இந்தியப் பங்குச் சந்தைகளின் அட்டகாசமான ஏற்றம் தந்த உற்சாகம் காரணமாக பங்குச் சந்தையில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்ட் மூலமும் அதிகமான முதலீடுகளை பலரும் செய்துவருகிறார்கள். அதிகரித்துவரும் டீமேட் கணக்குகளும், எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகளுமே இதற்குச் சான்று. ஆனால், தொடர்ச்சியாகப் பல புதிய வரலாற்று உச்சங்களைப் பதிவு செய்து, உற்சாகத்துடன் பண்டிகைக் காலங்களை எதிர்நோக்கி காத்திருந்த பங்குச் சந்தை, திடீரென்று இறக்கம் காண ஆரம்பித்திருப்பது, பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.
செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி, அடுத்த 6 வர்த்தக தினங்களிலும் சந்தையில் ரத்த சிவப்பு நிறம். சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் 4% வரை சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு. இதற்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளிலிருந்து, அக்டோபரில் முதல் 5 வர்த்தக நாள்களில் ரூ.44,742 கோடி முதலீட்டை விற்றிருப்பதே முக்கிய காரணம்.
சந்தை இப்படி தள்ளாடுவதற்கு பல காரணங்களைக் கணிக்கிறார்கள் சந்தை நிபுணர்கள். சீனப் பொருளாதாரத்தில் பாசிட்டிவ் முன்னேற்றங்கள் தெரிவதால் முதலீடுகள் மீண்டும் அந்தப் பக்கம் திரும்பக்கூடும் என்ற எதிர்பார்ப்பு; இஸ்ரேல்-இரான் போர் கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கத்தை உண்டாக்கி இந்தியாவைப் பாதிக்கக்கூடும் என்ற பேச்சு; அமெரிக்கா, எதிர்பாராத அளவுக்கு வட்டிவிகிதத்தைக் குறைத்த நிலையில், அந்தளவுக்கு குறைக்க முடியாமல் திணறும் இந்திய ரிசர்வ் வங்கி; நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் செப்டம்பர் காலாண்டில் எப்படி இருக்குமோ என்கிற சந்தேகம்; இந்தியப் பங்குச் சந்தைகள் உச்சபட்ச மதிப்பீட்டில் வர்த்தகமாவதால், ‘எக்ஸ்பென்சிவ்’ என்கிற நிலையில் வைத்துப் பார்க்கப்படுவது.
இப்படி பல காரணங்கள் சந்தைக்கு எதிராக இருந்தாலும், வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு வெளியேறினாலும், உள்நாட்டு நிறுவன முதலீடுகள் சந்தையில் முதலீட்டைக் குவித்துவருவதை கவனிக்க வேண்டும். 5 வர்த்தக நாள்களில் ரூ.1,03,434 கோடியை இவை குவித்துள்ளன. அதேசமயம், ரூ.56,760 கோடி முதலீட்டை விற்றுள்ளனர். அதாவது, வெளியே எடுத்த லாபத்தையும், புதிதாக ரூ.46,000 கோடியையும் முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தையில் லாபம் பார்க்க... குறைந்த விலையில் வாங்க வேண்டும், அதிக விலையில் விற்க வேண்டும். ஆனால், பலரும் இறக்கம் அடையும்போது பீதியில் விற்பதும், மேற்கொண்டு முதலீடு செய்யாமல் இருப்பதும்தான் நடக்கிறது. உண்மையில், இதுபோன்ற இறக்கங்களில்தான் தரமான பங்குகள் நியாயமான விலைக்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகும். அப்போது புதிதாக முதலீடுகளை மேற்கொள்வதும், மதிப்பு அதிகமாக உள்ள பங்குகளிலிருந்து வெளியேறி, மதிப்பு குறைவாக உள்ள பங்குகளுக்கு முதலீட்டை மாற்றுவதும்தான் புத்திசாலித்தனம்.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இதைத்தான் எப்போதும் செய்கின்றன. சிறு முதலீட்டாளர்களும் இந்தப் போக்கை கடைப்பிடிக்கும்போது, நீண்டகாலத்தில் வெற்றியே! இறக்கத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல், புத்திசாலித்தனமாகச் சிந்தித்துச் செயல்படுவதே எப்போதும் சிறந்தது.
- ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/LYmSMfq
0 Comments