விடுதலை சிறுத்தைகள் Vs நாம் தமிழர்... திடீர் மோதலின் பின்னணி என்ன?!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது...``சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்’` என நா.த.க-வினரும், ``திருமாவளவன் மீது நாகரீகமற்ற தாக்குதலை நா.த.க-வினர் தொடுக்கின்றனர்” என வி.சி.க தரப்பும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். `நாங்கள் நட்புசக்தி` என ஒருவருக்கொருவர் பேசிவந்த நிலையில் ஏன் இந்த திடீர் மோதல் என விரிவாக விசாரித்தோம்.

திருமாவளவன்

சென்னை காமராஜர் அரங்கில் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா அக்கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் இசையரங்கம், கவியரங்கம், வாழ்த்தரங்கம் மற்றும் பட்டிமன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தேறின. குறிப்பாக கவியரங்கத்தின்போது திருமா-வை வாழ்த்திய கவிஞர்கள் பா.ம.க, நா.த.க மற்றும் பா.ஜ.க-வை விமர்சித்தும் கவிதை வாசித்தனர். குறிப்பாக வழக்கறிஞர் சினேகா என்பவர் சீமானை தமிழகத்தின் நவீன கோமாளி எனக் குறிப்பிட்டு, ``பிரபாகரனை ஆமை சமைப்பவராய் அவமதிக்கும் இவரு... தமிழகத்தில் ஆர்எஸ்எஸின் பிசிறு” என்றார்.

தொடர்ந்து `திராவிடத்தை அளிக்க ஆரியம் அனுப்பிய விஷ குப்பி... ” என கடுமையாக பேசியது சமூக வலைதளங்களில் அனலை கிளப்பியது. அவர் மட்டுமில்லாமல் கவிஞர் தனிக்கொடி ஜீவா, என்பவரும் திராவிட பற்றாளர் சுந்தரவள்ளி மற்றும் சில யூட்யூபர்களும் நா.த.க-வை கடுமையாக தாக்கிப் பேசினர். இதனால் சூடான நா.த.க-வினர் திருமாவளவனை நேரடியாகவும் ஒருமையிலும் விமர்சிக்க.. வி.சி.க-வினரும் பதிலடி கொடுக்க தொடங்கினர்.

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக்

நம்மிடம் பேசிய நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக் ``வி.சி.க-வை ஒருபோதும் எதிரியாக நாங்கள் பார்ப்பதில்லை. தேர்தல் பிரசாரங்களில்கூட வி.சி.க-வை விமர்சிக்க வேண்டாம் என்றுதான் எங்கள் கட்சி தலைமை உத்தரவிட்டது. ஆனால் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, எங்கள்மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்து, கட்சி பெயரையே வேறு விதமாக சொல்லி கலங்கப்படுத்துகிறார். திருமாவின் பிறந்தநாள் நிகழ்வில் சொல்லிவைத்ததுபோல் அனைவருமே நா.த.க-வை வசைபாடியிருக்கிறார்கள்.

இது திருமா-வின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்குமா? முதல் நபர் அவதூறாக விமர்சிக்கும்போதே அவர்கள் தடுத்திருக்கலாமே.. ஒருவேளை தி.மு.க-வை விமர்சிக்கும் கருத்துகள் சொல்லப்பட்டிருந்தால் `இது கவிஞர்களின் உரிமை’ என சொல்லியிருப்பார்களா... தடுத்திருப்பார்களா? இதனையெல்லாம் திருமாவளவன் மேடையில் அமர்ந்து ரசிப்பதை எப்படி ஏற்க முடியும்?” எனக் கேட்டவரிடம், `திருமாவளவனை நா.த.க-வினர் அவதூறாக விமர்சித்து வருகிறார்களே?’ என்றோம் ``வி.சி.க-வினர் இவ்வளவு பேசிய பிறகு எதிர்வினையாக ஆத்திரத்தில் சில பொறுப்பாளர்கள் விமர்சித்திருக்கலாம். அது தவிர்க்க முடியாததுதான்” என்றார்.

சங்கத் தமிழன்

இதுகுறித்து விளக்கம்கேட்ட வி.சி.க இளைஞர் அணி மாநிலச்செயலாளர் சங்கத் தமிழனிடம் பேசினோம் ``கவிரயரங்க நிகழ்வுக்கு வந்த கவிஞர்களின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் உடன்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் பேசியதெல்லாம் வி.சி.க-வின் கருத்தாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

குறிப்பாக சீமான் குறித்து கவிஞர் சினேகா பேசியது கட்சியின் நிலைப்பாடல்ல. கடந்த காலங்களில் சீமானை கடுமையாக பேசியதற்கு `அப்படி பேச வேண்டாம்` என வலியுறுத்தினார் திருமா. எனவே தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து கொள்கை ரீதியாக பேசுவதே எங்கள் வழக்கம். ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் அடிப்படை புரிதலின்றி, முதிர்ச்சியற்று திருமா மீது நாகரீகமற்ற தாக்குதலை தொடுப்பது கண்டிக்கதக்கது” என்றார்.

திருமாவளவன்

அரசியல் விமர்சகர் சிலரிடம் பேசுகையில், ``நாம் தமிழர் கட்சியை நட்புசக்தியாக பார்க்கிறோம் என திருமாவளவன் குறிப்பிட்டாலும் அதன் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்களே தொடர்ச்சியாகவே நா.த.க-வை கடுமையாக விமர்சிக்கிறார். அதேபோல் `திருமாவளவனை விமர்சிக்க கட்சி தொடங்கவில்லை’ என சீமான் சொன்னாலும் திருமாவளவனை நா.த.க-வினர் எல்லைமீறி விமர்சித்திருக்கிறார்கள். மோதல் போக்கு தொடர்வதும், ஓய்வதும் அதன் தலைவர்கள் கையில்தான் உள்ளது” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/KLSrYuA

Post a Comment

0 Comments