Thalavettiyaan Palayam: "இந்தி சீரிஸ தமிழ் கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி மாத்துனோம்" -படக்குழு பேட்டி

இந்தி மொழியில் வெளியான 'பஞ்சாயத்' வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது 'தலைவெட்டியான் பாளையம்'.

'மர்மதேசம்' தொடரை இயக்கிய நாகாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸில், ஸ்டான்ட் அப் காமெடியன் அபிஷேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சேத்தன் மற்றும் தேவதர்ஷினி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸுக்காக 'தலைவெட்டியான் பாளையம்' டீமை சந்தித்துப் பேசினோம்.

இந்த வெப் சீரிஸ் பற்றி இயக்குநர் நாகா பேசுகையில், "'பஞ்சாயத்' சீரிஸ் பிரபலமானதுக்குப் பிறகு எல்லா மொழிகளிலேயும் பண்றதுக்கு திட்டமிட்டாங்க. அந்த நேரம் தமிழ்ல பண்றதுக்கு என்னுடைய பெயரை யாரோ சொல்லியிருக்காங்க. அதன் பிறகு சீரிஸை ரீமேக் பண்ணணும்னு என்கிட்ட பேசினாங்க. நான் இதுவரைக்கு ரீமேக் எதுவும் பண்ணினது இல்ல. ஒரிஜினல் கதைகளைத்தான் பண்ணியிருக்கேன். ஆனால், 'பஞ்சாயத்' சீரிஸ் எனக்குப் பிடிக்கும். நான் இந்தில அதை பார்த்திருக்கேன். தமிழுக்குப் பண்ணும்போது நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி சில விஷயங்களை மாத்தியாகணும். சீரிஸோட ஒரிஜினல் கிரியேடர்ஸ்கிட்ட நான் ரீமேக் பத்தி பேசினேன். அவங்ககிட்ட தமிழுக்கு ஏத்த மாதிரி விஷயங்கள் மாத்தணும்னு சொன்னேன். அதுக்கு அவங்க 'உங்க கலாச்சாரம் எனக்குத் தெரியாது. நீங்க பார்த்துக்கோங்க'னு சொல்லிட்டாங்க." என்றார்.

Naga Interview

தொடர்ந்து பேசிய அபிஷேக், "நான் ரீமேக்லாம் பண்றதுக்கு முன்னாடியே 'பஞ்சாயத்' வெப் சீரிஸ் பார்த்துட்டேன். நான் அந்த சீரிஸுக்கு பெரிய ஃபேன். இதோட ரீமேக்ல முதன்மை கதாபாத்திரத்துல நடிக்கிறதுக்குக் கேட்டபோது எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு. பெரியளவுல வரவேற்பைப் பெற்ற ஒரு சீரிஸோட ரீமேக்ல நடிக்கிறது கொஞ்சம் பிரஷரான விஷயம். இருந்தாலும் இந்த வாய்ப்பைத் தவறவிட்டுடக் கூடாது. அதுனால கண்ணமூடிட்டு இந்த சீரிஸ்ல நடிக்க ஓகே சொல்லிட்டேன்.

நல்ல முடிவைத்தான் அப்போ எடுத்துருக்கேன்னு இப்போ ஃபீல் பண்றேன். இதுமட்டுமல்ல சீரிஸ்ல சேத்தன் சார், தேவதர்ஷினி மேம்லாம் இருக்காங்க. அவங்கிட்ட இருந்து இந்த சீரிஸ்ல நடிக்கும்போது பல விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. எனக்கு கிராமம் சார்ந்த அனுபவங்கள் எதுவுமே கிடையாது. முழுக்க முழுக்க சிட்டியில வளர்ந்த பையன் நான். இந்த கதையும் அப்படிதான். நான் எதுவுமே பண்ணல. இந்த சீரிஸ்ல அந்த கிராமத்துக்குப் போய் நான் அனுபவிச்ச விஷயங்களைத்தான் படமாகப் பண்ணியிருக்காங்க." என்றார்.

Abishek

'மர்மதேசம்' தொடருக்குப் பிறகு சேத்தனும், தேவதர்ஷினியும் சேர்ந்து இயக்குநர் நாகா இயக்கத்தில் இந்த சீரிஸில் நடித்திருக்கிறார்கள். இந்த சீரிஸ் பற்றி விவரிக்க தொடங்கிய தேவதர்ஷினி, "பஞ்சாயத் சீரிஸின் ரசிகராக ரீமேக் பத்தி கேட்கும்போது கொஞ்சம் ஷாக்கிங்காகத்தான் இருந்திருக்கும். அபிஷேக் சொன்ன மாதிரி அதை ரீமேக் பண்றது ஒரு முக்கியமான பொறுப்பும்கூட. ஆனா, நாகா சார் இந்த சீரிஸை ரீமேக் பண்ணும்போது 'அடிச்சு தூள் கிளப்பிடலாம்'னு தோனுச்சு." எனக் கூறினார்.

இறுதியாக இந்த சீரிஸ் தொடர்பாகப் பேசிய நடிகர் சேத்தன், "ஒரு நாள் திடீர்னு நாகா சார் கால் பண்ணிக் கூப்பிட்டாங்க. நானும் தேவதர்ஷினியும் போய் மீட் பண்ணினோம். நாங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே 'பஞ்சாயத்' சீரிஸை பார்த்துட்டு அடுத்த சீசன் எப்போ வரும்னு காத்திட்டிருக்கோம். அந்த நேரத்துல நாகா சார் அதே சீரிஸோட ரீமேக்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. கொஞ்சம் பொறுப்பாக இந்த ரீமேக்கை கையாளணும். ஏன்னா, அது இந்தில ஒரு பெரிய ஹிட்டான வெப் சீரிஸ் அதை நம்ம ரீமேக் பண்ணும்போது எதாவது சரியாக வரலைனா எல்லோரும் 'இது தேவையா?'னு திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா, இந்த சீரிஸை இயக்குறது நாகா சார் ஆச்சே.

Chetan & Devadharshini

உடனடியாக ஓகே சொல்லிட்டோம். 'மர்மதேசம்' தொடர்ல இவருடைய இயக்கத்துல நடிக்கும்போது நான் சில படங்கள் பண்ணியிருந்தேன். அந்த தொடர்ல நடிக்க போகும்போது பழைய விஷயங்கள் எல்லாத்தையும் அழிச்சுட்டு புதுசா ஒன்னு நாகா சார் சொல்லிக் கொடுத்தாரு. அந்த தொடருக்குப் பிறகு சில டேக்ல நடிச்சு முடிச்சிடுவேன். ஆனா இப்போ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்குற மாதிரி இந்த சீரிஸ்ல 20 டேக் வாங்கினேன்" எனப் பேசி முடித்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



from Vikatan Latest news https://ift.tt/PQ1oItC

Post a Comment

0 Comments