ஒரு வழியாக மத்திய அரசாங்கம் தூங்கி விழித்திருக்கிறது. ஆம், ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம், ஆன்லைன் கொள்ளையர்களால் சுருட்டப்பட்டுக் கொண்டிருக்க, பறிகொடுத்த மக்களின் கதறல்கள், அரசாங்கத்தின் காதுகளைச் சென்று சேரவே இல்லை. முதல் தடவையாக... மோசடி பேர்வழிகளின் 4.5 லட்சம் வங்கிக் கணக்குகள், தற்போது முடக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில், கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேலான ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. ஏறக்குறைய 17,000 கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் தொடர்வதை நீண்டகாலமாகவே கண்டுகொள்ளாமல்தான் இருந்தது மத்திய அரசு. ஆனால், அரசியல் ரீதியிலும் இது அதிர்வலைகளைக் கிளப்பவே, பிரதமர் அலுவலகமே தலையிட வேண்டியதாகிவிட்டது.
களத்தில் இறங்கிய இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்புக் குழு, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுபவர்கள், கொள்ளயைடித்த பணத்தை, சம்பந்தமில்லாத நபர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, நிர்வகிப்பதைக் கண்டறிந்தது. பெரும்பான்மையான வங்கிக் கணக்குகள், பொதுத்துறை வங்கி களில் தொடங்கப்பட்டவையே. பாரத ஸ்டேட் வங்கியில் 40,000 கணக்குகள், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10,000 கணக்குகள், கனரா வங்கியில் 7,000 கணக்குகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் மொத்தமாக 11,000 கணக்குகள் எனக் கண்டறிந்து முடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை... நம்பிக்கை இழந்து கிடக்கும் மக்களுக்கு, ஒளியூட்டும் நடவடிக்கையே. ஆனால், இது மட்டுமே போதுமா?
டிஜிட்டல், தொலைத்தொடர்பு, வங்கி உள்ளிட்ட சேவைகள் எல்லாமே ஆதார் மயமாக்கப்பட்டு, கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தவறிழைப்பவர்கள் எளிதாக சிக்கும் வகையிலேயே தொழில்நுட்ப வலைப்பின்னல் மற்றும் அரசாங்கத்தின் கண்காணிப்புகள் உள்ளன. ஆனாலும், இவற்றைப் பயன்படுத்தியே மோசடிகளும் முறைகேடுகளும் நடக்கின்றன என்றால்..?
வங்கிக் கணக்குகள் முறைகேடான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் போது வங்கி நிர்வாகமும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்; பல்வேறு மொபைல் எண்களைப் பயன்படுத்தி, மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஏன் தடுக்க முடிவதில்லை; நிதி அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம், மோசடித் தடுப்பு காவல் அமைப்புகள் இவை யெல்லாம் என்னதான் செய்துகொண்டிருக்கின்றன, மோசடி பேர்வழிகளுடன் அனைவருமே கூட்டணி போட்டுச் செயல்படுகிறார்களா என்பது போன்ற கேள்விகள் இயல்பாகவே எழத்தானே செய்யும்.
காலதாமதமாக ஆரம்பித்திருந்தாலும், வங்கிக் கணக்கு முடக்கம் என்பது ஆக்கபூர்வமான நடவடிக்கையே. ஆனால், முழுமையான நடவடிக்கை அல்ல. ‘இனி ஒரு ரூபாயைக்கூட மோசடி கும்பலிடம் யாரும் இழந்துவிடக் கூடாது’ என்பதையே இலக்காக்கிக்கொண்டு மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்!
from Vikatan Latest news https://ift.tt/j3Fq6mZ
0 Comments