ஒன் பை டூ: “மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க-வினர் செல்லவில்லை...”

சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“உளறுகிறார் அமைச்சர். மழையால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்கள். இப்போது, `பாதிக்கப்பட்ட மக்கள்’ என்று அமைச்சரே சொல்கிறார். இதிலிருந்தே தி.மு.க பொய் பேசுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கோவை, மதுரையில் ஒரு நாள் மழைக்கே மொத்த ஊரும் வெள்ளக் காடானது. அங்கு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வருவதற்கு முன்பாகவே களத்தில் மக்களுக்கு உதவியாக நின்றது அ.தி.மு.க-வினர்தான். எங்கள் தலைவர் எடப்பாடியார் நிவாரணம் கொடுத்ததையும், மீட்புப்பணிகளை ஆய்வு செய்ததையும் அமைச்சர் சேகர் பாபு செய்தித்தாள்களில் படிக்கவில்லையா அல்லது தெரியாததுபோல் நடிக்கிறாரா என்று தெரியவில்லை. சென்னையைப் பொறுத்தவரை பெய்வதாகச் சொல்லப்பட்ட மழை, பெய்யவில்லை. அப்படியிருந்தும், ஒரு நாள் மழைக்கே முதல்வரின் கொளத்தூர் தொகுதி தொடங்கி பல பகுதிகளும் தண்ணீரில் மூழ்கிப்போயின. கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை யாரும் இல்லாத நேரத்தில், மக்களுடன் இருந்தது அ.தி.மு.க-வினர் மட்டுமே. எனவே, விளம்பரம் செய்து ஆட்சி நடத்தும் தி.மு.க எங்களைக் குறை சொல்வது அபத்தமானது!”

கலை கதிரவன்

கலை கதிரவன், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர், தி.மு.க

“அமைச்சர் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிக்கு, சொந்தக் கட்சிப் பிரச்னையைச் சரிசெய்யவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் மக்களை எங்கே வந்து பார்ப்பது... அவர்கள் ஆட்சியின்போது, 2015-ல் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிப்போனது. அப்போது சென்னையிலிருந்த அம்மையார் ஜெயலலிதா, இரண்டு நாள்களுக்குப் பின்னர்தானே வந்து பார்த்தார்... கஜா புயல் சமயத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை ஐந்து நாள்களுக்குப் பிறகுதானே எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்... இப்போது எப்படி அவர்கள் மக்களைச் சந்திப்பார்கள்... ஆனால் திராவிட மாடல் ஆட்சியில், மழை வருவதற்கு முன்பாகவே முதல்வர் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவருமே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உறுதிசெய்தனர். நமது முதல்வர், கொட்டும் மழையிலும் களத்தில் இருந்தார். அதேபோல, நமது துணை முதல்வரோ மழை தொடங்குவதற்கு முன்பிருந்தே... கிட்டத்தட்ட 72 மணி நேரம் இரவு, பகல் பாராமல் சென்னை முழுவதும் தொடர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில், தி.மு.க-வைக் குறை சொல்ல அ.தி.மு.க-வுக்குக் கடுகளவுகூட அருகதை இல்லை!”



from Vikatan Latest news https://ift.tt/EJup0hk

Post a Comment

0 Comments