வேலூர் மாவட்ட மலைகளில் 5 லட்சம் விதைப்பந்துகள்; 3000 மாணவிகளுடன் இணைந்து செயல்படுத்திய ஆட்சியர்!

வேலூர் மாவட்டத்திலுள்ள மலைகளைப் பசுமைப் படர்ந்த சோலை வனமாக உருவாக்கும் நோக்கத்தோடு, மென்பொருள் பொறியாளரும் பசுமைப் பாதுகாவலருமான தினேஷ் சரவணனை இணைத்து ஒரு முன்மாதிரி திட்டத்தை வகுத்தார் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி. அதன்படி, விதைகளைச் சேகரிக்கும் பொறுப்பைப் பசுமை ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்றுக்கொண்டார். `ஜவ்வாது’ மலைத்தொடரைச் சேர்ந்த பழங்குடியின மக்களைக் கொண்டு 5 லட்சம் விதைகளைச் சேகரிக்கத் தொடங்கினார். விதைச் சேகரிப்பால் பழங்குடியின மக்களுக்கும் வருவாய் ஏற்படுத்திக் கொடுத்தார்.

பசுமைப் பாதுகாவலர் தினேஷ் சரவணன்

சுமார் 200, 300 ஆண்டுகள் முதிர்ச்சியான மரங்கள் ஜவ்வாது மலைத் தொடரில் அதிகமாக இருக்கின்றன. அவற்றிலிருந்து ஆலம், அரசு, அத்தி, வேப்பம், மருது உள்ளிட்ட 10 வகையான நாட்டு ரக விதைகளைச் சேகரித்துக் கொண்டுவந்தார்.

இதையடுத்து, சேகரிக்கப்பட்ட விதைகளைக் கொண்டு ஒரே நாளில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சியை, கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காட்பாடி அக்சிலியம் கல்லூரியில் ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். அக்சிலியம் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாயிரம் மாணவிகள் மிக ஆர்வமாக முன்வந்து மண், மணல், எரு கலந்து அன்று ஒரே நாளில் ஐந்து லட்சம் விதைப் பந்துகளைத் தயார் செய்தனர்.

கடந்த 15 நாள்கள் நிழலில் காய வைக்கப்பட்ட விதைப்பந்துகளை, மலைப் பகுதிகளில் தூவும் நிகழ்ச்சியைச் செப்டம்பர் 25-ம் தேதியான நேற்றைய தினம் தொடங்கி வைத்தார் ஆட்சியர் சுப்புலட்சுமி. சத்துவாச்சாரி அருகேயுள்ள தீர்த்தகிரி மலைப் பகுதியில் ஊரீசு கல்லூரி மாணவ, மாணவிகள் 100 பேரைக்கொண்டு விதைப்பந்துகள் தூவப்பட்டன.

மாணவ - மாணவிகளுடன் இணைந்து விதைப்பந்துகளை தூவும் ஆட்சியர் சுப்புலெட்சுமி

தொரப்பாடி மலைப் பகுதியில் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி மற்றும் டி.கே.எம் மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சென்று விதைப்பந்துகளைத் தூவினார்கள். அதேபோல, குடியாத்தம் உள்ளி மலைப் பகுதியில் திருமகள் ஆலைகள் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமாகவும், வடுகந்தாங்கல் மலைப் பகுதியில் அக்சிலியம் கல்லூரி மாணவிகள் மூலமாகவும் விதைப்பந்துகள் தூவப்பட்டன. நேற்று ஒரே நாளில் 4 மலைப் பகுதிகளில் தலா 25,000 என மொத்தமாக 1 லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட்டன. மீதமுள்ள 4 லட்சம் விதைப்பந்துகளும் அடுத்தடுத்து தூவப்பட இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பசுமை ஆர்வலர் தினேஷ் சரவணன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.



from Vikatan Latest news https://ift.tt/BGWNDIk

Post a Comment

0 Comments