சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடர் பாகிஸ்தானால் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் நடைபெறும் எந்த போட்டியிலும் பங்கேற்பதில்லை என்பதால் இந்தியா தொடரில் விளையாடுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில், பாகிஸ்தானில் இந்தியா விளையாடாது என தெரிவித்தது. இதன் காரணமாக போட்டி அட்டவனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பொதுவாகவே, ஐசிசி தொடர்களின் போது போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் தொடரை நடத்தும் நாடுகள், தங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ‘டிராபி டூர்’ நடத்தப்படுவது வழக்கம்.
அதே போல, இன்று ட்ராபி டூர் இஸ்லாமாபத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க இருப்பதாக தெரிவித்தது பாகிஸ்தான். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த ட்ராஃபி டூர் இடங்களில் ஸ்கார்டு, முர்ரி, ஹன்சா உள்ளிட்ட பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளன.
இந்த விவகாரத்தை பிசிசிஐ ஐசிசி பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐசிசியின் உயர்மட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு தனது கண்டத்தை தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கோப்பை சுற்றுப்பயணம் நடத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஐசிசி அதிகாரி ஒருவர், ``எந்தவொரு சர்ச்சைக்குரிய பிராந்தியத்திற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோப்பையை எடுத்துச் செல்ல ஐசிசி அனுமதிக்காது” என தெரிவித்தது. மேலும் ட்ராபி டூர் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இன்னும் இடங்கள் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் என்பது டாப் 8 கிரிக்கெட் அணிகள் விளையாடும் தொடராகும். 2025ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகளுக்காக கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்களை தரம் உயர்த்த 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்த மூன்று மைதாங்கள்தான் போட்டி நடைபெறும் முக்கியத் தளங்களாக இருக்கப்போகின்றன.
2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில்லை. கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களைத் தவிர இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிரெதிராக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.
2023ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் போட்டிகள் ஹைப்ரீட் முறையில் இலங்கையில் நடைபெற்றன. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரீட் முறை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை எதுவும் பேசவில்லை. இதனால் முன்னதே கூறியதுபோல இந்தியா விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று ஒரு தரப்பும் செல்லக் கூடாது என்று ஒரு தரப்பும் விவாதித்துவருகின்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/KxmVLva
0 Comments