராட்டியிருந்தார்.

`கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழா

சமூகத்துக்காக மிகவும் பாடுபட்டவர் கலைஞர். அவரைப்பற்றி இன்னும் பல்வேறு புத்தகங்கள் எழுதலாம். திரைப்படம் கூட எடுக்கலாம். தற்போதெல்லாம் அவரைப்போல யாரும் செய்தியாளர்களைச் சந்திக்க முன்வருவதில்லை. கலைஞரின் பேச்சு வீணை போல் ஒரே நேராக இருக்கும்” என்றார்.

நூல் வெளியீட்டு விழாவில் ஏற்புரை வழங்கிய எ.வ.வேலு ``முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடந்தபோது, `பெரியவர் கலைஞர் முதல்வராக இருக்கும் நான் அதில் நடிப்பதா...' என மறுத்தார். அந்த அளவுக்குக் கலைஞர் மீது ரஜினிகாந்த்துக்கு மரியாதை இருந்தது” எனப் பேசியது குறிப்பிடத்தக்கது



from Vikatan Latest news https://ift.tt/hnvY2Bw

Post a Comment

0 Comments