ஒன் பை டூ

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் பிரதமர். இந்திய எல்லையில் நடந்த அத்தனை ஆக்கிரமிப்புகளுமே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்தவை. ‘ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி’ உருவாகக் காரணமே நேருதான். அந்தப் பகுதிகளை மீட்க வாய்ப்பு கிடைத்தும், அதைத் தவறவிட்டது இந்திரா காந்தி அரசு. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் கார்கில் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்ததுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்கவும் தொடர்ந்து முயன்றுவருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்திய - சீன எல்லைகளில் நம் வீரர்களுக்கு எந்த ஓர் அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு அந்தப் பகுதியில் சாலை வசதி, பாலங்கள், ராணுவத் தளங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. நாட்டைப் பாதுகாக்கத் தேவையான ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் இறக்குமதி செய்த காலம் போய், போர்க் கப்பல், விமானம் முதல் அனைத்தையும் இந்தியாவிலேயே உற்பத்திசெய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாட்டை உயர்த்தியவர் பிரதமர் மோடி. ஆக்கிரமிப்பு எங்குமே இல்லை என்பதைப் பலமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. இருந்தபோதிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்கிறது காங்கிரஸ்!”

கரு.நாகராஜன், இனியன் ராபர்ட்

இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

“வழக்கம்போல், பொய் பேசியிருக்கிறார் பிரதமர். இந்தியாவிலிருந்து 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை, சீன ராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த ரோந்துப் பகுதிகள்கூட சீனாவின் வசம் சென்றுவிட்டன. சீன ஆக்கிரமிப்பு எல்லை மீறிப் போனதால்தான், ‘இந்தியாவின் இமயமலை எல்லையை, சீனா ஆக்கிரமிக்க முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது’ என்று சீனாவுக்கான அமெரிக்கத் தூதரகச் செயலாளரே வெளிப்படையாகக் கண்டித்திருக்கிறார். ஆனால், நம் பிரதமரோ சீனாவைக் கண்டிக்காமல், எதுவுமே நடக்காததுபோலப் பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியப் பகுதிகளில் சீனா ராணுவத் தளத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி, அங்கு ஒரு கிராமத்தையே கட்டியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அருணாசலப்பிரதேச மாநிலத்தின் 30 இடங்களுக்கு, சீனா தன்னிச்சையாகப் பெயர் மாற்றம் செய்திருக்கிறது. லடாக்கில் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை வெளியானது. ‘ஆக்கிரமிப்பு தொடர்பாக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் லட்சணம் இருக்கிறது. ஆக்கிரமிப்பு விவகாரத்தில், பா.ஜ.க-வின் முத்திரை எப்போதோ கிழிந்துவிட்டது. இனியும் பொய் சொல்லி, மக்களை ஏமாற்ற முடியாது!”



from Vikatan Latest news https://ift.tt/0YUM5x8

Post a Comment

0 Comments