சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி ஒருவரை, நடைபாதை பிரியாணிக் கடை வியாபாரியான 37 வயது ஞானசேகரன் வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்திருப்பது... பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகக் காவல்துறையோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அத்தனை விவரங்களும் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பொதுவெளியில் கசியவிட்டு, ‘இனிமேல் யாராவது புகார் கொடுக்க முன்வருவீர்களா?’ என்று பெண்களை மிரண்டுபோகச் செய்துள்ளது.
திருட்டு, வழிப்பறி என ஏற்கெனவே 20 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிதான் ஞானசேகரன். அத்துடன், `ஏற்கெனவே பாலியல் வழக்குகளில் தொடர்புள்ளவர்', `ஆளும் கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்’ என்றபடி அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ‘அவர் ஒருவர் மட்டுமே குற்றவாளி’ என்று அவசரமாக மறுக்கிறது காவல்துறை.
பாதிக்கப்பட்ட பெண், “அந்த நபர், ‘சார்’ என்று யாரோ ஒருவரிடம் போனில் பேசினார்’’ என்று குறிப்பிட்டிருந்த நிலையில், ‘யார் அந்த இரண்டாம் நபர்?’ என்கிற கேள்வி, சந்தேகங்களை மேலும் தீவிரமாக்குகிறது. இதற்கு, ``மாணவியை மிரட்டுவதற்காக, ‘சார்’ என்று யாரிடமோ பேசுவதுபோல ஞானசேகரன் பாவனை செய்துள்ளார்’’ என்று காவல் துறை சொல்லியிருக்கும் பதில், நம்பும்படியாகவே இல்லை.
இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலியல் வன்கொடுமை புகார் பதிவு செய்யப்படுவதாக, 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு தரவு தெரிவிக்கிறது. இப்போது அது இன்னும் அதிகரித்திருக்கும். இச்சூழலில், மாநில தலைநகரில், தலையாய கல்வி நிலையத்தில் நடத்தப்பட்டிருக்கும் இக்குற்றத்திலேயே காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலேயே இருக்கின்றன. அப்படியென்றால், சிறு நகரங்களில், குக்கிராமங்களில் நடக்கும் குற்றங்களின் நிலை?
ராஜபாளையம், தெற்கு காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான மோகன்ராஜ், காவல் நிலையத்தில் இரவுப் பணியிலிருந்த பெண் காவலருக்கு, மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இடமாற்றம் மட்டுமே மோகன்ராஜுக்குத் தண்டனை. இந்தச் செய்தி பற்றி பலர் அறியாமல் இருக்கலாம். ஆனால், நாம் அறிய வேண்டியது... கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர், மருத்துவர், பேராசிரியர், காவலர், மருத்துவமனையிலேயே, கல்விக்கூடத்திலேயே, காவல்நிலையத்திலேயே... இப்படித்தான் இருக்கிறது பெண்களின் பாதுகாப்பு.
தீர்வுகளை இன்னும் இன்னும் தீவிரமாக யோசிக்க வேண்டிய அரசோ, எரியும் தீயில் எண்ணெயைத்தானே ஊற்றி வருகிறது? மதுவையும், போதைப்பொருள்களையும் பெருக்குவது முதல், குற்றவாளிகளுடன் காவல்துறை, அரசியல்வாதிகள் கூட்டு வரை... பெண்களின் பாதுகாப்பை இன்னும் இன்னும் பலவீனமாக்கியே வருகிறது.
போராட்டக் களம் காண்பது; களமாடுபவர்களுக்கு நேரடியாகத் தோள்கொடுப்பது; போர்த்தீ அணையாமல் இருக்க ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பது... என சமரசமற்ற நீதி சமர் செய்வது ஒன்று தான் தீர்வு.
போராடிக்கொண்டே இருப்போம் தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/sz3amLZ
0 Comments