"நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி வழக்கில் இணைக்கவில்லையென்றால் உள்துறைச்செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனத்துக்கு, கமலக்கண்ணன், கபில், வீரசக்தி உள்ளிட்ட பலர் இயக்குநர்களாக செயல்பட்டனர். மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன.
தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி மக்களிடமிருந்து முதலீடுகளை பெற்றுள்ளனர். பல ஆயிம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பெற்றவர்கள், கூறியபடி யாருக்கும் வட்டியும் முதலையும் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மதுரை பொருளாதாரப்பிரிவு காவல்துறையினர் மதுரையைச் சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளனர்.
இந்த நிலையில் நியோமேக்ஸ் மோசடி வழக்கில் ஜாமீன் பெறப்பட்ட நிர்வாகிகள் சார்லஸ் மற்றும் இளையராஜா ஆகியோருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஜெயின்குமார் உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில்வேலு என்பவர் முன் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது, "இந்த வழக்கில் இதுவரை எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை நபர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்? வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என அரசு தரப்பினரிடன் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தரப்பில், "இந்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துகள் கண்டறியப்பட்டு அதனை வழக்கில் இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறை செயலாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனவே மேலும் கால அவகாசம் வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்பொழுது, "இந்த வழக்கில் என்னதான் நடக்கிறது? இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்? பொதுமக்களிடம் பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பிய நீதிபதி, "சொத்துக்களை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு கால தாமதமாக காரணம் என்ன? இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. வரும் 19-ம் தேதிக்குள் நியோமேக்ஸ் சொத்துகளை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
from Vikatan Latest news https://ift.tt/oPkvTIi
0 Comments