ஒன் பை டூ: `மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருக்கிறது' என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனம்?

கலை கதிரவன்

கலை கதிரவன், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் தி.மு.க

“தமிழ்நாட்டு பாடநூல்களில் சாவர்க்கரும் கோட்சேயும் இல்லையே என்ற ஆதங்கத்தில் பேசியிருப்பதுபோல் தெரிகிறது. பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்திலும் 93.1 மதிப்பெண்கள் பெற்று, இந்திய அளவில் தமிழ்நாடு மிகச் சிறப்பாக இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களே, தமிழ்நாடு அரசு பாடநூல்களைத்தான் படிக்கிறார்கள். தகைசால் பள்ளிகள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி வழங்குவது, ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ எனத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை நவீனமாக்கி வருகிறார் நமது முதல்வர். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதத்திலும் (GER) 47%-துடன் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடே இருக்கிறது. ஆனால், எந்தப் புள்ளிவிவரமுமின்றி ஆளுநர் பேசியிருக்கிறார். மும்மொழிக் கல்விக் கொள்கை மூலமாக இந்தியைத் திணிப்பது, சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கென வழங்கப்படவேண்டிய நிதியை முடக்குவது உள்ளிட்ட வேலைகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. அது குறித்து வாய் திறக்காத ஆளுநர், ஆதாரமின்றி மாநில பாடத்திட்டத்தின் தரத்தைக் குறைத்துப் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.”

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“தமிழகத்தில் செயல்படும் பெரிய தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை, மாநில அரசின் பாடத்திட்டத்தை ஏற்பதில்லை. அவ்வளவு ஏன்... திராவிட கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளிலும்கூட மத்திய அரசின் பாடத்திட்டமும், மும்மொழிக் கொள்கையுமே கடைப்பிடிக்கப் படுகிறது. மத்திய அரசின் பாடத்திட்டம் தரமானது என்பதே இதற்குக் காரணம். ஆனால், அதே பாடத்திட்டங்கள் சாமானிய மக்கள் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வைச் சரிசெய்யவேண்டியது அவசியம். தமிழகத்தில் கல்விக் கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை மேலும் மேம்படுத்த மத்திய பாடத்திட்டமும், தேசிய கல்விக்கொள்கையும் உதவும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. `மாநில அரசு சுயமாக முடிவெடுக்கலாம்’ என்ற அம்சமும் அதில் இருக்கிறது. இந்தியைத் திணிப்பது, மத்திய அரசின் நோக்கமல்ல. ஆனால், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். அரசியலை விட்டுவிட்டு மாணவர்களின் நலனுக்காகத் தமிழக அரசு முடிவெடுக்கவேண்டியது அவசியம். அதைத்தான் ஆளுநரும் பேசியிருக்கிறார்.”



from Vikatan Latest news https://ift.tt/qAyPQ42

Post a Comment

0 Comments