மீண்டும், ஒரு நடிகையின் தனிப்பட்ட வீடியோ... யாரோ ஒரு/சில வக்கிர ஜென்மங்கள் மூலம் இணையவெளியில் பகிரப்பட்டுள்ளது. இது ஒரு சைபர் க்ரைம் குற்றம். பகிர்வது மட்டுமல்ல, பார்ப்பதும்கூட குற்றமே. அப்படியிருந்தும், சம்பந்தப்பட்ட வீடியோவுக்காக சமூக வலைதளங்களில் அலைந்த ஆண்களின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. அதில் முற்போக்கு பேசியவர்கள், புரட்சி பேசியவர்கள், பாலியல் சமத்துவம் பேசியவர்கள் எனப் பலரும் அடக்கம் என்பது கூடுதல் வேதனையே.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலை, நாட்டையே உலுக்கியது. ஆனால், அதே நாள்களில் கொலையான பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு ‘ரேப் வீடியோ’, `ரேப் பார்ன்’ என்று கூகுள் தேடுதல்களை (Searches) உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்கள், ஆபாச தளங்களில் அந்தப் பெண்ணின் பெயரில் 3,000 தேடுதல்கள் செய்தவர்கள்... என ‘இவர்களெல்லாம் மனித ஜென்மங்கள்தானா?’ என்று மிரளவைத்தனர்.
இதுபோன்ற காட்சிகள்... ‘பெண் என்பவள், இந்த ஆணாதிக்கச் சமூகத்துக்குப் பாலியல் பண்டம் என்பதைத் தவிர வேறில்லை’ என்பதையே மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
சம்பந்தப்பட்ட நடிகை, அந்த வீடியோ பற்றி, அவருடைய சமூக வலைதளத்தில், அவரிடமே கேட்டவர்களை கூலாகவே எதிர்கொண்டிருக்கிறார். `வக்கிர மனம் கொண்டவர்களால் திருட்டுத்தனமாகப் பகிரப்பட்ட அந்த வீடியோவுக்கு நான் அவமானப்பட ஒன்றுமில்லை’ என்ற தொனியே அவருடைய பதில்களில் தெறித்தது. பெண்ணலச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் இதைத்தான்.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், ஜவுளிக்கடைகளின் டிரையல் ரூம் முதல் ஹோட்டல்கள் வரை `ஹிடன் கேமரா’ ஆபத்து நிறைந்தே இருக்கிறது. சந்தேகத்துக்கு உரிய இடங்களில் நாம் இரட்டை கவனம் கொள்ள வேண்டும். அதையும் மீறி தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டால், அது நம்முடைய தவறில்லை என்கிற உறுதியுடன் எதிர்த்து நிற்க வேண்டும். ‘இதில் அவமானப்பட வேண்டியவர் சம்பந்தப்பட்ட குற்றவாளியே’ என்கிற உணர்தலுடன் சட்டப் போராட்டத்தைத் துவக்கவும் வேண்டும்.
மெய் போலவே பொய்கள் உலவவிடப்படும் `டீப்ஃபேக்' (Deepfake) காலம் இது. சென்ற ஆண்டு அப்படி ஒரு வீடியோவால் பாதிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவை, தற்போது தனது தேசிய தூதர் ஆக்கியிருக்கும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் அதன்மூலம் சொல்லும் செய்தி, `பாதிக்கப்பட்ட பெண்கள் தலைநிமிர்ந்து நடங்கள்’ என்பதை மட்டுமே!
இன்னொரு பக்கம், நம்முடைய பிரைவேட் புகைப்படங்கள், வீடியோக்களை நம்முடைய மொபைல் கேலரியில் வைப்பது, `என்னவர்’ என்று நினைத்து ஷேர் செய்வது போன்றவற்றில் நாம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தோழிகளே... பாலியல் சீழ்ப்பிடித்த இச்சமூகத்திடம் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வோம். புகைப்பட, வீடியோ சைபர் குற்றங்களை துணிவுடன் எதிர் கொள்வோம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/gwTxho9
0 Comments