செளதி அரேபியா இதுவரை கொண்டிருந்த பழமைவாதங்களை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து, தனது செயல்களால் உலகச் செய்திகளில் உலாவரும் செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் ‘பாசிட்டிவ் இமேஜ்’ மீது பெரும் சந்தேகத்தைக் கிளப்புகிறது அவரது மறுபக்கம்.
செளதியின் வரலாறு:
செளதி இளவரசரின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன்பு, கொஞ்சம் செளதியின் வரலாற்றையும் தெரிந்து கொள்வோம்.
நவீன செளதி அரேபியாவின் வரலாறு என்பது அதன் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட பின் துவங்குகின்றது. ஆனால், அரேபியாவிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர்கள் உலவிய நிலம் அது. அப்போது அரேபிய தீபகற்பம் வளமான பகுதியாக இருந்தது. ஆறுகளும், குளங்களும், புல் வெளிகளும் என அந்த நிலப்பரப்பு செழுமையாக இருந்தது.
பின்னர் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய நவீன மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து தனது யாத்திரையைத் தொடங்கிய போது முதலில் கால் வைத்தது மத்திய கிழக்குப் பகுதியில் தான். அங்கிருந்து தான் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் நம் முன்னோர்கள் தங்கள் பயணத்தை விரிவுபடுத்தினர்.
சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி சில நூறாண்டுகள் நீடித்த கடைசி பனியுகம், பூமியின் நிலவியல் தன்மைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. வளமான அரேபிய தீபகற்பம் கொடும் பாலைவனமானது. காடுகளும், அழகிய புல்வெளிகளும் அழிந்து போயின. அவற்றின் இடங்களை மணற்குன்றுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அரேபிய தீபகற்பத்தை அலங்கரித்த பல விலங்கினங்கள் அழிந்து போயின. எனினும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த நவீன மனித இனம் இயற்கையின் கொடும் தாக்குதலைத் தீரத்துடன் எதிர் கொண்டு அங்கேயே தங்கியது. போராடியது.
கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் செழிப்பாய் விளங்கியது எகிப்து ராஜ்ஜியம். அது கிழக்கத்திய நாடுகளுடன் நடத்திய வணிகத்திற்கு நில வழியையே பெரிதும் சார்ந்திருந்தது. கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலமாக மத்திய கிழக்கு விளங்கியது. கடல் வழித்தடங்களும் அரேபியத் தீபகற்பத்தின் கரைகளோடு பிணைந்திருந்தன.
அந்தக் காலத்திய அரேபியாவில் வணிகர்கள் நிறைந்திருந்தனர். அவர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேடும் திறனையும், அறிவையும் கொண்டிருந்தனர். விவசாயமோ, மேய்ச்சலோ அற்ற அரேபிய தீபகற்பத்தின் நாட்டுப்புற சமூகம் பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து கிடந்தது.
நபிகள் நாயகத்திற்கு பின்பு:
நபிகள் நாயகத்தின் பிறப்பிற்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து அரபு தீபகற்பத்தின் வரலாற்றைத் தீர்க்கமாக மாற்றும் மற்றொரு நிகழ்வு என்றால் அது அந்நிலத்தில் கச்சா எண்ணெய் கண்டறியப்பட்டது தான். சென்ற 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மத்திய கிழக்கிலும் 1938-ம் ஆண்டு செளதி அரேபியாவிலும் பெட்ரோல் கண்டறியப்பட்டது.
மத்திய கிழக்கின் மண்ணுக்குள் எண்ணை வளம் புதைந்து கிடப்பதை மேற்குலக நாடுகள் அறிந்த கொண்ட பின் வரலாறு வேறு திசைக்குத் திரும்பியது. அது வரை ‘இசுலாமிய காட்டுமிராண்டி இனக்குழுக்கள்’ என வெறுப்போடு பார்த்த மேற்குலகம் அரேபியத் தீபகற்பத்தின் மீது தனது காதல் பார்வையை வீசத் துவங்கியது.
நவீன செளதி அரேபியாவின் அரசியலை தீர்மானிக்கக் காரணமாக இருந்தது எண்ணெய் வளம்தான். 20-ம் நூற்றாண்டில்தான் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தான் நவீன தொழிற்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன. இந்த நாடுகளின் தொழில் வளர்ச்சியை உந்தித் தள்ள எண்ணெய் தேவையாக இருந்தது. இத்தனைக்கும் அமெரிக்க நிலத்தினடியிலும் அள்ள அள்ளக் குறையாத எண்ணை வளம் இருக்கத் தான் செய்தது. இன்றளவும் தனது நிலத்தடி எண்ணை வளத்தைப் பெரிதும் சுரண்டாமல் வைத்திருக்கும் அமெரிக்கா, சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே தனது கவனத்தை மத்திய கிழக்கின் பக்கம் திருப்பியது.
தொழிற்துறையில் வளர்ந்திருந்த மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கு இடையே வளைகுடா நாடுகளின் எண்ணை வளத்தைக் கைப்பற்றும் போட்டி முதலாம் உலகப் போருக்கு பிந்தைய ஆண்டுகளில் உக்கிரமடைந்தது.
செளதி வரலாறு குறித்த பிற கட்டுரைகளை படிக்க:
-
செளதி அரேபியா வரலாறு : செளத் குடும்பம் இப்படிதான் Saudi எனும் நாட்டை உருவாக்கியது |பாகம் 2
-
செளதி அரேபியா வரலாறு : அந்நாட்டு அரச குடும்பம் எங்கெல்லாம் முதலீடு செய்து இருக்கிறது? | 3
செளத் குடும்பத்தின் கதை:
அன்றைக்கு பல்வேறு அரபு இனக்குழுக்களைச் சேர்ந்த யுத்த பிரபுக்களும் குறுநில மன்னர்களும் சிறுசிறு பகுதிகளை ஆண்டு வந்தனர். அதில் திரிய்யா எமிரேட் எனப்படும் ஒரு குட்டி ராஜ்ஜியத்தின் இளவரசர் தான் முகம்மது இப்னு சவூத்.
மொத்த அரபு தீபகற்பத்தையும் ஒரு சாம்ராஜ்ஜியமாக கட்டியெழுப்ப வேண்டும் என்கிற கனவு முகம்மது இப்னு சவூதுக்கு இருந்தது. இராணுவ ரீதியில் கில்லாடியான அவர் எத்தனை முயற்சித்தும் தனது கனவை நனவாக்க முடியவில்லை. இந்நிலையில் தான் முகம்மது சவூதோடு கைகோர்க்கிறார் அல்-வஹாப். போர்வாளும் மதமும் ஒன்றை ஒன்று ஆரத்தழுவிக் கொண்ட அந்த நிகழ்வு மிக முக்கியமானது.
பிறகு திரிய்யா எமிரேட் அரசு பல்வேறு விரிவாக்க யுத்தங்களில் ஈடுபட்டது. அரபு தீபகற்பத்தைச் சேர்ந்த சின்னஞ்சிறு ராஜ்ஜியங்கள் அல்-வகாபின் கடுங்கோட்பாட்டுவாதத்தின் முன்னும் இப்னு சவூதின் வாளின் முன்னும் எதிர்த்து நிற்க முடியாமல் சீட்டுக் கட்டு மாளிகையாக சரிந்து விழுந்தன. அரபு தீபகற்பத்தின் பிற பகுதிகளில் நிலவி வந்த தர்ஹா வழிபாடு (இறந்தோரை வணங்குவது) உள்ளிட்ட முறைகளை வகாபிசம் அடியோடு ஒழித்துக் கட்டியது. மதக் கடுங்கோட்பாட்டுவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இசுலாமிய நாட்டை உருவாக்குவதில் வெற்றி பெற்றார் இப்னு சவூத்.
அந்த சமயத்தில் மத்திய கிழக்கில் செல்வாக்காக இருந்த கடைசி கிலாஃபத் ராஜ்ஜியமான ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தின் கண்களை அரபு தீபகற்பத்தில் பற்றிக் கொண்ட காட்டுத் தீ உறுத்த துவங்குகியது. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமன் பேரரசர் தனது எகிப்திய தளபதியின் தலைமையில் ஒரு பெரிய படையை அரபு தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது நடந்த கடும் போரில் செளதி ராஜ்ஜியம் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரைக்கும் ஒரு நிலையான அரசாட்சியின்றி செளதி வம்ச வாரிசுகள் அலைந்து கொண்டிருந்தனர். சில காலத்திற்கு ரியாத்தைச் சுற்றியுள்ள மிகச் சிறிய பகுதியைக் கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள்.
ஆட்சியதிகாரத்தை இழந்தனர் என்றாலும் அல்-வகாப் உருவாக்கி பற்ற வைத்த வகாபியம் என்கிற நெருப்பு மட்டும் அணையவில்லை. மக்களின் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே வகாபியிசம் மாறிவிட்டிருந்தது.
முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். துருக்கியை மையமாக கொண்டு மத்திய கிழக்கு நாடுகளை ஆண்டு வந்த ஒட்டோமன் சாம்ராஜ்ஜியம் அந்த சமயத்தில் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுக்கிறது. தோற்கும் குதிரையான அச்சுநாடுகளை (ஜெர்மன், ஆஸ்த்ரியா, இத்தாலி) ஆதரித்து நேச நாடுகளின் (இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா) கோபத்தை சம்பாதித்துக் கொண்டது ஒட்டோமன் சாம்ராஜ்ஜியம்.
இந்த சூழ்நிலையை மிகச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் செளத் வம்சாவளியைச் சேர்ந்த இப்னு செளத். அவர் உடனடியாக இங்கிலாந்துக்கு ஆதரவு கொடுக்கிறார். பதிலுக்கு செளதியை ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுவிக்க உதவுமாறு இங்கிலாந்தை கேட்டுக் கொள்கிறார். போரின் முடிவு நமக்குத் தெரியும். நேசநாடுகள் வெற்றி பெறுகின்றன. அத்தோடு மத்திய கிழக்கின் கடைசி கிலாஃபத்தான ஒட்டோமன் சாம்ராஜ்ஜியம் துண்டு துண்டாக சிதறிப் போகிறது. கலீஃபா முறையும் ஒரு முடிவுக்கு வருகின்றது.
அவ்வாறு சிதறியதில் கொஞ்சம் பெரிய துண்டு செளதி அரேபியாவாக, ஒரு நாடாக நிலை பெறுகின்றது. இப்னு செளத் மற்றும் அல்-வகாப் ஆகியோரின் வழிவந்த வாரிசுகள் தமக்குள் மண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு செளதி அரசின் பல்வேறு அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தனர் - இது இன்றைக்கு வரை அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தன்னுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வல்லரசு நாடுகளுக்கு தனது எண்ணை வளத்தை திறந்து விட்டது செளதி அரசு. வகாபிய கடுங் கோட்பாடுகளைக் கொண்டு தன் நாட்டு மக்களை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மீண்டும் வல்லரசு நாடுகள் பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டன. ஜெயிக்கும் குதிரையை அடையாளம் காண்பதில் வல்லவர்களான செளதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவிடம் சரணடைகிறது. அது முதல் மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய அனைத்து பதிலிப் போர்களுக்கும் நம்பகமான கூட்டாளியாக செளதி விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம். செளதி அரேபியாவின் 90 வயது மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரரான சல்மான் அடுத்த மன்னராகவும், சல்மானின் விருப்பமான மகனான முகமது பின் சல்மான் அதிகாரத்துக்கும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
முகமது பின் சல்மான் - எம்பிஎஸ் (MBS) என்ற அவரது முதல் எழுத்துகளால் அறியப்படும் இளவரசருக்கு அப்போது 29 வயதுதான். அப்போதே தனது ராஜ்ஜியத்துக்காகவும், அதன் வரலாற்றுக்காகவும் மிகப் பெரிய திட்டங்களை மனதில் கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய செளதி அரச குடும்பத்துக்குள்ளேயே இருக்கும் சதிகாரர்கள் இறுதியில் தனக்கு எதிராகவே காய் நகர்த்தக் கூடும் எனவும் அஞ்சினார். எனவே, அந்த மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில், தனது விசுவாசத்தை வென்றெடுக்கும் பொருட்டு ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரியை அரண்மனைக்கு அழைத்தார்.
ஸாத் அல்-ஜாப்ரி என்ற அந்த அதிகாரியிடம் வெளியே இருக்கும் ஒரு மேசையின் மீது அலைபேசியை வைத்துவிட்டுச் செல்லுமாறு கூறப்பட்டது. முகமது பின் சல்மானிடம் செல்போன் இல்லை. அவர்கள் இருவரும் இப்போது தனியாக இருந்தனர். அரண்மனை உளவாளிகள் குறித்து பயந்த இளவரசர், அங்கு இருந்த ஒரே லேண்ட்லைன் தொலைபேசியின் தொடர்பையும் துண்டித்தார்.
ஜாப்ரியின் கூற்றுப்படி, எம்பிஎஸ் அப்போது எவ்வாறு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தனது ராஜ்ஜியத்தை எழுப்பி, சர்வதேச அரங்கில் அதற்கென ஒரு சரியான இடத்தை பெற உதவுவது என்பது குறித்து பேசியுள்ளார்.
அரசின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான உலகில் அதிகம் லாபம் கொழிக்கும் ‘அராம்கோ’ (Aramco) பங்குகளை விற்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் எண்ணெய்யை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை தவிர்த்தல், டாக்ஸி நிறுவனமான உபெர் உள்ளிட்ட சிலிகான் பள்ளத்தாக்கு ஸ்டார்ட்-அப்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்தல், செளதி பெண்கள் பணியில் சேருவதற்கான சுதந்திரத்தை அளிப்பதன் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
அலெக்ஸாண்டர் தி கிரெட்டும், MBS-உம்
இவ்வாறாக அடுக்கப்பட்ட திட்டங்களைக் கேட்டு ஆச்சர்யமடைந்த ஜாப்ரி, ‘உங்கள் லட்சியத்தின் எல்லை என்ன?’ இளவரசரை நோக்கி கேட்டார். அதற்கு அவரிடம் இருந்து ஒரு சாதாரண கேள்வியே பதிலாக வந்தது. அது: “அலெக்ஸாண்டர் தி கிரேட் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
அரை மணி நேரத்துக்கு மட்டுமே திட்டமிட்டப்பட்ட அந்த நள்ளிரவு ஆலோசனை மூன்று மணி நேரம் நீடித்திருந்தது. அறையை விட்டு வெளியேறிய ஜாப்ரி தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்தபோது, அவரை நீண்டநேரமாக காணாததால் கவலை அடைந்திருந்த அவரது சக அரசு அதிகாரிகளின் சில மிஸ்டு கால்கள் வந்திருந்ததைக் கண்டார்.
இது குறித்த ஆவணப்படத்தை பிபிசி தயாரித்து இருக்கிறது.
“செளதியின் பாதுகாப்பு அமைப்பில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்தான் ஸாத் அல்-ஜாப்ரி. அவர் சிஐஏ மற்றும் எம்ஐ6 உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். செளதி அரசாங்கம் ஜாப்ரியை ஒரு மதிப்பிழந்த முன்னாள் அதிகாரி என்று குறிப்பிட்டாலும், அவர் செளதி அரேபியாவை அதன் பட்டத்து இளவரசர் எவ்வாறு ஆட்சி செய்கிறார் என்பதைப் பற்றி பேசத் துணிந்த அதிருப்தியாளரும் கூட. அவர் எங்களுக்கு அளித்த அரிய பேட்டியில் இருக்கும் விவரங்கள் வியப்பளிப்பதாக உள்ளன,” என்கின்றனர் அந்த பிபிசி குழுவினர்.
மேலும் அவர்கள், “இளவரசரை தனிப்பட்ட முறையில் அறிந்த பலரை அணுகியதன் மூலம், முகமது பின் சல்மானை மோசமான நபராக மாற்றிய நிகழ்வுகள் பற்றிய புதிய தகவல்களை நாங்கள் தந்திருக்கிறோம். குறிப்பாக, 2018-ஆம் ஆண்டு செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை மற்றும் ஏமனில் பேரழிவு மிக்க ஒரு போரை கட்டவிழ்த்து விட்டதை அடிக்கோடிடலாம்,” என்கின்றனர்.
மனித உரிமை மீறல்களும், இளவரசரும்
தனது தந்தை மிகவும் பலவீனமாக இருப்பதால், 38 வயதாகும் முகமது பின் சல்மான் தான் இப்போது இஸ்லாத்தின் பிறப்பிடமான, உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாட்டின் நிழல் பொறுப்பாளராக இருக்கிறார். ஸாத் அல்-ஜாப்ரியிடம் தான் விவரித்த முன்னோடி திட்டங்களில் பலவற்றை அவர் நடைமுறைப்படுத்த தொடங்கி இருக்கிறார். இன்னொரு பக்கம், கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது, மரண தண்டனையை பரவலாக பயன்படுத்துவது, பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களை சிறையில் அடைப்பது உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளார்.
முகமது பின் சல்மானின் தந்தை சல்மான் உட்பட 42 மகன்களை பெற்றிருந்தார் செளதி அரேபியாவின் முதல் மன்னர். இந்த மகன்களுக்கு இடையே பாரம்பரியமாக மாறி மாறி வந்த கிரீடம், 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் இரு சகோதரர்கள் இறந்து போகவே, சல்மானிடம் வந்தது.
மேற்கத்திய உளவு அமைப்புகள், செளதியின் அடுத்த ஆட்சியாளர் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கட்டத்தில், முகமது பின் சல்மான் மிகவும் இளைஞராகவும் அறியப்படாதவராகவும் இருந்ததால், அவர்களுடைய ரேடாரிலேயே அவர் இல்லை.
“ஒப்பீட்டளவில் அவர் முக்கியத்துவம் அற்றவராக வளர்ந்தார். அதிகாரத்துக்கு வரும் நோக்கில் அவர் பார்க்கப்படவில்லை” என்று 2014-ஆம் ஆண்டு வரை எம்ஐ6 தலைவராக இருந்த சர் ஜான் சாவர்ஸ் கூறுகிறார்.
பட்டத்து இளவரசரும், தீய நடத்தைகள் சில விளைவுகளை ஏற்படுத்திய ஓர் அரண்மனையில்தான் வளர்ந்தார். தான் ஏற்கெனவே எடுத்த சில முடிவுகளின் தாக்கத்தை பற்றி சிந்திக்காத அவரது மோசமான பழக்கத்தை விளக்க இது உதவலாம்.
முகமது பின் சல்மானின் முதல் கெட்ட பெயர், அவரது பதின்பருவத்தின் பிற்பகுதியில் கிடைத்தது. ஒரு சொத்துப் பிரச்னையில் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஒரு நீதிபதிக்கு தபாலில் ஒரு புல்லட்டை அனுப்பியதால் அவருக்கு ‘அபு ரஸாஸா’ அல்லது ‘புல்லட்டின் தந்தை’ என்ற பட்டப்பெயர் கிடைத்தது.
அவர் ஒரு குறிப்பிடத்தக்க இரக்கமற்றத்தன்மையை கொண்டிருந்ததாக சர் ஜான் சாவர்ஸ் குறிப்பிடுகிறார். “தன் வழியில் யாரும் குறுக்கே வருவதை அவர் விரும்பவில்லை. ஆனால், வேறு எந்த செளதி ஆட்சியாளரும் செய்யமுடியாத மாற்றங்களை அவரால் கொண்டு வரமுடியும் என்பதும் இதன் அர்த்தமாகும்.”
ஜிஹாத், குறைக்கப்பட்ட நிதி
மிகவும் வரவேற்கத்தக்க மாற்றங்களில் ஒன்றாக முன்னாள் எம்ஐ6 தலைவர் கூறுவது என்னவெனில், வெளிநாட்டு மசூதிகள் மற்றும் ஜிஹாதிசத்தை வளர்த்தெடுக்கும் மையங்களாக இருக்கும் மதபோதனை பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியதவிகளை செளதி குறைத்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய நன்மை.
முகமது பின் சல்மானின் அம்மா ஃபஹ்தா, பெடோயின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண். அத்துடன் இளவரசருடைய தந்தையின் நான்கு மனைவிகளில் அவருக்கு மிகவும் பிடித்தவர். பல ஆண்டுகளாக வாஸ்குலர் டிமென்ஷியா நோயால் அவதிப்பட்டு வந்த மன்னர், தன்னுடைய உதவிக்கு அழைத்தது முகமது பின் சல்மானை தான் என மேற்கத்திய தூதுவர்கள் நம்புகின்றனர்.
முகமது பின் சல்மான் மற்றும் அவருடைய தந்தை உடனான தங்களது சந்திப்புகளை சில தூதுவர்கள் நம்மிடம் நினைவுகூர்ந்தனர். அதன்படி, மன்னர் அடுத்து பேச வேண்டிய குறிப்புகளை, இளவரசர் தனது ஐபேடில் எழுதி, அவற்றை தனது தந்தையின் ஐபேடுக்கு அனுப்புவாராம்.
2014-ஆம் ஆண்டு தனது தந்தை மன்னராக வேண்டும் என்ற நோக்கில், அப்போதைய மன்னரும் தனது பெரியப்பாவுமான அப்துல்லாவை, ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட விஷம் தடவப்பட்ட மோதிரத்தின் மூலம் இளவரசர் முகமது பின் சல்மான் கொன்றதாக கூறப்படுகிறது.
“அவர் தற்பெருமையாக சொன்னாரா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால், அதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டோம்” என்று கூறுகிறார் முன்னாள் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஜாப்ரி. இந்த யோசனை குறித்து முகமது பின் சல்மான் பேசும் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு வீடியோவை தான் பார்த்ததாகவும் கூறுகிறார். “குறிப்பிட்ட காலத்துக்கு மன்னருடன் அவர் கைகுலுக்குவதை நீதிமன்றம் தடை செய்திருந்தது.”
இறுதியில், மன்னர் இறந்ததும், அவருடைய சகோதரர் சல்மான் 2015-ஆம் ஆண்டு அரியணை ஏறினார். பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்ற அவர், உடனடியாக போருக்கு புறப்பட்டார்.
இரான் VS செளதி இடையே ஏமன்
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹவுத்தி இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பை இளவரசர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டணி மேற்கு ஏமனின் பெரும்பகுதியை கைப்பற்றியது. அவர் ஏமனை செளதி அரேபியாவின் பிராந்திய எதிரியான ஈரானின் பினாமியாக கருதினார். இந்த யுத்தம், லட்சக்கணக்கான மக்களை பஞ்சத்தின் விளிம்பில் தள்ளி, ஒரு மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுத்தது.
அது புத்திசாலித்தனமான நடவடிக்கை இல்லை என்கிறார் போர் தொடங்குவதற்கு முன்பு பிரிட்டிஷ் தூதராக இருந்த சர் ஜான் ஜென்கின்ஸ். “நடவடிக்கைக்கு 12 மணி நேரத்துக்கு முன்பே தங்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஒரு மூத்த அமெரிக்க ராணுவ கமாண்டர் என்னிடம் கூறினார். இது அதுவரை கேள்விப்படாத ஒன்று.” ராணுவ நடவடிக்கைகள், அதிகம் அறியப்படாத இளவரசரை செளதியின் ஹீரோவாக மாற்றின.
ஏமன் போர் தொடங்குவதற்கு முன்பாக அது குறித்து வெள்ளை மாளிகையுடன் ஆலோசித்ததாக ஜாப்ரி கூறுகிறார். அப்போதைய அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சூசன் ரைஸ், வான்வழி நடவடிக்கைக்கு மட்டுமே அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று எச்சரித்துள்ளார். எனினும், ஏமனை தாக்குவதற்கு மிகவும் உறுதியாக இருந்த முகமது பின் சல்மான் அமெரிக்காவை புறக்கணித்ததாக ஜாப்ரி கூறுகிறார்.
மேலும் ஜாப்ரி கூறுகையில், “தரைவழி தாக்குதலை அனுமதிக்கும் வகையில் ஓர் அரசாங்க ஆணை இருந்தது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த ஆணையில் அவரே தன் தந்தையின் கையெழுத்தை மோசடியாக போட்டிருந்தார். மன்னரின் மனநிலை மோசமாகிக் கொண்டிருந்தது” என்கிறார்.
அரசு ஆவணங்களில் முகமது பின் சல்மான் மோசடி செய்தாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்கிறார் முன்னாள் எம்ஐ6 தலைவர் சர் ஜான் சாவர்ஸ். “ஏமனில் ராணுவ ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது குறித்த முடிவு முகமது பின் சல்மான் உடையது தான் என்று தெளிவாகிறது. அது அவரது தந்தையின் முடிவல்ல. எனினும் அவரது தந்தையும் அதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்” என்றார் அவர்.
முகமது பின் சல்மான் ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு வெளியாளாகவே பார்த்தார். தன்னை நிறைய நிரூபிக்க வேண்டிய ஓர் இளைஞனாகவும், தன்னைத் தவிர யாருடைய விதிகளை ஏற்க மறுக்கக் கூடியவராகவும் அவர் தன்னை பார்த்தார்.
2017-ஆம் ஆண்டு ஒரு பிரபலமான ஓவியத்தை வாங்கிய முகமது பின் சல்மானின் செயல், அவர் சிந்திக்கும் விதம், அவர் ஆளும் மதரீதியிலான பழமைவாத சமூகத்தில் இருந்து வெளியேற பயப்படாமல், அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் குறித்து நமக்கு கூறுகிறது. அனைத்துக்கும் மேலாக அதிகாரத்தின் அடிப்படையில், மேற்கத்திய நாடுகளை விஞ்சுவதில் அவர் தீர்மானம் கொண்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டில், இதுவரை உலகின் மிக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட கலைப்பொருளாக இருக்கும் ‘சல்வதோர் முண்டி’ என்ற ஓவியத்தை 450 மில்லியன் டாலர் கொடுத்து ஏலத்தில் வாங்கினார் முகமது பின் சல்மான். லியானார்டோ டாவின்ஸியால் வரையப்பட்ட அந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்து, சொர்க்கம் மற்றும் பூமியின் எஜமானராகவும், உலகத்தின் காப்பாளராகவும் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பார்.
இளவரசருடன் தொடர்ந்து பேசுபவரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் நியர் ஈஸ்டர்ன் ஸ்டடீஸ் பேராசிரியருமான பெர்னார்ட் ஹெய்கல், அந்த ஓவியம் இளவரசரின் படகில் அல்லது அரண்மனையில் தொங்கவிடப்பட்டதாக வதந்திகள் பரவினாலும், அது தற்போது ஜெனீவாவில் இருப்பதாகவும், சவூதியின் தலைநகரில் கட்டப்பட இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் அதனை தொங்கவிட எம்பிஎஸ் விரும்புவதாகவும் கூறுகிறார்.
முகமது பின் சல்மான் ஒரு தலைவராக தன்னுடைய சொந்த அதிகாரத்தை கட்டமைக்க மிகவும் ஆர்வமாக இருந்ததாக இளவரசரை நேரில் சந்தித்த எம்ஐ6 முன்னாள் தலைவர் சர் ஜான் சாவர்ஸ் கூறுகிறார்.
செளதி அதிகாரியாக ஜாப்ரியின் 40 ஆண்டுகால வாழ்க்கை, முகமது பின் சல்மான் அதிகாரத்தின் முன்பு நீடிக்கவில்லை. இளவரசர் தனது அதிகாரத்தை கையில் எடுத்ததும், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீஃப்பின் தலைமை அதிகாரியாக இருந்த ஜாப்ரியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு வெளிநாட்டு உளவு நிறுவனம் கொடுத்த தகவலையடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். ஆனால், முகமது பின் சல்மான் தனக்கு திடீரென குறுந்தகவல் அனுப்பி, மீண்டும் வேலை தருவதாக உறுதியளித்ததாக ஜாப்ரி கூறுகிறார்.
“அது ஒரு தூண்டில். அதில் நான் சிக்கவில்லை” என்கிறார் ஜாப்ரி. ஒருவேளை திரும்பி வந்திருந்தால், தான் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். அவர் பயந்தது போலவே பின்னாட்களில் அவரது பதின்பருவ குழந்தைகளாக ஒமர் மற்றும் சாரா இருவரும் பண மோசடியில் ஈடுபட்டு தப்பிக்க முயன்றதாக கூறி சிறையில் தள்ளப்பட்டனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் மறுக்கின்றனர்.
“அவர் என்னை படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். என்னை பிணமாக பார்க்கும்வரை அவர் ஓயமாட்டார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் ஜாப்ரி. ஜாப்ரியை கனடாவில் இருந்து நாடு கடத்துமாறு சவூதி அதிகாரிகள் இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை. அவர் உள்துறை அமைச்சகத்தில் இருந்த காலத்தில் பில்லியன் கணக்கான டாலர் ஊழலில் ஈடுபட்டார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இருப்பினும், அல்-கொய்தா பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க உதவியதற்காக, ஜாப்ரிக்கு மேஜர்-ஜெனரல் பதவி வழங்கப்பட்டது. மேலும், அவர் சிஐஏ மற்றும் எம்ஐ6 ஆகியற்றால் கவுரவிக்கப்பட்டார்.
ஜமால் கஷோகி படுகொலை
2018-ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தவிர்க்க முடியாத சிக்கலில் முகமது பின் சல்மானை தள்ளியது. கஷோகியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. எலும்பை வெட்டும் கருவியால் பல துண்டுகளாக வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தக் கொலை நடந்த சில நாட்களில் இதுகுறித்து பேராசிரியர் ஹெய்கல் வாட்ஸ்அப்பில் முகமது பின் சல்மானை தொடர்பு கொண்டார். “இது எப்படி நடந்தது என்று நான் கேட்டேன். அவர் கடும் அதிர்ச்சியில் இருந்தார். இதற்கான எதிர்வினை இவ்வளவு ஆழமாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கவில்லை” என்றார் அவர்.
சில நாள்களுக்குப் பிறகு மூத்த அமெரிக்க ராஜதந்திரியான டென்னிஸ் ராஸ், முகமது பின் சல்மானை சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தான் அதை செய்யவில்லை என்று அவர் கூறினார். அது ஒரு மிகப் பெரிய தவறு என்றார். நான் அவர் சொல்வதை நம்பவே விரும்பினேன். ஏனெனில் அதுபோன்ற விஷயத்தை அவர் அங்கீகரித்திருப்பார் என்று என்னால் நம்ப இயலவில்லை” என்கிறார்.
இந்த சதி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றே முகமது பின் சல்மான் மறுத்து வந்துள்ளார். எனினும் 2019-ஆம் ஆண்டு தன்னுடைய கண்காணிப்பில்தான் அந்தக் குற்றம் நடந்தது என அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். 2021-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை, கஷோகி கொலைக்கு முகமது பின் சல்மான் உடந்தையாக இருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது.
இந்தக் கொலை ஒரு மிகப் பெரிய திருப்புமுனை என்று கூறும் சர் ஜான் சாவர்ஸ், இதன்மூலம் முகமது பின் சல்மான் சில பாடங்களை கற்றுக் கொண்டதாகவும், எனினும் அவரது நடத்தை அப்படியேதான் இருப்பதாகவும் கூறுகிறார்.
இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தை மன்னர் சல்மானுக்கு தற்போது வயது 88. ஒருவேளை அவர் இறந்தால் முகமது பின் சல்மான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சவூதி அரேபியாவை ஆட்சி செய்யக் கூடும். அவரை பலரும் கொலை செய்ய விரும்புவதாகவும், அது அவருக்கும் கூட தெரிந்திருப்பதாகவும் பேராசியர் ஹெய்கல் கூறுகிறார்.
எந்நேரமும் விழிப்புடன் இருப்பதே முகமது பின் சல்மான் போன்ற ஒரு மனிதருக்கு பாதுகாப்பு. அதைத்தான், இளவரசர் அதிகாரத்துக்கு வந்த தொடக்கத்தில், சுவரிலிருந்து தொலைபேசி இணைப்பை அவர் துண்டித்தபோது ஸாத் அல்-ஜாப்ரி கவனித்தார்.
தனக்கு முன்பிருந்தவர்கள் செய்யத் துணியாத வகையில், தன்னுடைய நாட்டை நவீனமயமாக்க வேண்டும் என்ற நோக்கம் இப்போதும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இருக்கவே செய்கிறது. ஆனால், தன்னை மேலும் தவறுகள் செய்யாமல் துணிச்சலுடன் தடுக்கும் அளவுக்கு தன்னைச் சுற்றி யாரும் இல்லாத இரக்கமற்றவராகவும் அவர் இருக்கிறார்.
from Vikatan Latest news https://ift.tt/p1aYzm2
0 Comments