முடவன் முழுக்கு: கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா' என்கிற வழக்கு இவ்வூருக்கே உரித்தான சிறப்பு அல்லவா?
நமது புண்ணிய பாரத தேசத்தில் புண்ணிய நீர்நிலைகளில் புனித நீராடி, அவற்றின் கரைகளில் இறையை வழிபடுவது என்பது இந்துக்களின் இன்றியமையாத கடமையாகச் சொல்லப் பெற்றிருக்கிறது.
புண்ணிய தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவதினால் விளையும் அதீத நற்பலன்களைப் பற்றி புராணங்கள் விளக்கிக் கூறுகின்றன. நீர்நிலைகளைப் போற்றி வழிபடுவதினால் அவற்றில் வசிக்கும் தேவதைகள் திருப்தி அடைகின்றார்கள். நீர்நிலைக் கரைகளில் செய்யப்பெறும் வழிபாட்டினை பித்ருக்களாகிய முன்னோர்கள் விருப்புடன் ஏற்றுத் தமது சந்ததிகளை ஆசிர்வதிக்கிறார்கள்.
புனித நீராடலை நமது முன்னோர்கள் பருவகாலங்களுக்கு
மலைகள் மணற்குன்றுகளில் உள்ள சுனைகளில் கார்த்திகை மாதத்திலும்; ஆறுகளில் ஐப்பசி மாதத்திலும்; குளங்கள்/ஏரிகளில் மார்கழியிலும்; நீரூற்றுகளில் தை மாதத்திலும்; சமுத்திரங்களில் மாசி மாதத்திலும் நீராட வேண்டும் என்பது சாஸ்திரம்.
சுற்றுப்புற மண்டலத்தில் உள்ள நன்மை தரும் நேர்மறை அதிர்வுகள் நம் உடலில் பட்டு ஈர்க்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிட்ட காலகட்டங்களை இத்தகு புனிதநீராடல்களுக்கு உகந்தவைகளாக ஏற்படுத்தி வைத்தனர் நம் முன்னோர்கள்.
ஐப்பசி மாதத்தில் சூரிய பகவான் துலாராசியில் பலம் குறைந்த நிலையில் சஞ்சரிப்பதும்; பலம் பெற்ற நிலையில் சந்திரன் உலவுவதும் ஜோதிடவியல் கூற்று. வானியல்படி, வெப்பம் மற்றும் பகல்பொழுது குறைவாகவும்; மழை மற்றும் இரவு நேரம் மிகுதியாகவும் அமைகிற இக்கால நிலையில்
அதிகாலைக் குளியல் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்.
இவற்றையொட்டியே தீபாவளி, துலா ஸ்நாநம் முதலான விசேஷாதிகள் இம்மாதத்தில் அமைவது சிந்திக்கத் தக்கது.
இவ்வகையில் துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் ஆற்றில் நீராடுதல் விசேஷம். மயிலாடுதுறையில் காவிரி துலா ஸ்நாநம் என்கிற ஐப்பசி நீராடல் பெருவிழா ஆண்டுதோறும் நிகழ்த்தப்பெறுவது மரபாக உள்ளது.
காவிரியில் துலா ஸ்நாநம் செய்வது கங்கா ஸ்நாநம் செய்வதற்கு ஒப்பானது என்பர்.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு நிகரான புண்ணியம் தருபவை. அவை,
திரு மயிலாடுதுறை
திரு ஐயாறு
திரு வெண்காடு
திரு இடைமருதூர்
திரு வாஞ்சியம்
திரு சாய்க்காடு
இந்த ஆறு தலங்களில் மிகுந்த சிறப்புடையது மாயூரம் எனப்பெறும் மயிலாடுதுறை. காசியில் கங்கை விசேஷம். மயூரத்தில் காவிரி விசேஷம்.
ஸ்ரீ காசி விஸ்வநாதரே தமது பரிவாரங்களுடன் துலா ஸ்நாநம் செய்வதற்காக இம்மாதம் முழுவதும் மாயூரத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். மாயூரத்தைச் சுற்றி ஐந்து விஸ்வநாதர் ஆலயங்கள் உள்ளமையே இதற்கு அத்தாட்சி.
ஐப்பசி மாதம் முழுவதுமே தினந்தோறும் சிவபெருமான் தமது பரிவாரங்களுடன் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிப்பதாக நம்பிக்கை. இம்மாதம் முழுவதுமே விதவிதமான வாகனங்களில் அனைத்து ஆலயங்களிலிருந்தும் சிவபரிவாரங்கள் வீதியுலா காண்பது மயூரத்திற்கே உரிய சிறப்பான வழமை.
துலா மாதத்தில் நீராடுவதற்காக உள்ள காவிரித் துறைக்குத்
'துலாக்கட்டம்' என்று பெயர். தற்காலத்தில் துலா கட்டம் என்பது 'லாகடம்' என அளவிற் சுருங்கி வழங்குகிறது.
மாதக் கடைசி தினத்தில் தீர்த்தவாரியுடன் இப்பெருவிழா பூர்த்தி அடைகிறது. கடைமுழுக்கு என்று இதனை அழைக்கின்றனர்.
தவிர, இன்னொரு காரணமும் உண்டு. காவிரி கடலில் கலக்கும் இடத்திற்கு (பூம்புகாருக்கு) முந்தையதாக உள்ள கடைசி புனித நீராடலுக்கு உரிய இடம் மயிலாடுதுறை தான். எனவே இங்கு செய்யப்பெறும் துலா ஸ்நாநம் சிறப்பானதாக கடைமுழுக்கு என்கிற வகையில் போற்றப்பெறுகின்றது.
சிவபக்தியில் சிறந்த முடவன் ஒருவன் துலா ஸ்நானம் செய்வதற்காக மயூரத்திற்கு புறப்பட்டான். பல இடையூறுகளைத் தாண்டி அவன் ஊரை அடைவதற்கு முன் கடைமுழுக்கு முடிந்து, கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. மனம் வருந்தியவனைக் கண்டு இரங்கி காட்சியருளிய சிவபெருமான் கார்த்திகை முதல் தினமான அன்று காவிரியில் மூழ்கி நீராடிய அவனுக்கு ஐப்பசி மாதம் முழுவதும் முழுகிய பலனை அளித்தருளினார். மனம் மகிழ்ந்த முடவனும் தன்னைப்போன்றே ஏதெனும் இடர்ப்பாடுகளால் ஐப்பசியில் நீராடத் தவறி, கார்த்திகை முதல்தினத்தில் முழுகி நீராடுவோர் எவராயினும் அவர்களுக்கும் இவ்விதமே அருள வேண்டும் என பிரார்த்தித்தான்.
பெருமானும் அப்படியே ஏற்று அருளினார். இந்நிகழ்வினைப் போற்றும் விதமாக இன்றளவும் கார்த்திகை மாதத்து முதல் தினமும் முடவன்முழுக்கு என்ற பெயரால் இங்கு போற்றப் பெறுகிறது.
கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா' என்கிற வழக்கு இவ்வூருக்கே உரித்தான சிறப்பு அல்லவா?!
from Vikatan Latest news https://ift.tt/Pz19ijy
0 Comments